திருமணம் செய்வதாக நடித்து லட்சக்கணக்கில் பணத்தை சுருட்டிய வடநாட்டு பெண்.
ஹைடெக் மோசடி கும்பல் குறித்து ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்:
தொழில் அதிபர்களிடம் இருந்து எளிதாக பணத்தை கொள்ளையடிக்க விதவிதமான நவீன உத்திகளை கையாளத் தொடங்கியுள்ளது ஒரு ஹைடெக் மோசடி கும்பல்.
கோடிக் கோடியாக பணத்தை சம்பாதித்து வைத்திருக்கும் தமிழக தொழில் அதிபர்களை மட்டுமே குறி வைத்து இயங்குகிறது இந்த கும்பல்.
அழகான பெண்களின் படத்தை தொழில் அதிபர்களிடம் காண்பித்து அவர்களின் மனதில் திருமண ஆசையை உருவாக்கி வலையில் விழ வைக்கிறது இந்த மோசடி கும்பல்.
பின்னர் மணம் முடித்தும் வைக்கிறது இந்த கும்பல்.
பிரச்சனை இத்தோடு முடிந்து விடுவதில்லை. திருமணத்திற்கு முன்பே லட்சக்கணக்கில் பணத்தை கரந்து விடும் இந்த கும்பல், பின்னர் மணம் முடித்த பெண்ணுடன் பல லட்சங்களுடன் காணாமலும் போய் விடுகிறது.
புதிய மனைவி 15 நாட்களிலேயே காணாமல் போவதை கண்டு அதிர்ச்சியில் தவிக்கும் கணவன், காவல்துறையை நாட வேண்டிய காட்டய நிலை உருவாகி விடுகிறது.
இப்படிதான், திருச்சி மாவட்டம் துறையூரைச் சேர்ந்த தொழில் அதிபர் விஜயகுமார், மோசடி கும்பலால் ஏமாற்றப்பட்டு இன்று பல லட்சங்களை இழந்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இந்த விஜயகுமாரை தங்களது ஆசை வலையில் மிக எளிதாக விழ வைத்து, லட்சக்கணக்கில் சுருட்டி உள்ளது இந்த ஹைடெக் மோசடி கும்பல்.
தொழில் அதிபர் விஜயகுமாருக்கு நேர்ந்த அனுபவங்கள்தான் என்ன?
மோசடி கும்பலால் ஏமாற்றப்பட்டவர்கள் யார் யார் ?
போல¦சின் விசாரணைக்கு பயந்து தலைமறைவாகியுள்ள மோசடி கும்பல் இன்னும் எத்தனை பேரைதான் ஏமாற்றிக் கொண்டு இருக்கிறது ?
பல திருப்பங்களை கொண்ட, சினிமா பாணியிலானா ஒரு ஜெட் வேக திரைக்கதையை இப்போது பார்க்கலாம் வாருங்கள்.
_______________________________________________________
திருச்சி மாவட்டம், துறையூர் கூட்டுறவு நகரை சேர்ந்தவர் காந்திலால்.
ராஜஸ்தானை சேர்ந்த காந்திலாலுக்கு விஜயகுமார், ரவி, சிட்டி என மூன்று பிள்ளை உண்டு.
இதில் மூத்த மகனான விஜயகுமார், துறையூர் பஸ் நிலையம் அருகில் பேன்ஸி ஸ்டோர் கடை வைத்து, வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலையும் செய்து வருகிறார்.
இதனால், விஜயகுமாருக்கு லட்சக்கணக்கில் வருமானம் வந்துக் கொண்டு இருக்கிறது.
30 வயதை நெருங்கிக் கொண்டு இருக்கும் விஜயகுமாருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார் தந்தை காந்திலால்.
ராஜஸ்தானை பூர்விகமாக கொண்ட காந்திலால், தமது மாநிலத்தைச் சேர்ந்த பெண்னே மகனுக்கு மணம் முடித்து வைத்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணினார்.
இந்த நேரத்தில்தான், சென்னை சௌகார் பேடடையைச் சேர்ந்த திருமண புரோக்கர்கள் சுகன்ராஜ் மற்றும் விஜயராஜ் ஆகியோர் காந்திலாலுக்கு அறிமுகமானார்கள்.
மகன் விஜயகுமாருக்கு பெண் பார்த்துக் கொண்டு இருக்கும் தகவல்களை புரோக்கர் சுகன்ராஜிடம் தெரிவித்தார் காந்திலால்.
கவலைப்பட வேண்டும். நல்ல பெண்ணாக பார்த்து, உங்கள் மகன் விஜயகுமாருக்கு நான் மணம் முடித்து வைக்கிறேன் என உறுதி அளித்தார் புரோக்கர் சுகன்ராஜ்.
இதனால் காந்திலாலின் மனம் ஆறுதல் அடைந்தது. நிம்மதி பிறந்தது. விரைவில் மகன் விஜயகுமாருக்கும் திருமணம் முடிந்து விடும் என அவர் மகிழ்ச்சி அடைந்தார்.
புரோக்கர் சுகன்ராஜும் சொன்னப்படியே, ராஜஸ்தான் மாநிலம் பிக்கானீர் என்ற ஊரைச் சேர்ந்த ராஜேஷ்குமார் ஜெயின் என்பவரின் மகள் பூஜாகுமாரியை காந்திலாலுக்கு அறிமுகப்படுத்தினார்.
பூஜாகுமாரியை பார்த்த காந்திலால், மகன் விஜயகுமாருக்கு ஏற்ற பெண் இவள்தான் என நினைத்து, திருமணத்திற்கு சம்மதமும் அளித்தார்.
மணமகன் விஜயகுமாருக்கும், பெண் பூஜாகுமாரியை பிடித்து விட்டதால் திருமண ஏற்பாடுகள் தடல்புடலாக நடந்தன.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதி விஜயகுமாருக்கும், பூஜாகுமாரிக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
வடநாட்டு வழக்குப்படி, பெண் வீட்டில்தான் நிச்சயதார்த்தம் நடைபெறுவது வழக்கம்.
ஆனால், இந்த நிச்சயதார்த்தமோ, புரோக்கர் சுகன்ராஜ் சென்னை வீட்டில் நடந்தது.
நிச்சயதார்த்தம் முடிந்த கையோடு, தங்களுக்கு தொழில் ஏற்பட்ட நஷ்டத்தால் தமக்கு கடன் இருப்பதாகவும், அதன் அடைக்க வேண்டும் என்றும் பூஜாகுமாரியின் தந்தை ராஜேஷ்குமார் கூறவே, வருங்கால மாமனார்தானே என்ற எண்ணத்தில் திருமணத்திற்கு முன்பே விஜயகுமார் ஐந்து லட்சம் ரூபாய் தந்துள்ளார்.
இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஏப்ரல் 12 ஆம் தேதி துறையூரில் மிகப் பெரிய மண்டபத்த்தில் விஜயகுமாருக்கும், பூஜாகுமாரிக்கும் உறவினர்கள் சூட திருமணம் நடந்து முடிகிறது.
திருமணம் முடிந்து இனிய குடும்ப வாழ்க்கையை தொடங்கும் எண்ணத்தில் கனவுகளை சுமந்துக் கொண்டு இருந்த விஜயகுமாருக்கு மீண்டும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.
திருமணச் செலவுகள் நிறைய ஆகிவிட்டதால் அப்பா, பணம் கேட்கிறார் என மனைவி பூஜாகுமாரி கூற, மகிழ்ச்சியுடன் மீண்டும் 5 லட்சம் ரூபாய் தருகிறார் விஜயகுமார்.
பணம் வாங்கிய பத்து நாட்களுக்குள், ஊரில் இருக்கும் தனது இன்னொரு மகளுக்கு குழந்தை பிறந்து இருப்பதாகவும் அவளை பார்த்து வர வேண்டும் என்றும் மகள் பூஜாகுமாரியை தம்முடன் சுடவே அனுப்பி வைக்க வேண்டும் என்றும் கூறினார் ராஜேஷ்குமார்.
பத்து நாட்கள்தானே, போயிட்டு வரட்டும் என நினைத்த விஜயகுமார், மனைவி பூஜாகுமாரியை மாமனார் ராஜேஷ்குமாருடன் அனுப்பி வைத்தார்.
ஊருக்கு சென்ற மனைவி பூஜாகுமாரி ஏனோ நீண்ட நாட்களாகவே வரவில்லை.
இதனால் கவலை அடைந்த விஜயகுமார், ராஜஸ்தானில் உள்ள பிக்கானீர் சென்று விசாரித்தபோது, பூஜாகுமாரி கொடுத்த முகவரி பொய்யானது என்பது தெரிய வந்தது.
அந்த முகவரியில் பூஜாகுமாரி, ராஜேஷ்குமார் என்ற பெயரில் யாருமே இல்லை என்பதும் தெரிய வந்தது.
அதிர்ச்சி அடைந்த விஜயகுமார், உடனடியாக சென்னைக்கு திரும்பி, தனக்கு பெண் பார்த்து மணம் முடித்து வைத்த புரோக்கர் சுகன்ராஜை சந்தித்தார்
புரோக்கரிடம், மனைவி பூஜாகுமாரியின் முகவரியை கேட்ட போது, திருமணம் செய்து வைத்ததோடு என்னுடைய வேலை முடிந்து விட்டது. பூஜாகுமாரி குறித்து மேலும் தகவல்கள் வேண்டுமானால், 2 லட்சம் ரூபாய் கொடுத்தால், தருவதாக கூறினார் புரோக்கர் சுகன்ராஜ்.
இதையடுத்து திருமணம் என்ற பெயரில் தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார் விஜயகுமார்.
இந்த மோசடி குறித்து துறையூர் போல¦ஸ் நிலையத்தில் கடந்த மாதம் புகார் அளித்தார் விஜயகுமார்.
புகாரை பெற்றுக் கொண்ட துறையூர் போல¦சார், டி.எஸ்.பி. பாஸ்கரன் தலைமையில் விசாரணை நடத்த தொடங்கியது.
மோசடி கும்பலை பல இடங்களில் தேடியது துறையூர் போல¦ஸ்.
இந்த நிலையில், தனது பெயரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதையும், தங்களை போல¦சார் தேடி வருவதையும் அறியாத பூஜாகுமாரி, தனது தந்தை ராஜேஷ்குமாருடன் கணவர் விஜயகுமாரை சந்திக்க மீண்டும் துறையூருக்கு வந்தார்.
இந்த தகவலை அறிந்த போல¦சார், உடனடியாக அங்கு விரைந்து சென்று பூஜாகுமாரி மற்றும் ராஜேஷ்குமார் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் அவர்கள் இருவரும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை என்பது தெரியவந்தது.
மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், அவர்களது உண்மையான பெயர் பூஜா விஸ்வகர்மா என்ற பூஜாகுமாரி, தந்தையின் பெயர் ராஜேஷ் விஸ்வகர்மா என்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து இருவரையும் கைது செய்த போல¦சார், துறையூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி சிறையில் அடைத்தனர்.
தொழில் அதிபர்களை குறி வைத்து மோசடி திருமணங்களை நடத்தி வரும் சென்னை சௌகார்பேட்டையை சேர்ந்த புரோக்கர்கள் சுகன்ராஜ், விஜயராஜ், ஆகியோரை கைது செய்ய துறையூர் போல¦சார் விரைந்தபோது, அவர்கள் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டனர்.
பணத்தை மட்டுமே குறிக்கோளாக வைத்துக் கொண்டு கொள்ளை அடிக்கும் நோக்கத்துடன், பல தொழில் அதிபர்களுக்கு ஒரே பெண்ணை திருமணம் செய்து வைத்துள்ளார் புரோக்கர் சுகன்ராஜ்.
பணத்தை சுருட்டியவுடன், மீண்டும் அதே பெண்ணை மற்றொரு தொழில் அதிபரின் மனைவியாக்கி அழகு பார்த்துள்ளார் சுகன்ராஜ்.
இப்படி 40 திருமணங்கள் நடத்தி பல கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்துள்ளார் புரோக்கர் சுகன்ராஜ்.
இந்த மோசடி திருமணங்களில் சுகன்ராஜுக்கு மட்டுமே தொடர்பு இல்லை.
மிகப் பெரிய நெட்ஓர்க் இதில் ஈடுபட்டு இருப்பதாக காவல்துறை சந்தேகிக்கிறது.
திருச்சி மண்ட காவல்துறை டி.ஐ.ஜி.யின் உத்தரவின்பேரில், மோசடி கும்பல் குறித்து துருவி துருவி விசாரிக்க தொடங்கியுள்ளது காவல்துறை.
வாடகை மனைவியாக வரும் பெண்கள், பத்து நாட்களில் லட்சக்கணக்கில் சுருட்டிக் கொண்டு தப்பி ஓடுவது எப்படி ?
இதற்கு மூளையாக செயல்படும் நபர்கள் யார் யார் ?
இப்படி பல கோணங்களில் தனது விசாரணையை முடுக்கி விட்டுள்ளது காவல்துறை.
கட்டிய மனைவி என்ற பெயரில், பணத்தை சுருட்டிக் கொண்டு ஓடும், பெண்கள், மிகப் பெரிய கலாச்சார சீரழிவை ஏற்படுத்தி வருகின்றனர்.
திருமண வயதை அடைந்தும், திருமணம் ஆகாமல் இருக்கும் தொழில் அதிபர்கள்தான், இந்த மோசடி கும்பலின் முதல் டார்கெட்டாக உள்ளனர்.
மோசடி கும்பல் விரிக்கும் வலையில் மிக எளிதாக பல தொழில் அதிபர்கள் விழுந்தும் விடுகின்றனர்.
மனைவியாக வரும் பெண், பத்து நாட்களில் ஓடி விடும்போது, குடும்ப கவுரவம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, அதனை வெளியே சொல்லவும் பல தொழில் அதிபர்கள் தயக்கம் காட்டுகின்றனர்.
இது, மோசடி கும்பலுக்கு மிக சாதகமாக அமைந்து விடுகிறது.
இதனால், தங்களது மோசடிகளை எந்த பயமும் இல்லாமல் தொடர்ச்சியாக அரங்கேற்றி வருகின்றனர்.
தமிழகத்தில் மட்டுமல்லாமல், நாடு முழுவதும் இப்படிப்பட்ட திருமண மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
காவல்துறையின் விசாரணையில் பல அதிர்ச்சிவூட்டும் தகவல்கள் நிச்சயம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பணத்தை பறிக்கும் திருமண மோசடி கும்பல்களிடம் இருந்து மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்கிறது காவல்துறை.
நாடு முழுவதும் பரவி விரிந்து கிடக்கும் இந்த மோசடி கும்பல், போல¦சாரின் வலையில் விரைவில் சிக்கி விடும்.
அப்போது, திருமண மோசடி கும்பலின் கொட்டங்களும் விரைவில் அடங்கிவிடும் என்கிறது காவல்துறை.
நல்லது நடந்தால் சரி. மீண்டும் இதுபோன்ற ஒரு திகில் கிரைம் நிகழ்ச்சியில் சந்திப்போம்.
S.A.ABDUL AZEEZ