அழைப்பு
பணியில் ஏ.ஆர்.ரஹ்மான்……..!
S.A.அப்துல்
அஜீஸ்
என் குழந்தைகள்
குர்ஆன் ஓதுவதைப்
பார்க்கும்போது
மகிழ்ச்சியாக இருக்கிறது
- ஏ.ஆர்.ரஹ்மான்
என்னது….
இஸ்லாமிய அழைப்பு பணியில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானா…!
ஆச்சரியத்துடன்
உங்களது புருவங்களை நீங்கள் உயர்த்துவது நன்றாகவே தெரிகிறது.
அண்மைக்
காலமாக செய்தி ஊடகங்களுக்கும், தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும், ஏ.ஆர்.ரஹ்மான் அளித்து
வரும் பேட்டிகளை நீங்கள் கவனத்துடன் படித்து இருந்தால், அல்லது பார்த்து இருந்தால்,
நான் சொல்வது எவ்வளவு உண்மை என்பது தெளிவாக புரிய வரும்.
இஸ்லாம்
குறித்தும், திருக்குர்ஆன் குறித்தும், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களிடம்
எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்தும் வாழ்க்கையை எப்படி அணுக வேண்டும்
என்பது குறித்தும் தன்னுடைய பேட்டிகளின்போது, ஏ.ஆர்.ரஹ்மான் பல நல்ல கருத்துக்களை சொல்லாமல்
இருப்பது இல்லை.
ஜெயா
தொலைக்காட்சியாக இருக்கட்டும், சன் டி.வியாக இருக்கட்டும், வெளிநாடுகளின் அல்–ஜஜீரா
அல்லது பி.பி.சி., தொலைக்காட்சிகளாக இருக்கட்டும், இதேபோன்று, பிற செய்தி நிறுவனங்கள்
எடுக்கும் நேர்காணல் எதுவாக இருந்தாலும், அதில், தாம் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பிறகு,
தம்முடைய வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்கள், வளர்ச்சிகள்.,
மன அமைதி, குறித்த பல தகவல்களை நிச்சயம் எடுத்துக்கூற
ஏ.ஆர்.ரஹ்மான் சிறிதும் தயங்குவதில்லை.
இப்படிதான்,
அண்மையில், தீபாவளி திருநாளையொட்டி, ஜெயா டி.வி.யில் ஏ.ஆர்.ரஹ்மானின் பேட்டி ஒளிப்பரப்பப்பட்டது.
அந்த பேட்டியை எடுத்த பாடகி சின்மயி, ஏ.ஆர்.ரஹ்மானிடம்
பல சுவையான கேள்விகளை கேட்டார். இசைத்துறை பற்றிய கேள்விகள் மட்டுமல்லாமல், வாழ்க்கையின்
உயரத்திற்கு சென்ற பிறகு, எப்படி, அமைதியாக, தலைக்கனம் இல்லாமல் உங்களால் இருக்க முடிகிறது
என ரஹ்மானிடம் வினா எழுப்பப்பட்டது.
இதேபோன்று,
அவரது குடும்பம் குறித்தும் சில கேள்விகளை பாடகி சின்மயி கேட்டபோது, ரஹ்மான், மிகவும்
அமைதியாக, சாந்தமாக பதில் அளித்தார்.
வாழ்க்கையில்
உயரத்திற்கு செல்லும்போதுதான், பொறுப்புகள் அதிகம் என கூறிய ரஹ்மான், எல்லாமே, இறைவனின்
விருப்பப்படி நடைபெறுகிறது என தாம் நினைப்பதாகவும் எனவே, தனக்கு கிடைக்கும் புகழ்,
இறைவனால் கிடைப்பதால், அதுகுறித்து கர்வமோ, தலைக்கனமோ தனக்கு ஏற்படுவதில்லை என்றார்.
குடும்பத்தில்
தன் தாய்க்கு நல்ல மகனாக, குழந்தைகளுக்கு நல்ல தந்தையாக, சகோதரிகளுக்கு நல்ல சகோதரனாக,
மனைவிக்கு நல்ல கணவனாக, உறவினர்களுக்கு நல்ல உறவினராக தாம் இருக்க தொடர்ந்து முயற்சி
செய்வதாக ரஹ்மான் தெரிவித்தார்.
குடும்பத்
தலைவனாக மற்றவர்களுக்கு நல்ல முன்மாதிரியாக இருந்தால் மட்டுமே, தனது பிள்ளைகளும் நல்ல ஒழுக்கத்துடன், தன்னை கேள்விகள்
எதுவும் கேட்காமல் வளர்வார்கள் என்றும், தாமே, முன்மாதிரியாக இல்லாமல் இருந்தால், குழந்தைகளை
எப்படி, முன்மாதிரியாக வளர்க்க முடியும் என்றும் வினா எழுப்பினார் ரஹ்மான்.
தம்முடைய
குழந்தைகள் திருக்குர்ஆனை மிக நன்றாக, அழகாக படிக்கும்போது, தம்மால் அதுபோன்று, வாசிக்க
முடியவில்லையே என்று தாம் பல நேரங்களில் வருத்தம் அடைந்ததாகவும், தாம் 30 வயதில் திருக்குர்ஆனை
படிக்க ஆரம்பித்ததாகவும், ஆனால் தம்முடைய குழந்தைகள் இளம் பருவத்திலேயே மிக துள்ளியமாக
குர்ஆனின் வசனங்களை வாசித்து, அதன்படி நடக்க முயலுவதை பார்க்கும்போது, தமக்கு ஒருவிதத்தில்
பொறாமையாக இருக்கிறது என்றும் சிரித்தார் ரஹ்மான்.
மற்றவர்களிடம்
பேசும்போது அழகிய வார்த்தைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதில் தம்முடைய குழந்தைகள்
குர்ஆனின் வசனங்களை மேற்கோள் காட்டி, கூறுவதை கேட்கும்போது, உண்மையிலேயே மகிழ்ச்சி
ஏற்படுகிறது என்று தெரிவித்தார் ரஹ்மான்.
இதேபோன்று,
நிகழ்ச்சிக்கு வந்த இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா, ரஹ்மான் குறித்து பேசும்போது, அவரது எளிமை,
மற்றவர்கள் மீது அன்பு பாராட்டுவது என பல குணங்களை எடுத்துக்கூறி, திரைப்படத்துறையில், புறம்பேசுவது வழக்கமாக இருக்கும்
நடைமுறை என்றும், பிறரின் வெற்றி, தோல்விகள்
குறித்து, பலர் பேசி மகிழ்வார்கள் என்றும் தெரிவித்தார். இது திரைப்படத்துறையில் மட்டுமல்லாமல்
பிற துறைகளிலும் இருப்பது வழக்கமான ஒன்று என்றும் கூறிய இயக்குநர் சூர்யா, ஆனால், ஏ.ஆர்.ரஹ்மான்,
மற்றவர்கள் குறித்து புறம்பேசுவதை ஒருபோதும் விரும்புவதில்லை என்றார்.
அப்படிப்பட்ட
நேரங்களில், பேச்சின் திசையை மாற்றிவிட்டு, உடனே வேலையில் கவனம் செலுத்துவதுதான் ரஹ்மானின்
பழக்கம் என்றும் பாராட்டு தெரிவித்தார் சூர்யா.
அப்போது
குறுக்கிட்ட ரஹ்மான், புறம்பேசுவது இஸ்லாத்தில்
அனுமதிக்கப்படாத ஒன்று என்றார். புறம்பேசுவது எந்தளவுக்கு இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ளது
என்பதை மிக ஆழமாக அறிந்து வைத்துள்ள ஏ.ஆர்.ரஹ்மான், அதனை வாழ்க்கையில் கடைப்பிடித்து,
மற்றவர்களுக்கும் குறிப்பாக திரைப்படத்துறையைச் சேர்ந்த சிலருக்கு மறைமுகமாக எடுத்து
கூறி வருவது எவ்வளவு நல்ல விஷயம் அல்லவா….
நிகழ்ச்சியில்
பங்கேற்ற இயக்குநர்கள் வசந்த், கதிர் உள்ளிட்டோரும் ரஹ்மானிடம் இருந்து கற்றுக் கொள்ள
நல்ல விஷயங்கள் ஏராளமாக உள்ளன என்று பாராட்டு தெரிவித்தனர்.
திரைப்படத்துறையில்
மது பழக்கம் இல்லாதவர்கள் இல்லை என்ற நிலையே தற்போது இருந்து வருகிறது.
ஆனால்,
ஏ.ஆர்.ரஹ்மான் இதற்கு முற்றிலும் விதிவிலக்கு…
மது
அருந்தினால்தான் நல்ல இசை வரும் என் மூட நம்பிக்கை பலருக்கு இன்னும் இருக்கிறது.
போதை
தலைக்கு ஏறினால், இசை காற்றில் பறக்கும் என்ற நம்பிக்கையில் நம்வூர் இசையமைப்பாளர்கள்
மட்டுமல்லாமல், உலகத்தில் புகழ் பெற்ற இசையமைப்பாளர்கள் சிலரும் இருந்து வருகின்றனர்.
இதுகுறித்து
சன் டி.வி.யில் ஒளிப்பரப்பான பேட்டியின்போது, சிரிப்பு நடிகர் விவேக், ரஹ்மானிடம் கேள்வி எழுப்பினார்.
ரஹ்மான்
மிக அழகாக பதில் அளித்தார். மதுவுக்கும் இசைக்கும் சிறிதும் சம்பந்தம் இல்லை.
இசை….
இறைவன் கொடுத்த வரம்… திறமை… சிலர் நினைப்பதுபோன்று, மதுவால் நல்ல இசையை உருவாக்கவே
முடியாது என்று அடித்து கூறினார் ரஹ்மான்.
மதுவின்
தீமைகள் குறித்து இஸ்லாம் சொல்லும் பாடங்கள் ஏராளம். அவற்றையெல்லாம், தனது உள்மனதில்
வாங்கிக் கொண்டதால், இன்றுவரை, அந்த தீமையில் சிக்கவில்லை ரஹ்மான்.
மற்றவர்களுக்கும்
மதுவின் தீமை குறித்தும் பாதிப்பு குறித்தும் எடுத்துக்கூறும் ரஹ்மான், மதுவினால் சில
குடும்பங்கள் சிரழிந்து போனதை தாம் நேரில் பார்த்து இருப்பதாகவும் தம்முடைய பேட்டிகளின்போது சொல்லாமல் இருப்பதில்லை.
இரண்டு
ஆஸ்கர் விருதுகள் பெற்றபோது, எப்படி உங்களால் அமைதியாக எல்லாப் புகழும் இறைவனுக்கே
என அழகிய தமிழில் சொல்ல முடிந்தது என ரஹ்மானிடம் கேட்கப்பட்டது.
10
பேர் இருக்கும் இடத்தில் என்னை நினைத்துக் கொண்டால், நூறு பேர் இருக்கும் இடத்தில்
உன்னை நான் உயர்த்துவேன்… 100 பேர் இருக்கும் இடத்தில் என்னை நினைத்துக் கொண்டால் ஆயிரம்
பேர் இருக்கும் இடத்தில் உன்னை உயர்த்துவேன் என்கிறான் இறைவன்…
அந்த
எண்ணம் என் உள்மனதில் ஆழமாக இருந்து வருகிறது. அதுமட்டுமல்ல, திறமைசாலியாக என்னை இறைவன்
படைத்தது என்னுடைய அதிர்ஷ்டம்… எனவேதான், எல்லாப் புகழும் இறைவனுக்கே என என்னால் சொல்ல
முடிகிறது. அதன்மூலம், என் தலைகனத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்க முடிகிறது என்றார்
ரஹ்மான்.
பல
நாடுகளுக்கு சென்று பணிபுரியும் வாய்ப்பு கிட்டும்போது, அங்குள்ள பள்ளிவாசல்களுக்கு
சென்று தொழுவது அதனால் கிடைக்கும் சுகம், அமைதி ஆகியவற்றை குறித்தும் ரஹ்மான் தன்னுடைய
பேட்டியின்போது, அழகாக வெளியிட்டார்.
உலகில்
அமைதி நிலவ வேண்டும்.. உலக அமைதிக்காக தன்னுடைய பணிகள் இருக்கும் என்றும், அமைதியை
வலியுறுத்தி இசை நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்றும் ரஹ்மான் கூறியபோது, உண்மையிலேயே
மகிழ்ச்சி ஏற்பட்டது.
ஏன்,
இஸ்லாம் அமைதியை விரும்பும் மார்க்கம் அல்லவா… இதனை ரஹ்மான் ஆழமாக உணர்ந்து இருப்பதால்தான்,
உலக அமைதிக்காக தன்னுடைய பணிகள் இருக்கும் என்றும், அனைத்து மக்களும் சகோதரத்துவ எண்ணத்துடன்,
கலாச்சார, பராம்பரிய வேற்றுமைகள் இருந்தாலும், ஓர் இறைவன் ஓர் குலம் என்ற உயர்ந்த கருத்தை
உள்வாங்கி அமைதியாக வாழ வேண்டும் என்றும் ரஹ்மான் கருத்தை வெளியிட்டு, அதன்மூலம், பிறருக்கு,
நல்ல ஒரு மெஜேசை தெரிவித்துள்ளார்.
இப்படி,
பல பேட்டிகளில் ரஹ்மான், தரும் விளக்கங்கள், தகவல்கள்… மூலம், இஸ்லாம் எந்தளவுக்கு
அவரது வாழ்க்கையில் மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறது என்பதை உணர்த்துகிறது.
ரஹ்மானின்
நடவடிக்கைகளை கவனிக்கும் திரைப்படத்துறையினர், அவரை போன்று ஏன் நாமும் மாறக்கூடாது
என்று மனதில் நினைக்கவே செய்கின்றனர்.
இப்படி,
மறைமுகமாக, மற்றவர்களுக்கு இஸ்லாமிய அழைப்பு பணி விடுத்து வருகிறார் ரஹ்மான்.
அதில்
ஒருசிலர் உண்மையிலேயே மாற்றங்களை காணலாம்… அல்லது காணாமல் போகலாம்…
அது
அல்லாஹ்வின் விருப்பம்…
ஆனால்,
வாழ்க்கையில் வசதி வாய்ப்புகள் வந்தபோதும், உயரத்திற்கு சென்ற பிறகும், இஸ்லாமிய வாழ்க்கை நெறியில்
இருந்து பிறழாமல், நல்ல ஒழுக்கத்துடன் வாழ்ந்து மற்றவர்களுக்கு நல்ல முன்மாதிரியாக
ரஹ்மான் இருந்து வருவது ஒரு நல்ல அழைப்பு பணி என்றே கூறலாம்…
இது
மற்றவர்களின் வாழ்க்கையில் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும்…
திருக்குர்ஆனின்
கருத்துக்கள், நபிமொழியின் கருத்துக்கள், இஸ்லாமிய நெறிகள் ஆகியவற்றை
மற்றவர்களும் அறிய அல்லது படிக்க தூண்டுவதும்,
ஓர் ஆர்வத்தை ஏற்படுத்துவதும் நல்ல அழைப்பு
பணி அல்லவா…
மாற்று
மத சகோதரர்களுக்கு இஸ்லாமிய புத்தகங்களை கொடுப்பது மட்டுமே, அழைப்பு பணி அல்ல.
நல்ல
இஸ்லாமியனாக வாழ்ந்து, மற்றவர்களுக்கு முன்மாதிரியாக திகழ்வதும் ஓர் அழைப்பு பணிதான்.
இதைத்தான்
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது மறைமுகமாக செய்து வருகிறார்…
நாமும் முடிந்தவரை நல்ல இஸ்லாமியர்களாக வாழ்ந்து,
மற்றவர்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்து, அழைப்பு பணியில் நம்மையும் ஈடுபடுத்திக் கொள்ளலாம்
அல்லவா….
______________________________________________________________
ஜனவரி 16-31 சமரசம் இதழில் வெளிவந்த கட்டுரைதான் மேலே நீங்கள் படித்தது. கட்டுரையை வெளியிட்ட சமரசம் இதழ் நிர்வாகிகள் மற்றும் ஆசிரியருக்கு நன்றி....
No comments:
Post a Comment