"உலகின் சிறந்த முஸ்லிம்களாக விளங்கும் இந்திய முஸ்லிம்கள்"
ஏக இறைவன் மீது ஈமான் கொண்டு, முழு நம்பிக்கையுடன் செயல்படும் முஸ்லிம்கள் அனைவரும் சிறந்த முஸ்லிம்கள் தான். அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, ஓர் இறைக் கொள்கையில் உறுதியுடன் இருந்து, அதற்காக பல்வேறு சவால்களை, துன்பங்களை சந்திக்கும் போதும், துளியும் மனம் தளராமல், ஒழுக்கப் பண்புகளை கைவிடாமல், இஸ்லாமிய நெறிமுறைகளை உறுதியாக பின்பற்றும் அனைத்து முஸ்லிம்களும் நல்ல முஸ்லிம்கள் என்றே கூற வேண்டும்.
குறிப்பாக, கடந்த 75 ஆண்டுகளாக, பாலஸ்தீன மக்கள் படும் துன்பங்கள், துயரங்கள் ஏராளம், தங்களுடைய சொந்த பூமிக்காக அவர்கள் செய்யும் தியாகங்கள் குறித்து சொல்ல வார்த்தைகளே இல்லை என்றே கூறலாம். குறிப்பாக, காசா பூமியை தங்களுடன் இணைத்துகொள்ள இஸ்ரேல் துடித்துக் கொண்டு இருக்கிறது. இத்தனைய சூழ்நிலையில், ஹமாஸ் போராளிகள், ஏக இறைவன் மீது முழுமையாக நம்பிக்கை வைத்து நடத்தும் போரின் மூலம் அவர்கள் எப்படிப்பட்ட தியாகிகள் என்பதையும் எப்படிப்பட்ட சிறந்த முஸ்லிம்கள் என்பதையும் நாம் நன்கு உணர்ந்துகொள்ளலாம். கடந்த ஓராண்டில் மட்டும் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காசா மக்களை கோழை இஸ்ரேல் இனப்படுகொலை செய்துவிட்டு, மீண்டும் தாக்குதல் அட்டூழியம் செய்து வருகிறது. அத்துடன், மருத்துவமனைகள் மீது தாக்குதல், குழந்தைகள், பெண்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி அவர்களின் உயிரிகளை பறித்து வருகிறது. இப்படி, இஸ்ரேலின் தாக்குதலைகளை, சவால்களை முறியடிக்க காசா மக்கள் செய்யும் ஒவ்வொரு தியாகமும், செயலும் அவர்கள் ஒரு சிறந்த முஸ்லிம்கள் என்பதை உறுதிப்பட உலகத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
இந்திய முஸ்லிம்கள்:
இப்படி, உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் முஸ்லிம்கள், ஒவ்வொரு நாளும் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன,. உலகின் இத்தகைய சூழ்நிலையில், இந்தியாவில் வாழும் 25 கோடிக்கும் அதிகமான முஸ்லிம்கள், தங்கள் தாய் நாட்டை உயிருக்கு உயிராக நேசித்து வாழ்ந்துவரும் நிலையில் கூட, அவர்களின் அமைதியான வாழ்க்கையை சீர்குலைக்க பஜ்ரங்தள், விஸ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகள் தொடர்ந்து சதி வேலைகளில் இறங்கி, முஸ்லிம்கள் எப்போதும் ஒருவித பயம், பதற்றத்துடன் இருக்கும் வகையில், தொடர்ந்து தொல்லைகளை அளித்துக் கொண்டே இருக்கின்றன.
இப்படி, இந்திய முஸ்லிம்கள் நாள்தோறும் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு மத்தியிலும் அவர்கள், சிறந்த முஸ்லிம்களாக தங்களுடைய அழகிய செயல்பாட்டின் மூலம் நிரூபித்து வருகிறார்கள். இந்திய முஸ்லிம்கள் உலகின் உறுதியான மற்றும் கடின உழைப்பாளி சமூகங்களில் ஒன்றாகும். பொருளாதார மற்றும் சமூக சவால்களை எதிர்கொண்ட போதிலும், அவர்கள் தேவையற்ற அங்கீகாரத்தை நாடாமல், அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சியுடன் நாட்டின் முன்னேற்றத்திற்கு பங்களிக்கின்றனர்.
கல்வி, அறிவியல், பொருளாதாரம், வணிகம், தொழில் என முக்கிய துறைகளில் இந்திய முஸ்லிம்களின் பங்களிப்பு ஏராளமாக இருந்து வருகிறது. 25 கோடி முஸ்லிம்களில் பெரும்பாலான முஸ்லிம்கள், தேநீர் விடுதி உள்ளிட்ட சிறிய வணிக நிறுவனங்களை நடத்தி வருகிறார்கள். இதேபோன்று, கல்வியில் மிகப்பெரிய முன்னேற்றம் முஸ்லிம் சமூகத்தில் இல்லை. எனினும், குறைந்த அளவு பெரிய தொழில் அதிபர்களாக இருக்கும், முஸ்லிம்களில் சிலர் கூட, நாட்டின் வளமான கட்டமைப்புக்காக மிகச் சிறந்த முறையில் தங்களது பங்களிப்பை வழங்கி வருகிறார்கள். இதேபோன்று, கல்வி, அறிவியல், பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த முஸ்லிம் வல்லுநர்கள், அந்த துறைகளில் ஆற்றிவரும் சேவை மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. இத்தகைய சேவை நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில் உள்ளது.
முஸ்லிம்களை மட்டுமே குறிவைக்கும் கும்பல்:
இப்படி, நாட்டின் முன்னேற்றத்திற்காக முஸ்லிம்கள் நல்ல சேவை ஆற்றிவந்தாலும், குறிப்பிட்ட ஒரு கும்பல், முஸ்லிம்களை தேச விரோதிகளைப் போல சித்தரித்து அடிக்கடி அவர்கள் மீது தாக்குதல்களை நடத்தி வருகிறது. அதற்கு தற்போதைய சிறந்த உதாரணம், நாக்பூரில் நடைபெற்ற வன்முறை மற்றும் கலவரமாகும். அவுரங்கசீப் கல்லறையை அகற்ற வேண்டும் என வீண் பிடிவாதம் பிடித்து, 300 ஆண்டுகளுக்கு முன்பு மறைந்துபோன, ஒரு மன்னனின் பேரில், முஸ்லிம்களுக்கு எதிராக கலவரங்களை தூண்ட பஜ்ரங்தள், விஸ்வ இந்து பரிஷத் அமைப்புகள் முயற்சிகளில் ஈடுபட்டு, அதில் ஓரளவுக்கு அரசியல் லாபத்தையும் அடைந்து வருகின்றன.

எனினும், முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்படும் இத்தகைய தாக்குதல்களை பெரும்பாலான இந்துக்கள் விரும்புவதில்லை. முஸ்லிம்கள் இந்திய நாட்டின் சொந்த குடிமகன்கள் என்பதையும், மதசார்பற்ற நாட்டில், அவர்களுக்கு அனைத்து உரிமைகளும் உண்டு என்றும், சமூகத்தில் உண்மையாக அக்கறை கொண்ட, சகோதர சமுதாய மக்கள் உறுதிப்பட கூறி வருகிறார்கள். குறிப்பாக முஸ்லிம்கள் நல்ல கல்வியறிவு பெற்று அனைத்து துறைகளிலும் முன்னேற வேண்டும் என உண்மையான இந்து ஒருவர் விரும்பவே செய்கிறார். முஸ்லிம் இளைஞர்களின் கல்விக்காக உதவி செய்யும் ஏராளமான இந்து தோழர்களை நாம் பார்க்க முடிகிறது. இதேபோன்று, முஸ்லிம்களின் பண்டிகை காலங்களில் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யும் இந்து மக்களும் நாட்டில் இருந்து வருகிறார்கள்.
இஃப்தார் நிகழ்ச்சி நடத்தும் ராதா குப்தா:
முஸ்லிம்களின் துயரங்கள் ஒருபுறம் தொடர்ந்துகொண்டே இருந்தாலும் ராதா குப்தா போன்ற இந்து பெண்மணிகளால், இந்த நாட்டில் இன்னும் மனிதநேயம் நடமாடி தழைத்தோங்கிக் கொண்டே இருக்கிறது. வட நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக பெரும் துவேஷம் பரப்பட்டு வரும் நிலையில், வட நாட்டைச் சேர்ந்த ராதா குப்தா, கடந்த 15 ஆண்டுகளாக தொடர்ந்து புனித ரமளான் காலத்தில் 30 நாட்களும், நோன்பு வைக்கும் இஸ்லாமியர்களை தம்முடைய இல்லத்திற்கு நேரில் அழைத்து, இஃப்தார் நிகழ்ச்சியை நடத்து வருகிறார்.

தாய் ராதா குப்தாவின் இந்த அற்புதமான, அழகான செயலுக்கு, அவரது மகன்கள், ராகுல் குப்தா, ரோஹித் குப்தா ஆகியோர் உதவியாக இருந்து வருகிறார்கள். இஃப்தார் நிகழ்ச்சிக்கு வரும் முஸ்லிம்கள் தொழுகை நடத்த தனி இடம் ஏற்பாடு செய்யப்படுகிறது. இஃப்தார் நிகழ்ச்சிக்கு இந்து தோழர்களும் அழைக்கப்படுகிறார்கள். பெண்கள், குழந்தைகள் அனைவரும் அனைவரும் அழைக்கப்படுகிறார்கள். அவரவர்கள், தங்களுடைய கொள்கையில் உறுதியாக இருந்தபோதும், முஸ்லிம்களுடன் இணைந்து இஃப்தார் விருந்தில் கலந்துகொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்கள். தம்முடைய உயிர் பிரியும் வரை, தாம் இந்த மண்ணை விட்டுமறையும் வரை இஃப்தார் நிகழ்ச்சி நடத்தி, முஸ்லிம்களுக்கு விருந்து அளிப்பேன் என்று கூறும் ராதா குப்தா, உண்மையிலேயே ஒரு மனிதநேய, சகோதரத்துவம் கொண்டு வீர பெண்மணி என்றே கூறலாம்.
இதேபோன்று, தமிழகத்தின் ஈரோட்டில் உள்ள ஒரு கோவில் நிர்வாகம், அப்பகுதியில் உள்ள முஸ்லிம் நோன்பாளிகளை இஃப்தார் விருந்துக்கு அழைத்து நன்கு பாசத்துடன் உபசரித்த நிகழ்ச்சி மனதிற்கு ஆறுதல் அளித்தது. இந்துத்துவ சக்திகள், மக்களிடையே பிரச்சினையை உருவாக்கி, பிரித்தாள தொடர் முயற்சிகளை செய்தாலும், அதை காதில் வாங்கிக் கொள்ளாமல், முஸ்லிம்களிடம் சகோதர பாசத்துடன் நடந்துகொள்ளும் ராதா குப்தா போன்ற நல்ல உள்ளங்கள் இருக்கும் வரை, இந்திய முஸ்லிம்களை சகோதர சமுதாய மக்களிடம் இருந்து யாரும் பிரித்துவிட முடியாது.
துன்பங்களுக்கு மத்தியில் இன்பம்:
மனித வாழ்க்கையில் இன்பம், துன்பம் மாறி மாறி வரும் என்பது அனைவரும் நன்கு அறிந்த ஒன்றாகும். அந்த வகையில், இந்திய முஸ்லிம்களும் தங்களுடைய அன்றாட வாழ்க்கையில் இன்பமும், துன்பமும் மாறி மாறி சந்தித்துக் கொண்டே இருக்கிறார்கள். அவர்களை ஒரு பக்கம் இந்துத்துவ அமைப்புகளின் மூலம் துன்பம் மிரட்டிக் கொண்டு இருக்கிறது. அதேநேரத்தில் ராதா குப்தா போன்ற நல்ல உள்ளம் கொண்ட பெண்மணிகளின் அழகிய மனிதநேய செயல்கள் மூலம் ஆறுதலான இன்பம் கிடைத்துக் கொண்டே இருக்கிறது.
ஒரு தேசத்தின் பொறுப்பு, முஸ்லிம்களை இழிவுபடுத்துவதோ அல்லது திருப்திப்படுத்துவதோ அல்ல. மாறாக அனைவருக்கும் சம வாய்ப்புகளை உறுதி செய்வதாகும். அனைத்து மதம் மற்றும் சாதியைச் சேர்ந்த மக்களும் ஒன்றாக வளர்ந்து, ஒற்றுமை, உள்ளடக்கம் மற்றும் கூட்டு முன்னேற்றத்தை வளர்க்கும்போது மட்டுமே நாடு உண்மையான வளர்ச்சியை அடைய முடியும் என்பதை உறுதியாக நம்பும் நாட்டில் உள்ள பெரும்பாலான சகோதர சமுதாய மக்கள், முஸ்லிம்களை நேசிக்கவே செய்கிறார்கள். இது இந்திய முஸ்லிம்களுக்கு கிடைத்த பெரும் பரிசாகும். எனவே தான், உலகிலேயே சிறந்த முஸ்லிம்கள், இந்திய முஸ்லிம்கள் தான் என நாம் உறுதியாக கூறலாம்.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்