Friday, January 18, 2013

ஏழைகளின் தன்மானம்....

ஏழைகளின் தன்மானம் என்ன 
கிள்ளுக்கீரையா ?

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

சுமையா பேகம்….
+2 தேர்வில் ஆயிரத்திற்கும் அதிகமாக மதிப்பெண்களை எடுத்து பள்ளிக்கூடத்திலேயே முதலாவதாக வந்து, தேர்ச்சி பெற்ற இஸ்லாமிய மாணவி…

ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த இந்த மாணவியின் தந்தை, சிறு தொழில் செய்து வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கிறார்.
படிப்பில் ஆர்வம்… இஸ்லாமிய ஒழுக்கம்… இப்படி அனைத்திலும் துடிப்புடன் இருக்கும் மகள் சுமையாவை, மேல்படிப்பில் சேர்க்க அவளது, அப்பாவுக்கு ஆசைதான்…

ஆனால், கல்வித்துறை, தற்போது வியாபாரமாக மாறிவிட்டதால், டோனேஷன், கல்விக்கட்டணம், என பல லட்சங்களை செலவழிக்க முடியாத நிலை அவருக்கு…

என்ன செய்வது என தெரியாமல், கவலையில் மூழ்கி இருந்தபோது, அவரை பார்க்க வந்த வந்தார் ஒரு சமூக ஆர்வலர்.

சுமையாவின் தந்தைக்கு தைரியம் ஊட்டினார். மகளை மருத்துவப் படிப்பில் சேர்க்க ஆலோசனைகளை கூறினார்.

உள்நாட்டில் மட்டுமல்லா, வெளிநாட்டிலும் நிறைய இஸ்லாமிய அமைப்புகள் உள்ளன… அவையெல்லாம் நன்றாக படிக்கும் இஸ்லாமிய மாணவ மாணவியருக்கு உதவ முன் வருகின்றன என ஆசை வார்த்தை கூறினார். 


அதனால், எப்படியும் கல்வி உதவித் தொகை கிடைத்துவிடும். மகள் சுமையாவை மருத்துவப்படிப்பில் சேர்த்து விடலாம் என்ற ஆசையில் விண்ணப்பமும் வாங்கி வந்தார் அவரது தந்தை…

சமூக ஆர்வலர் அளித்த ஒருசில இஸ்லாமிய அமைப்புகளின் முகவரிகளுக்கு கடிதம் எழுதினார் சுமையாவின் தந்தை…

மகளை எப்படியும் உயர்கல்வியில் சேர்த்துவிட வேண்டும் என்ற ஆவலில் தொடர்ந்து விண்ணப்பங்களை அனுப்பி முயற்சி செய்தார்.

ஆனால், இவையெல்லாம் வீண் வேலை என்பது பிறகுதான், அவருக்கு மெல்ல மெல்ல தெரியவந்தது.

ஆம்…

கல்வி உதவித் தொகை வழங்குவதாக கூறிக் கொள்ளும் ஒருசில இஸ்லாமிய அமைப்புகள், ஏழை மாணவ மாணவியர்களை எந்தளவுக்கு அவமானப்படுத்த முடியுமோ அந்தளவுக்கு அவமானப்படுத்த சிறிதும் தயங்குவதில்லை என்பது சுமையாவின் தந்தைக்கு பின்னர் புரிந்தது.

ஜமாத் சான்றிதழ்… மாணவர்களுக்கு நன்கு பழக்கமானவர்களின் சான்றிதழ்… வீட்டு நிலவரம்… வீட்டில் எத்தனை பேர் இருக்கிறார்கள்… அவர்களின் வருமானம் என்ன… அக்கம்பக்கத்தில் யார் யார் இருக்கிறார்கள்… அவர்களின் நிலை என்ன… இப்படி, பல கேள்விகளை கேட்டு துளைத்துவிடுகின்றன கல்வி உதவித் தொகை வழங்கும் பல இஸ்லாமிய அமைப்புகள்…


கல்லூரியில் சேருவதற்கு முன்பே, கல்லூரியில் சேர்ந்ததற்கான சான்று அளிக்கும்படியும் ஒருசில நேரங்களில் கேட்கப்படுகிறது.

ஒரு ஏழை முஸ்லிம், தன்னுடைய மகளை நன்கு படிக்க வைக்க வேண்டும் என்ற ஆர்வத்தில், யாருக்கும் தெரியாமல் கடன் வாங்க முற்படுகிறார். அல்லது, இஸ்லாமிய அமைப்புகளை நாடுகிறார்.

தான் கடன் வாங்குவதையோ, அல்லது உதவி பெற முயற்சிப்பதையோ யாரும் அறிந்துக் கொள்ளக் கூடாது குறிப்பாக நண்பர்கள், உறவினர்கள் யாருக்கும் தெரிந்துவிடக் கூடாது என்பதில், மிகவும் உஷாராக இருக்கிறார் ஏழை முஸ்லிம் மாணவியின் தந்தை….

ஆனால், இவை பற்றியெல்லாம், சிறிதும் கவலைப்படாமல், கல்வி உதவித் தொகை வழங்குவதாக கூறிக் கொள்ளும் இஸ்லாமிய அமைப்புகள், ஏழை முஸ்லிமின் தன்மானத்தை, கௌரவத்தை சுக்குநூறாக உடைத்து அவமானப்படுத்துகின்றன.


இதனால், ஏழை முஸ்லிம் மாணவ மாணவியர்களின் உயர்கல்வி பெரிதும் பாதிக்கப்படுகிறது.

கல்வி உதவித் தொகை வசதி படைத்த  மாணவர்களுக்கு சென்று சேர்ந்து விடக் கூடாது என்ற நல்ல நோக்கத்தில் இதுபோன்று நடந்து கொள்வதாக இஸ்லாமிய அமைப்புகள் காரணம் கூறுகின்றன..

ஆனால், உண்மையிலேயே, இஸ்லாமிய அமைப்புகளிடம் கல்வி உதவித் தொகை இன்று பெற்றுக் கொண்டிருப்பவர்கள், நல்ல வசதி படைத்த மாணவர்கள்தான்..

இஸ்லாமிய அமைப்புகளின் போக்கிற்கு ஏற்ப, கோல்மால் செய்து எப்படியும் இந்த மாணவர்கள் உதவித் தொகையை பெற்று மிக உயர்ந்து இடத்திற்கு சென்று விடுகின்றனர்.


ஆனால், படிப்பில் ஆர்வம் இருந்தும், சரியான வசதி இல்லாத இஸ்லாமிய மாணவ மாணவியர் சிலர், உண்மையாகவே கல்வி உதவித் தொகை பெறாமல், அல்லது, உதவித் தொகை வழங்குவதாக கூறிக் கொள்ளும் இஸ்லாமிய அமைப்புகளின் போக்கு காரணமாக,  உதவித் தொகை பெற முடியாமல், மேற்படிப்புகளை தொடர்வதில்லை….

மேலே குறிப்பிட்ட மாணவி சுமையா பேகம்,  ஒரு கற்பனை கதாபாத்திரம் இல்லை…

தமிழகம் உட்பட நாட்டின் பல்வேறு இடங்களில் இன்று உண்மையிலேயே நாம் சந்திக்கும் நிஜம்…

மாணவர்களின் மேற்படிப்பிற்காக உதவி செய்கிறோம் என மார்தட்டிக் கொள்ளும் பல இஸ்லாமிய அமைப்புகள் செய்யும் அட்டகாசத்தை அடுக்கினால், நெஞ்சம் எரியும்….

இப்படிதான், வேலூரில் ஒரு இஸ்லாமிய இளைஞர் அமைப்பு உண்டு… உண்மையிலேயே அது செத்து விட்டது என்றே சொல்லலாம்…

இந்த அமைப்பில் உறுப்பினர்களாக பலர் இருந்தாலும், அவர்கள் யாரையும் கலந்து ஆலோசிக்காமல், அதன் செயலாளர் செயல்பட்டு வருகிறார்.

இவர், கல்வி உதவித் தொகை பெற வரும் மாணவர்களை எப்படி அலைக்கழிகிறார் தெரியுமா…

இவரது சொந்த பணம் தருவதாக நினைத்துக் கொண்டு, பல நாட்கள் அலைய வைக்கிறார்…


இன்று வா…. நாளை மாலை 6 மணிக்கு மேல் வரவும்…. நான் இப்போதுதான் அலுவலகத்திற்கு வந்தேன்… பிறகு பார்க்கலாம்… என பல நாட்கள் அலைய வைப்பத்தில் இந்த யோக்கியருக்கு அவ்வளவு ஆனந்தனம்..

உதவித் தொகையை யாரும் பார்க்காமல் வாங்க வேண்டும் என நினைவில் வரும் மாணவ மாணவியர், இந்த இஸ்லாமிய அமைப்பின் செயலாளரின் போக்கும் அவர்  செய்யும் அட்டகாசம் ஆகியவற்றால் நிச்சயம், பலரின் பார்வையில் படவே செய்கின்றனர்.

உறவினர்கள்… நண்பர்கள் என பலர் உதவித் தொகை பெற வரும் மாணவ மாணவியரிடம் என்ன இங்கு வந்திருக்கிறீர்கள் என வினா எழுப்ப வேண்டிய நிலை ஏற்படுகிறது.

இதனால், அவமானத்திற்கு தள்ளப்பட்டு, கல்வி உதவித் தொகையே வேண்டாம் என்ற நிலைக்கு பல இஸ்லாமிய மாணவர்கள் வந்துவிட்டு, உயர்கல்வியையும் தொடர விரும்புவதில்லை.

ஏப்ரல், மே, ஜுன் மாதங்களில் பத்திரிகைகளில் பக்கம் பக்கமாக விளம்பரங்களை வெளியிட்டு கல்வி உதவித் தொகை வழங்குகிறோம்… படிப்பில் ஆர்வம் உள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுக்கும் இஸ்லாமிய அமைப்புகள், உண்மையிலேயே, இஸ்லாமிய மாணவர்களின் கௌரவத்திற்கு வேட்டு வைக்கின்றன.

எந்த அளவுக்கு அவமானப்படுத்த முடியுமோ, அந்தளவுக்கு அவமானப்படுத்துகின்றன…

இது, பல ரூபங்களில் இன்றும் நடந்துக் கொண்டுதான் இருக்கிறது.


பல அவமானங்கள்.,, உள்ளத்தில் அடி….. ஏழ்மையை எள்ளி நகையாடும் போக்கு… ஆகியவற்றையெல்லாம், சகித்துக் கொண்டு, ஒருசில மாணவர்கள், கல்வி உதவித் தொகையை பெறவும் செய்கின்றனர்..

காரணம் எப்படியும் படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என துடிப்புதான்…ஆர்வம்தான்…

இதனால்தான், இஸ்லாமிய அமைப்புகள், மாணவர்களின் ஏழ்மையை எள்ளி நகையாடுகின்றன.

‘ஒட்டகத்தில் வந்து தர்மம் கேட்டாலும் எந்த கேள்வியும் கேட்காமல் தர்மத்தை அளித்து விடு’ என்கிறது இஸ்லாம்…

ஆனால், இஸ்லாத்தின் பேரில் உதவித் தொகை வழங்குவதாக கூறிக் கொள்ளும் பல இஸ்லாமிய அமைப்புகள், ஏனோ இதை மறந்துவிடுகின்றன.

கல்வியில் ஆர்வம் உள்ள மாணவ மாணவியரை அடையாளம் கொண்டு கௌரவிக்கும் இஸ்லாமிய அமைப்புகள், அவர்களின் உயர்கல்விக்கு நிச்சயம் உதவி செய்ய வேண்டும்..

அதற்கு அவர்கள் செய்ய வேண்டியது, தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களை பெறும் மாணவர்களின் நிலையை ஆராய்ந்து, எந்த கேள்வியும் கேட்காமல், உதவி புரிய முன்வர வேண்டும்.

இதன்மூலம், ஒருசில வசதி படைத்த மாணவர்கள்கூட பலன் அடைந்துவிடக் கூடும்.

அதைப்பற்றி கவலைப்பட கூடாது.  

ஆனால், ஏழை, நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த இஸ்லாமிய மாணவ மாணவியர்களின் தன்மானத்திற்கு, கௌரவத்திற்கு வேட்டு வைப்பதை தவிர்க்க வேண்டும்.

ஜமாத் சான்றிதழ், கல்லூரியில் சேருவதற்கு முன்பே கல்லூரி சான்றிதழ்… சமூகத்தில் நன்கு தெரிந்து இரண்டு பேர்களின் சான்றிதழ்… வீட்டின் முகப்பு போட்டோ என பல கேள்விகளை கேட்பதை இனியும் தவிர்க்க வேண்டும்…

கல்வியில் ஆர்வம் உள்ள இஸ்லாமிய மாணவர்களுக்கு எந்த கேள்வியும் கேட்காமல் உதவி செய்ய முன் வர வேண்டும் இஸ்லாமிய அமைப்புகள்…
அதன்மூலம் மட்டுமே, உண்மையிலேயே ஏழை, நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த இஸ்லாமிய மாணவ மாணவியர் உயர்கல்வியில் ஆர்வம் செலுத்த முடியும்…

சமூதாயத்தில் உண்மையிலேயே கல்வியில் புரட்சியை ஏற்படுத்த முடியும்…

கல்வி உதவித் தொகை வழங்கும் இஸ்லாமிய அமைப்புகள் இனியும் விழித்துக் கொள்வார்களா…
­­­­­­------------------------------------------------

சமரசம் நவம்பர் 1-15 (2012) இதழில் வெளியான கட்டுரைதான் மேலே நீங்கள் படித்தது. வெளியிட்ட சமரசம் இதழின் நிர்வாகிகளுக்கு நன்றி...

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

மணிச்சுடரின் முத்துக்கள்……!


மணிச்சுடரின் முத்துக்கள்……!

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்




வேலூரில் இருந்து பேருந்து மூலம் சென்னை வந்து சேர்ந்தபோது, காலை 10 மணியாகி விட்டது.

பீட்டர்ஸ் சாலையில் இருந்த மணிச்சுடர் அலுவலகத்திற்கு சென்றபோது, மணி 10.30.

மணிச்சுடர் நாளிதழின் நிறுவனரும், ஆசிரியருமான தலைவர் சீராஜுல் மில்லத் அவர்கள், நல்ல வேளையாக அலுவலகத்திற்கு இன்னும் வரவில்லை என அங்கிருந்த ஊழியர்கள் சொன்னபோது, மனம் லேசானது.
11 மணி அளவுக்குதான் ஆசிரியர் வருவார் என்று ஊழியர்கள் சொன்னதால், ,  நானும், என்னுடன் வந்த வேலூர் மாலைமுரசு நாளிதழின் ஆசிரியருமான மசூத் அகமதும் அருகில் இருந்த டீக்கடைக்கு சென்றோம். நல்ல சூடான தேனீர் அருந்தி, சிறிது நேரம் இளைப்பாறச் செய்தோம்..

மீண்டும், மணிச்சுடர் அலுவலகத்திற்கு சென்று வரவேற்பறையில் இருந்த சோபாவில் அமர்ந்து, தலைவரின் வருகைக்காக காத்திருந்தோம்
சரியாக 11 மணிக்கு சிராஜுல் மில்லத் அவர்கள், அலுவலகம் வந்தார். அவரை பார்த்ததும் நாங்கள் உடனே எழுந்து சலாம், சொன்னபோது, பதிலுக்கும் வலைக்கும் ஸலாம் என கூறிய தலைவர் அவர்கள், எங்களை செய்கையால் அமரச் சொன்னார்தனது அறைக்கு சென்று, கால் மணி நேரத்திற்குள் உள்ளே அழைத்தார்.


தலைவரின் அறைக்குள் நுழைந்தபோது, மீண்டும் சலாம் கூறிக் கொண்டே, சென்றோம்.. தனக்கு எதிரே இருந்து இருக்கையில் எங்களை உட்காரச் சொன்ன தலைவர் அவர்கள், நேராக விஷயத்திற்கு வந்தார்.
சமுதாயத்தின் நலனுக்காகவும், சமுதாயச் செய்திகளை வெளியிட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்திலும், மணிச்சுடர் நாளிதழ் ஆரம்பிக்கப்பட்ட நேரம்

அது.  தமிழகம் முழுவதும் துடிப்பான இளைஞர்களை செய்தியாளர்களாக நியமிக்க ஆர்வம் கொண்ட சிராஜுல் மில்லத் அவர்கள், அதுகுறித்து பலரிடம் ஆலோசனைகளையும் நடத்தினார். அந்த ஆலோசனைகளின் பேரில், வேலூர் மாவட்ட செய்தியாளராக என்னை நியமிக்க அழைத்தார். அதன்பேரில், நானும், மாலை முரசு மசூத் அகமது சென்றபோதுதான், எங்களிடம், வேலூர் நிலவரம், செய்திகளின் தன்மை, விளம்பரம்., உள்ளிட்ட பல விஷயங்களை விரிவாக கேட்டார்.

பிறகு, வாழ்த்துக்களை சொன்னபடி என்னை வேலூர் மாவட்ட செய்தியாளராக நியமனம் செய்தார்.

இப்படித்தான், மணிச்சுடருக்கும் எனக்கும் முதன்முதலாக உறவு மலர்ந்தது. போராட்டங்கள், நெருக்கடிகள், என பல சிக்கல்களுக்கு இடையே வேலூர் மாவட்ட செய்திகளை, விளம்பரங்களை அனுப்பி வைத்தேன்அத்தோடு மணிச்சுடரை குறித்த நேரத்தில் வினியோகம் செய்யும் பணியும் செய்து வந்தேன்..

பிறகுடெல்லி ஜாமியா நகரில் இருக்கும் IOS  என்ற இஸ்லாமிய ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை கிடைத்த காரணத்தால், மணிச்சுடரின் வேலூர் மாவட்ட செய்தியாளர் பணியை இழக்க நேரிட்டது.

அப்போதுகூட, தலைவருடன் எனக்கு இருந்த தொடர்பு, நெருக்கம் ஆகியவைக்கு எந்த பிணக்கும் வரவில்லை.



1989ஆம் ஆண்டு, வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் நின்று பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தலைவர் சிராஜுல் மில்லத் அவர்கள், டெல்லி வந்ததும், என்னை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அழைத்தார். இஸ்லாமிய ஆராய்ச்சி நிறுவன அலுவலக ஊழியர் எனக்கு தொலைபேசி வந்து இருப்பதாகவும், வேலூர் எம்.பி. பேசுவதாகவும் கூறியபோது எனக்கு இன்ப அதிர்ச்சி

உடனே, தொலைபேசியில் இணைப்பை பெற்று தலைவருக்கு சலாம் கூறினேன். வேலூர் தொகுதியில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தேன்.

என்னுடைய வாழ்த்துக்களுக்கு நன்றி தெரிவித்த தலைவர் அவர்கள், உடனே தன்னை தமிழ்நாடு இல்லத்தில் வந்து பார்க்கும்படி பணித்தார்.
அன்று மாலையே, சிறிய பூச்செண்டோடு, தமிழ்நாடு இல்லத்திற்கு சென்று, தலைவர் தங்கிருந்த அறையை கண்டுபிடித்து, உள்ளே சென்றேன். பூச்செண்டை புன்சிரிப்புடன் வாங்கிக் கொண்ட தலைவர் அவர்கள், என்னை அமரச் சொல்லி டீயை வரவழைத்து சாப்பிடச் சொன்னார்.

டெல்லியில் என்னுடைய பணிகள் குறித்து கேட்டறிந்தார். தன்னுடைய இல்லத்திலேயே இனி தங்கிக் கொள்ளலாம் என்றும் கூறினார். எனக்கு உண்மையிலேயே மகிழ்ச்சி ஏற்பட்டது.


பல்வேறு காரணங்களால் மணிச்சுடர் நாளிதழ் நிறுத்தப்பட்டிருந்த நேரம் அது. அப்படிப்பட்ட நேரத்திலும், என்னை மறக்காமல் எனக்கு உதவி செய்தார் தலைவர் சிராஜுல் மில்லத்… டெல்லியில் ஜன்பத்தில் இருந்த அவரது இல்லத்தில் தங்கியிருந்தபோது,  மணிச்சுடர் நாளிதழ் குறித்து அடிக்கடி பேசுவார்.  எப்படியும் மீண்டும் அதனை கொண்டுவர வேண்டும் என்று ஆவல் கலந்த துடிப்புடன் தெரிவிப்பார். பத்திரிக்கைத் துறை மீது அவருக்கு இருந்த ஆர்வம், ஈடுபாடு, சமுதாயச் செய்திகளை எப்படியும் நம் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற துடிப்பு இதுதான், மணிச்சுடரை தொடர்ந்து நடத்துவதற்கான முக்கிய நோக்கம் என்பது தலைவரின் பேச்சை கேட்கும்போது என்னால் உணர முடிந்தது.

1991 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்திற்கு திடீரென தேர்தல் வந்ததால், டெல்லி வீட்டை காலி செய்தார் தலைவர். இருந்தும் நான் தங்குவதற்கு தகுந்த ஏற்பாடுகளையும் செய்தார்… பின்னர், 4 ஆண்டு கால டெல்லி பணிகளை முடித்துக் கொண்டு, வேலூர் திரும்பியபோது, மீண்டும் மணிச்சுடர் நாளிதழில்  எனக்கு வாய்ப்பு கிட்டியது.

ஆம். வாலஸ் கார்டனில் இருந்த மணிச்சுடர் நாளிதழின் அலுவலகத்திற்கு வரும்படி அழைத்த சிராஜுல் மில்லத் அவர்கள், உடனே பணியில் சேர கட்டளையிட்டார். மணிச்சுடர் அலுவலத்திலேயே தங்கிக் கொள்ளவும் அனுமதி அளித்தார்.

இங்கேதான், முனிரூல் மில்லத் பேராசிரியர் கேம்.எம் காதர் மொகிதீன் அவர்களை நான் முதன்முதலாக சந்தித்தேன். அப்போது அவர், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின்  மாநில பொதுச் செயலாளராக இருந்த நேரம் அது…


நானும் அவரும், இரவு நேர கொசுக்கடிகளுக்கு இடையே பல இரவுகள் தூங்காமல், மணிச்சுடருக்கு உழைத்த காலம் அது.. நெஞ்சை விட்டு மறக்க முடியாத காலங்களை எப்படி மறக்க முடியும்…

இந்த வாலஸ் கார்டன் அலுவலகத்தில்தான் தற்போது, விஷுவல் மீடியாக்களை கலக்கிக் கொண்டிருக்கும் பல ஜாம்பவான்களை நான் சந்தித்தேன்.

ஆம்..‘

திரு,டாயல் (சன் டிவி.. பிறகு கலைஞர் டி.வி.)
திரு.வில்லியம்ஸ் (பொதிகை, ஆல் இந்தியா ரேடியோ)
திரு.மேலப்பாளையம் ரசூல்கான் (சன் டி.வி.)
திரு.ஜலால் (சன் டி.வி.. பிறகு, ராஜ் மற்றும் ஜி டி.வி)
திரு.ராமதாஸ் (பல பத்திரிக்கைகளில் பணி)
திரு.ராஜராஜன் (பல பத்திரிக்கைகளில் பணி)
திரு.பெரியசாமி, (சன் டி.வி. பிறகு ஜெயா டி.வி.)
திரு.கப்பார் (ராஜ், சன் மற்றும் மூன் தொலைக்காட்சிகளில் பணி)
திரு.மீரா மொகிதீன் (பல பத்திரிக்கைகளில் பணி)
மற்றும்
திரு.எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் (சன் டி.வி., மக்கள் தொலைக்காட்சி. மற்றும்
ஜி.டி.வி.)

இப்படி பல துடிப்பான பத்திரிக்கை ஆர்வலர்கள் சங்கமித்த இடம்தான் மணிச்சுடர் நாளிதழ் அலுவலகம்..

நெருக்கடிகள்.,, இன்னல்கள்… குறைந்த ஊதியம்… என பல சிக்கல்களையும் தாங்கிக் கொண்டு, மேலே குறிப்பிட்ட அனைவரும் சமுதாயத்திற்காக உழைத்தவர்கள்…

சமுதாயச் செய்திகளை, எளிமையாக மக்களிடம் கொண்டு சேர்த்தவர்கள்.. எந்த பலனையும் எதிர்பார்க்காமல் செய்த அந்த பணிகளின் காரணமாகவே, தற்போது இறைவனின் அருளால், தமிழகத்தின் மிக முக்கிய  விஷுவல் மீடியாக்களை நாங்கள் கலக்கிக் கொண்டு இருக்கிறோம்…

மேலே குறிப்பிட்ட நாங்கள் அனைவரும் மணிச்சுடர் நாளிதழ் உருவாக்கிய நன்முத்துக்கள்.

சிராஜுல் மில்லத்தின் நேரடி கண்காணிப்பில் தயாரிக்கப்பட்ட பத்திரிக்கை  வைரங்கள்….

மணிச்சுடரின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றிய முக்கிய சாதனையாளர்கள்…



மணிச்சுடர் இன்று பல சாதனைகளை குவிப்பதற்கும், பத்திரிக்கை துறையில் துடிப்புடன்  வலம் வருவதற்கு, மேலே குறிப்பட்ட இந்த  முத்துக்கள் செய்த சேவைகள், பணிகள்தான் முக்கிய அடிப்படை காரணம்… இந்த நன்முத்துக்களின் சேவைகளை யாரும் குறைந்து மதிப்பிட முடியாது… மறுக்கவும் முடியாது….

இப்படி பல நன்முத்துக்களை மணிச்சுடர் நாளிதழ் உருவாக்கி இருக்கிறது… இன்னும் உருவாக்கி கொண்டுதான் இருக்கிறது… தற்போது மணிச்சுடரின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கும் பேராசிரியர் கேம்.எம்.காதர் மொகிதீன் அவர்கள், மணிச்சுடரை எப்படியும் மிகச் சிறந்த முறையில் கொண்டு வர வேண்டும் என ஆவல் கொண்டுள்ளார். அவரது உயர்ந்த எண்ணம் நிறைவேற வேண்டும். இறைவன் அதற்கு அருள் புரிய வேண்டும். அதன்மூலம், மேலும் பல நன்முத்துக்கள் பத்திரிக்கை துறைக்கு கிடைக்க வேண்டும்….

---------------------------------------------------------------------

மணிச்சுடர் நாளிதழ் பொன்விழா மலரில் வெளியிடப்பட்ட சிறப்பு கட்டுரைதான் நீங்கள் மேலே படித்தது. கடந்த 2012ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 5ஆம் தேதி சென்னையில் கொண்டாடப்பட்ட விழாவில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, மணிச்சுடரின் இன்னாள் மற்றும் முன்னாள் ஊழியர்களை கவுரவித்தனர். உண்மையிலேயே இது மகிழ்ச்சி அளிக்கும் செயல்..

கட்டுரையை படித்து கருத்து தெரிவியுங்கள் 

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்