Sunday, November 13, 2011

தியாகத் திருநாள் – சில தகவல்கள் !

தியாகம் இல்லாமல் மனிதனுடைய வாழ்க்கையில் நிச்சயம் நிம்மதி இருக்க முடியாது. 
பெற்ற குழந்தைக்காக ஒரு தாய் செய்யும் தியாகம், அந்த தாய்க்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது.
குழந்தையின் வளர்ச்சிக்காக, கல்விக்காக ஒரு தந்தை செய்யும் பல தியாகங்கள், அவனுடைய வாழ்க்கையில் சந்தோஷத்தை தருகிறது.
இப்படி, தியாகம்தான், மனிதனுக்கு, வாழ்க்கையின் உண்மையான தத்துவத்தை மறைமுகமாக சொல்லித் தருகிறது.
சரி, மனிதர்களுக்காக மனிதன் செய்யும் தியாகத்தில் மகிழ்ச்சி கிடைத்தாலும், ஓர் இறைக் கொள்கைக்காக நபி இப்ராஹீம் (அலை) அவர்களும், நபி இஸ்மாயில் (அலை) அவர்களும் செய்த தியாகங்கள் மூலம்,  உலக மக்கள் அனைவருக்கும் பல நன்மைகள் கிடைத்தன.
அவை, மனிதன் வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும்,  வழி தவறாமல், வழி பிழறாமல் இருக்க வேண்டும் என்ற படிப்பினைதான்.

ஓர் இறைக் கொள்கையை மனதில் உறுதியாக ஏற்றுக் கொண்ட, நபி இப்ராஹீம் (அலை) அவர்கள், தன்னுடைய வாழ்க்கை முழுவதும் கொண்ட கொள்கையில் உறுதியாகவே இருந்தார்.
சிலைகளை உருவாக்கும் குடும்பத்தில் பிறந்தாலும், மனிதன் உருவாக்கிய சிலைகளை மனிதனே வணங்குவதா என வினா எழுப்பிய அவர்,  இறைவன் ஒருவனுக்காவே நாம் வாழ வேண்டும் என உள்ளத்தில் உறுதி ஏற்றுக் கொண்டார் நபி இப்ராஹீம் (அலை).
தன்னுடைய வாழ்க்கையில், ஓர் இறைக் கொள்கையை அவர் சிறிதும் விட்டுக் கொடுக்கவில்லை.
அதற்காக பல தியாகங்களை செய்தார். கொடுமைகளை அனுபவித்தார். எல்லாமே இறைவன் ஒருவன் என்ற கொள்கைக்காக செய்த தியாகங்கள்தான்.
இறைவனுக்காக நம்மை நாம் அர்ப்பணித்துக் கொண்டால், இறைவனும் நம் மீது கருணை காட்டத் தொடங்கி விடுவான்.

இந்த கருத்தில் உறுதியாக இருந்தார் நபி இப்ராஹீம் (அலை).
கனவில் மகன் இஸ்மாயிலை  அறுப்பதாக கண்டபோது, அதிர்ச்சி அடைந்தாலும், அது இறைவனின் கட்டளை என்பதை உறுதியாக நம்பினார்.
மகன் இஸ்மாயில் (அலை)யிடம் தாம் கண்ட கனவை கூறியபோது, இஸ்மாயில் சிறிது தயங்கவில்லை.
இறைவனுக்காக, தன்னை தியாகம் செய்ய முன்வந்தார்.
இப்படி, இறைவனுக்காக தந்தையும் மகனும் உறுதியுடன் செய்த தியாகங்கள்தான், இன்று மனிதர்களை நெறித் தவறாமல் இருக்க செய்கிறது.
இந்த வரலாற்று சம்பவத்தை நினைவுக்கூறும் வகையில்தான்,  ஒவ்வொரு ஆண்டும்  இஸ்லாமியர்கள், தியாகத் திருநாளை கொண்டாடி மகிழ்கின்றனர்.

தியாகத் திருநாளின்போதுதான், ஹஜ் கடமையும்,  இஸ்லாமியர்களால் நிறைவேற்றப்படுகிறது.
இஸ்லாத்தின் ஐந்து தூண்களில் கடைசி தூண் ஹஜ் கடமையாகும்.
ஓர் இறைக் கொள்கையில் உறுதி.
தொழுகை நிறைவேற்றம்.
ரமலான் நோன்பு.
ஜகாத் வழங்கல்
இவையெல்லாம் மற்ற நான்கு தூண்கள்.  
ஐந்தாவது தூணான ஹஜ்ஜை, நிறைவேற்றும்போதுதான், உலக மக்கள் அனைவரும் காபா இறை இல்லத்தில் ஒன்று கூடி, உலக அமைதிக்காகவும், நன்மைக்காகவும், சகோதரத்துவம் வளரவும் மனம் உருவாகி துஆ செய்கின்றனர்.

அதாவது, இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றனர்.
மனிதன் எப்போதும் அவரசப் புத்திக்காரன். அவன் பாவங்கள் செய்வது  இயற்கை. அவற்றை தவிர்க்க முடியாது.
ஆனால், மனம் உருகி, கையேந்தி இறைவனிடம் மன்னிப்பு கேட்கும்போது, மனம் லேசு அடைகிறது.
மனசில் உள்ள அழுக்குகள் அகல்கின்றன.
இவையெல்லாம், ஹஜ் கடமையை நிறைவேற்றும் இஸ்லாமியர்கள், காபா இறை இல்லத்தில் மனம் உருகி செய்யும் பிரார்த்தனைகளால் கிடைக்கும் நன்மைகள்.

பல நாடுகள். பல மொழிகள். பல இனங்கள். பல நிறங்கள்.
இப்படி உலகின் பல பகுதிகளில் இருந்து மெக்கா நகரில் உள்ள காபா இல்லத்தில்  குவியும் இலட்சக்கணக்கான இஸ்லாமியர்கள், வேறுபாடுகளை மறந்து, மனித இனம், ஓரே குலத்தைச் சேர்ந்தது என்பதை உணர்ந்து அன்பு மலர, சகோரத்துவம் வளர பிரார்த்தனை செய்கின்றனர்.
இதன்மூலம், வேறுபாடுகள் மறைகின்றன.
பிரிவுகள் களைகின்றன.
மனிதன் தூய்மையான மனிதனாக மாறுகின்றான்.

மீண்டும், அவரவர் நாடுகளுக்கு சென்று, மனித குலம் படைக்கப்பட்டதன் உண்மையான நோக்கம், மனித குலம் எப்படி ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பது குறித்து அனைவரிடமும் தெரிவிக்கின்றனர்.
இவையெல்லாம், ஹஜ் கடமையை நிறைவேற்றும் ஒவ்வொரு இஸ்லாமியர்களுக்கு கிடைக்கும் நன்மைகள்.
உலக மக்களுக்கு மறைமுகமாக கிடைக்கும் படிப்பினைகள்.
ஆக, தியாகங்களை செய்ய அனைவரும் முன் வருவோம்.
அந்த தியாகங்கள் மூலம், மனித குலத்திற்கு நன்மைகள் கிடைக்கும்.
ஓர் இறைக் கொள்கையை உள்ளத்தில் பதிய வைத்துக் கொண்டு, வீண் கலாசாரப் பண்பாடுகளை தூக்கி எறிவோம்.


அனைத்து தரப்பு மக்கள் மீதும் அன்பு செலுத்துவோம்.
இனம், மொழி, நிறம் ஆகியவற்றை தூக்கி எறிந்து விட்டு, மனிதன் இறைவனின் படைப்பு.
ஓர் குலத்தைச் சேர்ந்தவன்.
என நினைத்துக் கொண்டு, தியாகங்களை செய்வோம்.  

குடும்பத்திற்காகவும், நண்பர்களுக்காகவும், உறவினர்களுக்காகவும் ஒருமுறை தியாகங்கள் செய்து பாருங்கள்.
உண்மையிலேயே உள்ளத்தில் மகிழ்ச்சி பிறக்கும்.

மறுமுறை தியாகம் செய்ய  ஆசை பிறக்கும்.

இதுதான், நபி இப்ராஹீம் (அலை), நபி இஸ்மாயில் (அலை) ஆகியோர் செய்த தியாகங்கள் மூலம் மனிதர்களுக்கு கிடைக்கும் படிப்பினைகள்.
எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
(தியாகத் திருநாளை முன்னிட்டு எழுதப்பட்ட கட்டுரை)

No comments: