விடுதலைக்காக குர்பானி......!
வழக்கம் போல இந்த வாரமும் ஜும்மா தொழுகைக்காக, சென்னை திருவல்லிக்கேணியில் இருக்கும் 162 ஆண்டுகள் பழமை வாய்ந்த மஸ்ஜித்-இ-சைய்யதியா பள்ளிவாசலுக்கு சென்றேன்.
மஸ்ஜித்தில், மவுலானா மவுலவி அழகிய உர்தூ மொழியில் எல்லோருக்கும் புரியும்படி, மிக எளிமையான வார்த்தைகளில் பயான் (பிரசங்கம்) செய்தார்.
நாட்டின் விடுதலைக்காக முஸ்லிம்கள் செய்த தியாகங்களை பட்டியலிட்டு அடுக்கினார்.
மாவீரன் திப்புசுல்தான்,
மன்னர் பகதூர் ஷா ஜபர்,
வள்ளல் ஹபீப் சகி,
மவுலானா முகமது அலி
உள்ளிட்ட பலர், இந்தியாவின் சுதந்திர போரில் ஆற்றிய பணிகளை கூறிய மவுலவி, ஏராளமான முஸ்லிம் மக்களும் தங்களுடைய உயிர்களை தியாகம் செய்து விடுதலை போரில் பங்கேற்றதையும் அழகாக எடுத்துக் கூறினார்.
செல்வம், பொருள், உயிர் என அனைத்தையும் இழந்து, தியாகங்களை செய்த முஸ்லிம்களின் விடுதலை போராட்டத்தை மறைக்க, வரலாற்றை மாற்றி அமைக்க தற்போது மிகப் பெரிய சூழ்ச்சி நடப்பதாக மவுலவி வேதனை தெரிவித்தார்.
ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட ஒரு கூட்டம், தற்போது முஸ்லிம்களின் தியாகங்களை கொச்சைப்படுத்தும் நோக்கில் காரியங்களை ஆற்றி வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
அத்துடன்,
நாட்டில் முஸ்லிம் மக்கள் மூன்றாம் தர மக்களை போன்று நடத்த பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
நாட்டின் விடுதலைக்காக முஸ்லிம்கள் செய்த குர்பானி, தியாகம் அளவிட முடியாது என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.
முஸ்லிம்கள் செய்த தியாகங்களை மறைக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளை மிக எச்சரிக்கையுடன் அணுக வேண்டும் என்றும் மவுலவி கேட்டுக் கொண்டார்.
மேலும், இளம் சமுதாயத்திற்கு விடுதலைக்காக முஸ்லிம்கள் செய்த தியாகங்களை எடுத்துக் கூற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த நாட்டில் அனைத்து உரிமைகளையும் பெற்று வாழ முஸ்லிம்களுக்கு முழு உரிமை உண்டு என்றார் மவுலவி.
இந்திய நாட்டின் வளர்ச்சிக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் தற்போதும் முஸ்லிம்கள் ஆற்றி வரும் பங்கை யாரும் மறைக்க முடியாது என்றும் மவுலவி தெரிவித்தார்.
எனவே,
வரும் 70வது சுதந்திர தினவிழாவை முஸ்லிம்கள் தங்கள் வீடுகளில் தேசிய கொடியை ஏற்றி கொண்டாட வேண்டும் என்றும் அவா கேட்டுக் கொண்டார்.
அழகிய உர்தூ மொழியில் மிக எளிமையான வார்த்தைகள் மூலம், சுதந்திர தியாகங்களை மவுலவி எடுத்துக் கூறிய விதம் என்னை வெகுவாக கவர்ந்தது.
இதுபோன்ற, பயான்கள் மிகவும் அவசியம் என்றே தோன்றியது.
நவீன உலகில், இளம் சமுதாயம் பல தியாகங்களை அறியாமல் இருந்து வருகின்றனர்.
அவர்களுக்கு முஸ்லிம்களின் தியாகங்களை எடுத்துக் கூறுவது மிகவும் அவசியம்.
அந்த பணியை ஜும்மா பயானில், பிரசங்கத்தில் மவுலவி ஆற்றி, தமது பணியை நன்கு செய்துள்ளார்.
உண்மையிலேயே மவுலவியை பாராட்ட வேண்டும்.
ஆக,
முஸ்லிம் மக்களே உங்களுடைய தியாகங்களை மறந்து விடாதீகள்.
இந்திய நாட்டிற்காக, உங்கள் முன்னோர்கள் செய்த குர்பானிகளை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
அதன்மூலம் மட்டுமே, உங்களுக்கு எதிராக எழும் குரல்களை எதிர்ப்புகளை நீங்கள் எதிர்கொள்ள முடியும்.\
S.A.Abdul Azeez
Journalist