Tuesday, March 25, 2014

மதுவுக்கு எதிராக ஓர் போர்....! (73)

"மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்....!"

நாள்- 73

தமிழகத்தில் தாய்மார்களின் கண்ணீருக்கு டாஸ்மாக் கடைதான் காரணம்.....!

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேச்சு....!

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் அரசியல் நிலைப்பாடுகளில் எனக்கு நிறைய முரண்பாடுகள் உண்டு.

ஒவ்வொரு தேர்தலிலும் வைகோ எடுக்கும் முடிவு, அவருக்கு பாதகமாகவே இருந்து வருகிறது. வரலாறு அப்படிதான் நிகழ்வுகளை பதிவு செய்துள்ளது. .

இந்த முறை அவர் எடுத்த நிலைப்பாடு குறித்து வரும் மே 16ஆம் தேதி தெரிந்து விடும்.

ஆனால், மதுவுக்கு எதிராக அவர் செய்யும் பிரச்சாரம் உண்மையிலேயே மிகவும் பாராட்டத்தக்கது.

தேர்தல் பிரச்சாரத்தில் கூட, தமிழகத்தில் இருந்து மதுவை விரட்ட வேண்டும் என்ற எண்ணத்தில், உயர்ந்த ஆசையில் வைகோ பேசியிருக்கிறார்.

தேர்தல் காலங்களில் மது ஆறாக ஓடும்போது, இவர், மதுவே கூடாது என்று பேசுவது ஆச்சரியம்.

ஆனால், மதுவை எப்படியும் ஒழித்துவிட வேண்டும் என்ற வைகோவின் ஆசையை நான் பாராட்டுகிறேன். அவரை வாழ்த்துகிறேன்.

இதே விருதுநகர் தொகுதியில் வைகோ பேசிய பேச்சு உங்கள் பார்வைக்கு...

தமிழகத்தில் தாய்மார்களின் கண்ணீருக்கும், இளைஞர்களின்  சீரழிவுக்கும் காரணம் டாஸ்மாக் கடைதான் என தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் வேட்பாளரும், மதிமுகவின் பொதுச்செயலாளருமான வைகோ குற்றஞ்சாட்டினார்.

விருதுநகர் சட்டப்பேரவை தொகுதியில் பா.ஜ.க கூட்டணியின் சார்பில் மதிமுக பொதுச் செயலாளர் போட்டியிடுகிறார். அதனால், இப்பகுதியில் தனது ஆதரவாளர்கள் மற்றும் கூட்டணி கட்சியினருடன் தீவிர பிரசாரமும் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் (25.03.2014) சூலைக்கரையில் பொதுமக்களிடம் தனக்கு ஆதரவு அளிக்கக் கோரி வைகோ பேசியதாவது: தமிழகத்தில் உள்ள தாய்மார்களின் கண்ணீருக்கு காரணம், அரசு நடத்தும் டாஸ்மாக் கடைதான் என குற்றஞ்சாட்டினார்.

இதனால், இளைஞர்களும் சீரழிந்து வருகிறார்கள் என்பதை அறிந்து வேதனை அடைகிறேன்.

இதை ஒழிக்க வேண்டும் என்பதற்காக கிராமங்கள் தோறும் பொதுமக்களிடம் விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவதற்காகவும் 1500 கி.மீ தூரம் நடைபயணம் மேற்கொண்டேன்.

அப்போது கிராமங்களில் உள்ள பெண்கள் மற்றும் இளைஞர்கள் ஆகியோர் வரவேற்றார்கள்.

இப்படி பேசி இருக்கிறார் வைகோ.

நல்ல பேச்சு....மதுவுக்கு எதிரான இந்த பேச்சை நான் வரவேற்கிறேன்.

என்னுடைய பதிவிலும் பதிவு செய்கிறேன்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
=======================

Wednesday, March 19, 2014

மதுவுக்கு எதிராக ஓர் போர்....! (72)

"மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்....!"

நாள் - 72

சரக்கடிக்கும் காட்சிகள் இனி என் படத்தில் எப்போதும் இடம் பிடிக்காது....!

நடிகர் உதயநிதி ஸ்டாலின் உறுதி....!

மது தொடர்பான காட்சிகள் இந்திய திரைப்படங்களில் கட்டாயம் இடம் பெறுவது தற்போது வழக்கமாக மாறிவிட்டது.

மது அருந்தும் காட்சிகள் இடம் பெறாத திரைப்படங்களே இல்லை எனலாம்.

இந்த காட்சிகளை காணும் இளம் சமுதாயம் அந்த பழக்கத்திற்கு அடிமையாகி வருகிறார்கள் என்பது உண்மை.

தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளாக ஹீரோக்கள் சோகமான மற்றும் சந்தோஷமான தருணங்களில் டாஸ்மாக் உட்பட மதுபான விடுதிகளுக்கு சென்று குடிப்பது போல் கட்சி அமைப்பட்டு வருகிறது.

இதனை பார்க்கும் ரசிகர்கள் அப்படியே பின்பற்றுவதாக புகார் எழுந்து வருகிறது.

மேலும், விஜய், அஜீத் உட்பட முன்னணி நடிகர்களை தங்கள் கனவு நாயகனாக சித்தரித்து கொண்டு, அவர்கள் திரைப்படங்களில் செய்யும் காட்சிகளை ரசிகர்கள் அப்படியே பின்பற்றுவதால், மது அருந்துவது, புகை பிடிப்பது உள்ளிட்ட காட்சிகளை தவிர்க்க வேண்டும் என்று பல்வேறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தமிழ் நடிகர்களில் பலர் மது அருந்தும் காட்சிகளை தங்கள் படங்களில் வைப்பதை தவிர்த்து வருகின்றனர்.

தற்போது, அந்த வரிசையில் தமிழ் நடிகர் உதயநிதி ஸ்டாலின் இடம் பெற்றுள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் இனி தான் நடிக்கும் படங்களில் மது அருந்தும் காட்சிகள் கண்டிப்பாக எப்போதும் இடம் பெறாது என அறிவித்துள்ளார்.

நடிகர்கள் செய்வதை அப்படியே ரசிகர்கள் பின்பற்றுகிறார்கள் என கூறியுள்ள அவர், தாம் பாரம்பரியமிக்க குடும்பத்தில் இருந்து வந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

எனவே, சமூகத்திற்கு தவறான முன்னுதாரணமாக தாம் இருக்கக் கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.

எனவே, இனி தம்மை வைத்து படம் இயக்கும் இயக்குநர்களிடம் இனிமேல், மது அருந்துவது போன்ற காட்சியில் கண்டிப்பாக இனி நடிக்க மாட்டேன் என்பதை தெரிவித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அதன்படி, இனி தாம் நடிக்கும் படங்களில் மது அருந்தும் காட்சிகள் இருக்காது என்று உதயநிதி தெரிவித்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடி, இது கதிர்வேலன் காதல் உள்ளிட்ட படங்களில் மது அருந்தும காட்சிகள் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

எனினும் இனி மது அருந்தும் காட்சிகள் இடம் பெறாது என வாக்குறுதி அளித்துள்ள நடிகர் உதயநிதி ஸ்டாலினுக்கு நமது பாராட்டுகள்...

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================

Saturday, March 8, 2014

"மதுவுக்கு எதிராக ஓர் போர்.....! (71)

"மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்.....!"  

நாள் - 71


மதுவை ஒழிக்க மகளிர் தினத்தில் உறுதியேற்போம்.....!

பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள்......!!

மகளிருக்கு உண்மையான சுதந்திரமும், நிம்மதியும் கிடைக்க வேண்டுமானால், அதற்கான முதல்படியாக தமிழ்நாட்டில் மட்டுமின்றி, இந்தியா முழுவதும் மது ஒழிக்கப்படவேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

மகளிர் தினத்தையொட்டி அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில்,
மகளிரின் முக்கியத்துவத்தையும், மகளிருக்கு சமத்துவமும், சம உரிமையும் வழங்கப்பட வேண்டும் என்பதன் அவசியத்தையும் வலியுறுத்தும் வகையிலான சர்வதேச மகளிர் நாள் (மார்ச் 8) கொண்டாடப்படும் நிலையில் மகளிர் சமுதாயத்திற்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.

இந்தியா உள்ளிட்ட உலகின் பல நாடுகளில் மகளிருக்கு வாக்குரிமை வழங்கப்பட்டுவிட்ட போதிலும் சமத்துவம், சுதந்திரம் போன்றவை மகளிருக்கு தொடுவானமாகவே தோன்றுகின்றன என ராமதாஸ் கூறியுள்ளார்.

இந்த நிலையை மாற்றி இவற்றை பெண்கள் எட்டிப்பிடிக்கும் நிலையை ஏற்படுத்த வேண்டும் என்றும்,  பெண்களுக்கு மரியாதை கொடுத்த வரலாற்றுக்கு சொந்தமான தமிழகத்தில், பெரும்பாலான அடித்தட்டு மற்றும் நடுத்தர குடும்பத்து பெண்களின் நிலை இன்று மிகவும் மோசமாக இருக்கிறது என்றும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

இதற்கான அடிப்படைக் காரணம் மதுதான் என ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.


குடும்பங்களைச் சீரழிக்கும் மதுவை அரசே விற்பனை செய்து கொண்டு, அரசே மகளிர் நாளையும் கொண்டாடுவது முரண்பாடுகளின் உச்சமாகவே இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மகளிருக்கு உண்மையான சுதந்திரமும், நிம்மதியும் கிடைக்க வேண்டுமானால் அதற்கான முதல்படியாக தமிழ்நாட்டில் மட்டுமின்றி, இந்தியா முழுவதும் மது ஒழிக்கப்படவேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

அந்த இலக்கை நோக்கி அனைத்து வடிவங்களில் போராட மகளிர் தின நாளில் மகளிர் மட்டுமின்றி அனைவரும் உறுதியேற்க வேண்டும் என்றும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================

மதுவுக்கு எதிராக ஓர் போர்...! (70)

"மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்......!" 

நாள் - 70


பெண்களைப் பாதுகாக்க மதுவை எதிர்க்கிறோம்.....!

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ......!!

பெண்கள் மீதான பாலியல் கொடுமைகளுக்கு மதுதான் மூல காரணமாகும் என்பதால், மதுவை எதிர்த்து அறப்போர் நடத்துவதாக, மதிமுக பொதுச் செயலர் வைகோ கூறியுள்ளார்.

மகளிர் தினத்தையொட்டி (8.4.2014) அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில்,

பெற்ற தாயை உற்ற தெய்வமாக போற்றி வணங்கும் பண்பாடு பன்னெடுங்காலமாக தமிழர்கள் கடைப்பிடிக்கும் நெறியாகும்.

உலகெங்கும் பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை நீக்கி, அவர்கள் அனைத்துத் துறைகளிலும் தனி வாழ்விலும், பொதுவாழ்விலும் உரிமையும் பாதுகாப்பும் உள்ளவர்களாக வாழ்வதற்கு எண்ணற்ற கிளர்ச்சிகளைப் பெண்களே முன்நின்று நடத்தினர்; உரிமைகளும் பெற்றனர்.

அண்மைக் காலமாக இந்தியாவில் பல பகுதிகளிலும், தமிழ்நாட்டிலும் பெண்கள் பாலியல் வன்முறைக்கும் தாக்குதலுக்கும் ஆளாகி பெரும் துன்பத்திலும், அவலத்திலும், கண்ணீரிலும் தவிப்பதுதான் இன்றைய நிலை ஆகும்.

தமிழ்நாட்டில் பல இடங்களில் பெண்கள் பாலியல் கொடுமைக்குப் பலியாகிறார்கள். சின்னஞ் சிறுமிகளைக்கூட சமுதாயக் கழுகுகளான கயவர்கள் பாலியல் இச்சைக்கு ஆளாக்குகிறார்கள் என்பது நினைத்துப்பார்க்கவே இயலாத கொடுமையாகும்.

மிருகங்களைவிட மோசமான அக்கிரம இழிசெயல்களில் இவர்கள் ஈடுபடுவதற்கு மதுதான் மூல காரணமாகும் என்பது ஒவ்வொரு சம்பவத்திலும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

அதனால்தான் மதுவை எதிர்த்து அறப்போர் நடத்துகிறோம்.


கண்ணியத்தோடும், உரிமையோடும், பாதுகாப்போடும் பெண்கள் வாழ்வதற்கு உத்தரவாதம் அளிக்கும் நிலமையை ஏற்படுத்த உலக மகளிர் நாளில் உறுதி ஏற்போம்! என்று வைகோ தனது வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.

பெண்களின் நலனுக்காக மதுவை எதிர்க்கும் வைகோவிற்கு எமது பாராட்டுகள்..

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================

புகைபிடிக்காதீங்க ப்ளீஸ்.......!

புகைபிடிக்காதீங்க ப்ளீஸ்.......!

கவுன்சலிங் கொடுக்கும் எஸ்.ஐ......!!


பொதுஇடங்களில் புகைபிடிப் பவர்களை பிடித்து, அவர்களுக்கு கவுன்சலிங் கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார் சென்னை மாம்பலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் எஸ்.ராஜா.

சென்னை மாம்பலம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக இருப்பவர் எஸ்.ராஜா. கடந்த 29 ஆண்டுகளாக காவல்துறையில் பணியாற்றி வரும் இவர், சிறு வயதில் இருந்தே புகை பிடிக்கும் பழக்கத்துக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். இப்பழக்கத்துக்கு எதிராக கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து விழிப்புணர்வு பணிகளை செய்து வருகிறார்.

இதுகுறித்து அவரிடம் கேட்ட போது, “புகைபிடிக்கும் ஒவ்வொரு மனிதரும் தன்னையும் எரித்துக் கொண்டு, அருகில் இருக்கும் மற்றவர் களையும் அழிக்கிறார்். ஒவ்வொரு முறையும் புகையை உள்ளே இழுக்கும்போது சுவாச உறுப்புகள் மட்டுமல்லாது அனைத்து உடல் உறுப்புகளும் பாதிக்கப்படுகின்றன. இந்தியாவில் 'போலியோ' என்ற நோய் இப்போது கிடையாது. கடந்த 20 வருட கடுமையான முயற்சிக்கு கிடைத்த பலன் இது. போலியோ குறித்து மக்களிடம் ஏற்பட்ட விழிப் புணர்ச்சி மட்டுமே இந்த நோய் ஒழிக்கப்பட்டதற்கு முதன்மையான காரணம். அதே போன்ற ஒரு விழிப் புணர்ச்சியை புகைபிடிக்கும் பழக்கம் உள்ள வர்களிடமும் உருவாக்க வேண்டும். இந்த விழிப்புணர்வை கொண்டுவந்தால் போதும், எல்லாம் சரியாகிவிடும்.

என்னுடன் பணிபுரியும் சக காவலர்களிடம் புகைபிடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து முதலில் கவுன்சலிங் கொடுத்தேன். அதனால் சிலர் திருந்தினார்கள். இதைத் தொடர்ந்து நான் காவல் பணிக்கு செல்லும் இடங்களில் என் கண்ணில் படும் புகைபிடிக்கும் அனைவரையும் பிடித்து கவுன்சலிங் கொடுத்து வரு கிறேன். நான் போலீஸ் உடையில் இருப்பதால் என்னை எதிர்த்து பேச முடியாமல், நான் சொல்வதை கேட்டே தீரவேண்டும் என்கிற ஒரு கட்டாயம் அவர்களுக்கு ஏற்பட்டது. அவர்களின் செல்போன் எண்ணை வாங்கிக்கொண்டு சில நாட்களுக்கு பின்னர் அவர்களை தொடர்பு கொண்டு மீண்டும் பேசுவேன். இப்படி தொடர்ச்சியாக செய்ய ஆரம்பித்ததில் பலர் திருந்தியிருக்கிறார்கள். இப்படி திருந்தியவர்கள் மூலம் மேலும் பலரும் என்னிடம் கவுன்சலிங்கிற்காக வந்தனர்.

பின்னர் புகைபிடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஒரு துண்டுப் பிரசுரம் தயார் செய்தேன். அதை நான் செல்லும் இடங்களிலெல்லாம் விநியோகம் செய்ய ஆரம்பித்தேன். எனது செயலை பாராட்டி சில சமூக நிறுவனங்கள் விருதுகளை வழங்கின.

இந்திய மக்கள் தொகையில் 12 கோடி பேர் புகைபிடிக்கின்றனர். இதனால் ஆண்டுக்கு 9 லட்சம் பேர் இந்தியாவில் மட்டும் மரணம் அடைகின்றனர். விழிப்புணர்வு இல்லாதது மட்டுமே இதற்கு காரணம். அந்த விழிப்புணர்வை கொடுக்க நினைக்கும் நபர்களும் மிகக்குறைவு. மற்றவர்களை குறைகூறுவதைவிட நானே களத்தில் இறங்கி விட்டேன்" என்றார்.

நன்றி: தி இந்து தமிழ் நாளிதழ் (8.3.2014)
=====================================

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் யார்.....?

வேலூர் நாடாளுமன்ற தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் யார்.....?

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள முக்கிய கட்சிகளில் ஒன்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக்.

கூட்டணியில் அந்த கட்சிக்கு வேலூர் நாடாளுமன்ற தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வேலூர் தொகுதியின் வேட்பாளரை தேர்வு செய்து குறித்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் அவசர செயற்குழுக் கூட்டம் சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் 8.3.2014 அன்று நடைபெற்றது.

அதில் தேர்தல் குறித்தும் அதன் பணிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

அப்போது பல புகைப்படங்கள் எடுக்கப்பட்டன.

அந்த புகைப்படங்களில் ஒன்றுதான் இது....


மேலே,  நான் வெளியிட்டுள்ள புகைப்படத்தில், வேலூர் நாடாளுமன்ற தொகுதியின் வேட்பாளர் ஒருவர் இருக்கிறார்....

அவர் யார் என்பது குறித்து வரும் 10ஆம் தேதி உங்களுக்கே நிச்சயமாக தெரிய வரும்...

வேலூர் நாடாளுமன்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளருக்கு என்னுடைய அட்வான்ஸ் வாழ்த்துக்கள்...

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================

Friday, March 7, 2014

மதுவுக்கு எதிராக ஓர் போர்.....! (69)

"மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்.....!"  

நாள் - 69

சமூக அக்கறையுடன் திரைப்பட பாடல்கள் எழுதும் கவிஞர்களின் ஒருவர் கவிஞர் தாமரை.

திரைப்பட பாடல்கள் மட்டுமல்ல, சமூகத்தில் நிலவும் கொடுமைகளை கண்டு வேதனை அடையும் கவிஞர் தாமரை, அதை தமது கவிதைகள் மூலம் வெளிப்படுத்தியும் வருகிறார்.  ‘

இப்படிதான் மதுவுக்கு எதிராக அவர் ஒரு கவிதையை எழுதியுள்ளர்.
அந்த கவிதையையும், அதுகுறித்து  அவர் அளித்த விளக்கம் குறித்தும் முகநூலில் அவர் எழுதிய வார்த்தைகளை இங்கு தருவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

கவிஞர் தாமரைக்கு என்னுடைய பாராட்டுகள் மட்டுமல்ல, நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இனி, கவிஞர் தாமரையின் வார்த்தைகள்.....

சமூகத்தில் சொல்லொவொண்ணா சீரழிவை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் ஒரு கொடுமையைப் பற்றி இப்போது பரவலாக எல்லோரும் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்...

மது என்னும் மாஅரக்கன் தன் ஆயிரம் கைகளால் சமூகத்தை வளைத்து நெறித்து குருதியை உறிஞ்சி எலும்புகளைத் துப்பிக் கொண்டிருக்கிறான்.... ஆனாலும் எதுவுமே நடவாதது போல எல்லோரும் அவரவர் ( தத்தம் மதுவை அருந்திய வண்ணம்) வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

யாராவது பேசியே ஆக வேண்டிய கட்டாயம் வந்து விட்டது... சமூகத்தின் பெரிய மனிதர்கள் கையில் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் , நன்று... நாமும் உரத்துப் பரப்புரை செய்வோம்..தேர்தல் நேரம், கட்சிகள் முழுமதுவிலக்கை தங்கள் அறிக்கையில் கொடுக்க நாம்தான் நிர்ப்பந்திக்க வேண்டும்.. தமிழகம் மதுவற்ற மாநிலமாக மாற வேண்டும்.

இன்னொன்று , இந்தக் கொடுமையால் பெண்கள் தாம் அதிகம் பாதிக்கப் படுகிறார்கள். வார்த்தைகளால் சொல்லத் தக்கன அன்று !.

ஆண்களின் கள்ள மௌனம் எதனால் என்பது தெளிவு !. நீதியரசர் சந்துரு, தமிழருவி மணியன் ஐயா, ஞாநி அவர்கள், மருத்துவர் ராமதாஸ் ஐயா, வைகோ அவர்கள், பெரியவர் சசிப் பெருமாள்.... யார் இதற்கு எதிராகக் குரல் கொடுப்பினும், சாதி,கட்சி, வர்க்க வேறுபாடு பார்க்காமல் அவர்களோடு இணைந்து குரல் கொடுப்பது நம் கடமை !. என் ஆதரவு எப்போதும் உண்டு.

மதுக்கொடுமை பற்றி ஒரு கவிதை.. 2004 இல் எழுதப்பட்டது.. உங்களுக்காக இங்கே பதிவிடுகிறேன்...


வலி குடித்தல் !
--------------------

மீனைப் போல் நீந்தும் திறன்
பெறுகிறது இந்த அறை
உங்களால்
புகைமூட்டத்துக்கு நடுவே நீங்கள்
தள்ளாடியபடி நிற்கிறீர்கள்

உங்கள் கிண்ணங்கள் வேதனைகளாலும்
ஆற்றொண்ணாத் துயரங்களாலும்
நிரம்பி வழிகின்றன

வெளிர்வண்ண, அடர்வண்ணத்
திரவங்களில் மிதக்கின்றன
தோலுரிந்த கெட்டவார்த்தைகளும்
பூச்சற்ற முனகல்களும்....

உங்கள் மனைவிகள் கறுப்பாகவும்
சப்பை மூக்கிகளாகவும் இருக்கிறார்கள்
அவர்களது வளைவுகளும் நெளிவுகளும்
உங்கள் கைக்கு அடங்குவதாயில்லை

உங்கள் மேலதிகாரிகள் பெரும் முரடர்கள்
உங்கள் பதவி உயர்வுக்குக் குறுக்கே
விரித்துக் கொள்கிறார்கள் தங்கள்
படுக்கைகளை
நீங்கள் வறுமையில் வாடும்போது
உங்கள் நண்பர்கள் மாடமாளிகைகளில்
வசிக்கிறார்கள்

உங்கள் வணிகம் நசிந்து வருவது
யாருக்கும் புரிவதில்லை
உங்கள் உடல் உழைப்புக்கு
அவசியம் தேவைப்படுகிறது
ஒரு திரவ ஒத்தடம் !

உங்கள் போத்தலின் பொன்மட்டம்
குறையக் குறைய உங்களின்
துயரங்கள் உதிர்ந்து
சிறகாக வடிவம் பெறுகின்றன
காற்றின் சிகரங்களில் நீங்கள்
சஞ்சரிக்கிறீர்கள்...

வேட்டிவிலக தெருவில் நீங்கள்
கிடக்கும் போது நாய்கள்
உங்கள் பிண்டத்தை லபக்கிக் கொண்டு
ஓடாமல் தாங்கிக் கொள்ளக் கிடைக்கின்றன

எப்போதும் இரண்டு கைகள்
வீடு கொண்டு சேர்க்கும் அவை
தாயுடையதா, தாரத்துடையதா
என்று பிரித்துப் பார்க்கத் தேவையின்றி...

இரவெல்லாம் பாடுபட்டுக்
காப்பாற்றிவிட்டனர் மருத்துவர்கள்
வாயும் குடலும் வெந்த
பெண்சிசுவை...
கள்ளிப் பாலைத் தாண்டிவிட்டது, நன்று
இன்னும் போக நெடுந்தூரம் உள்ளது

உங்கள் கிடங்குகளில் இல்லை
எங்கள் வலிகளுக்கான மது!

அது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை
எனினும் சேமிக்கத் தொடங்கிவிட்டோம்
எங்களுக்கான திராட்சைகளை !

-தாமரை, 2004

மதுவுக்கு எதிராக அருமையான கவிதை வரிகளை வரைந்த கவிஞர் தாமரைக்கு மீண்டும் ஒருமுறை நன்றி., பாராட்டுகள்...

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================

Wednesday, March 5, 2014

மதுவுக்கு எதிராக ஓர் போர்.....! (68)

"மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்.....!" 

 நாள் - 68



இரண்டு கிரைம்கள்...!  எல்லாமே மதுவால்.......!!

மதுவால் நடக்கும் அட்டூழியங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகின்றன.

இளம் தலைமுறையினர் மதுப்பழக்கத்திற்கு ஆளாகி, குற்றச்செயல்களில் ஈடுபடுவது தற்போது அதிகரித்து வருகிறது.

நாளிதழ்களை, வார இதழ்களை பிரித்தால், மதுவின் தீமையால் ஏற்படும் கிரைம்கள் குறித்து செய்திகள் அவற்றில் கட்டாயம் இடம் பிடிக்கின்றன.

சென்னையில் அண்மையில்  இரண்டு கிரைம் சம்பவங்கள் நடந்தன.

இவை, இரண்டும் மது அருந்திய போதையில் செய்யப்பட்ட குற்றச் செயல்கள்...

வாருங்கள்....அந்த சம்பவங்களை பார்ப்போம்...

முதலாவது சம்பவம்....!

மது குடிப்பதை கண்டித்த மனைவி எரித்து கொலை...!.கணவன் கைது...!!

சென்னை குன்றத்தூர் அருகே தண்டலம் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ். பெயிண்டிங் தொழில் செய்யும் இவரது மனைவியின் பெயர் தாரா. தாரா கோவூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

இருவரும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர்கள். இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகின்றன.

சந்தோஷுக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு. தினமும் இரவில் மது அருந்திவிட்டு, மனைவியுடன் தகராறு செய்வாராம் சந்தோஷ்.


இதேபோன்று, கடந்த 2.3.2014 அன்று இரவும் சந்தோஷ் மது குடித்துவிட்டு வர, அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, தாரா கணவரை கண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த சந்தோஷ், சமையல் அறையில் இருந்து மண்ணெண்ணெய்யை தாரா மீது ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பி ஓடினார்.

தீயில் கருகிய தாராவை அருகில் இருந்தவர்கள் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் தாரா பரிதாபமாக உயிரிழந்தார்.

இரண்டாவது சம்பவம்.....!

நண்பனை தீ வைத்து கொல்ல முயன்றவர் கைது...!

நெய்வேலியை அடுத்த மாற்றுக் குடியிருப்பைச் சேர்ந்தவர்கள் மணிகண்டன், செல்வக்குமார். இருவரும் நண்பர்கள்.


மதுப்பழக்கம் கொண்ட இவர்கள், கடந்த 2.3.2014 அன்று இரவு, நெய்வேலி நேரு சிலை அருகே அமர்ந்து ஒன்றாக மது அருந்தினார்கள்.

போதை தலைக்கு ஏறியதும், போதையில் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த செல்வக்குமார், பைக்கிற்கு பாட்டிலில் வாங்கி வைத்திருந்த பெட்ரோலை மணிகண்டன் மீது ஊற்றி தீ வைத்தார்.

தகவல் அறிந்த போலீசார், உயிருக்குப் போராடிய மணிகண்டனை மீண்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

படித்தீர்களாக நண்பர்களே...இரண்டு சம்பவங்களும், குற்றங்களும் மதுவால், மதுவின் போதையால் ஏற்பட்டது.

இப்படிப்பட்ட போதை நமக்கு (சாரி) மக்களுக்கு தேவையா...அமைதியான வாழ்க்கையை இழந்து, சிறையில் வாட வேண்டுமா....


குற்றச்செயல்களுக்கு ஆணிவேராக இருக்கும் மதுவை ஒழிக்க அரசு முன்வர வேண்டும் அல்லவா...

மதுப்பழக்கம் உள்ளவர்கள், தங்கள் திருத்திக் கொள்ள வேண்டும் அல்லவா....

நிச்சயம் நல்லது நடக்கும்...நம்புவோம்...

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================

மதுவுக்கு எதிராக ஓர் போர்....! (67)

"மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்....! "  

நாள் - 67

தேர்தலின்போது 'மது ஆறு' ஓடுவதை தடுக்க தேர்தல் ஆணையம் திட்டம்...!

டாஸ்மாக்குக்கு புதிய நிபந்தனைகள் விதிக்க முடிவு....

உற்பத்திக் கூடங்களில் சிசிடிவி; தினமும் விற்பனை விவரம் அறிய திட்டம்...

தேர்தலின்போது வாக்காளர் களுக்கு மது விநியோகம் செய் வதை தடுக்கும் வகையில் பல நடவடிக்கைகளை எடுக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

தினசரி விற்பனை விவரத்தை தெரிவிக்க வேண்டும். மது குடோன்களில் சிசிடிவி வைக்க வேண்டும் என்பது உள்பட பல அதிரடி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட உள்ளன.

தேர்தல் காலங்களில் வாக்காளர்களைக் கவர பணத்துடன் மது பாட்டில்களும் ரகசிய மாக விநியோகிக்கப்படுவதாக தொடர்ந்து புகார் கூறப்பட்டு வருகிறது.

தேர்தல் காலத்தில் மதுக்கடைகளில் விற்பனையும் வழக்கத்தைவிட அதிகம் நடக் கிறது. இதை கருத்தில் கொண்டு, தேர்தல் காலங்களில் மதுவிற்பனை மட்டுமின்றி, மது உற்பத்திக் கூடங்கள் மற்றும் மது பாட்டில் குடோன்களையும் தனது கண்காணிப்பு வலைக்குள் கொண்டுவர தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதற்காக பல்வேறு நெறிமுறைகளை தேர்தல்துறை வகுத்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு அதிகாரிகளுக்கு விளக்கும் வகையில் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் டாஸ் மாக் நிர்வாக இயக்குநர் சவுண் டையா, மதுவிலக்கு ஆணையர் மாலிக் பெரோஸ் கான், அமலாக்க கூடுதல் டிஜிபி காந்தி ராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

மது விற்பனை கண்காணிப்பு தொடர்பாக தேர்தல் துறை கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் உள்ள மது உற்பத் திக் கூடங்கள், வடிப்பாலைகள், மது பாட்டில் குடோன்கள் ஆகியவற்றில் கட்டாயம் சிசிடிவி கேமரா பொருத்தி மதுவிலக்கு மற்றும் கலால் பிரிவு அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.


டாஸ்மாக் கடைகளில் தினசரி நடைபெறும் விற்பனை, வருமானம் குறித்த தகவலை அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள், தேர்தல் செலவுக் கணக்கு பார்வையாளருருக்கு கலால் அதிகாரிகள் தினமும் அனுப்ப வேண்டும். தேர்தல் வரை, ஒருநாள் விட்டு ஒரு நாள் அந்த தகவல்களை தலைமை தேர்தல் அதிகாரிக்கு அனுப்பவேண்டும்.

கடந்த ஆண்டில் இதே கால கட்டத்தில் டாஸ்மாக்கில் நடந்த மது விற்பனை விவரங்களையும் இணைத்து அனுப்பவேண்டும். ஒவ்வொரு மதுக்கடை, குடோன், மது உற்பத்திக் கூடங்களில் தினசரி இருப்பு பற்றிய விவரங் களையும் தெரியப்படுத்த வேண்டும் என்பது உள்பட பல நெறிமுறைகள் வகுக்கப்பட்டி ருப்பதாக கூட்டத்தில் தெரிவிக்கப் பட்டது.

கடந்த ஆண்டைவிட விற்பனை பல மடங்கு அதிகரித்தால், அந்த இடங்களை கண்காணிக்க வசதியாக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இத்தகைய அதிரடி நடவடிக்கைகள் மூலம், மது பாட்டில்களைக் கொடுத்து வாக்காளர்களைக் கவரும் முயற்சிகள் ஓரளவு தடுக்க முடியும் என்று தேர்தல் துறையினர் நம்பிக்கை தெரிவித்தனர்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================

Tuesday, March 4, 2014

மதுவுக்கு எதிராக ஓர் போர்...! (66)

"மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்...!" 

நாள் - 66


பேருந்து நிலையமா? திறந்தவெளி மதுக்கூடமா?

புனிதத் தலமான வேளாங்கண்ணியில் வேதனை

பேருந்து நிலையத்தின் உள்ளே அவசரத் தேவைக்காக உயிரைக் காக்கும் மருந்துக் கடைகள் இருக்கிறதோ இல்லையோ இப்போதெல்லாம் கட்டாயமாக உயிரைப் பறிக்கும் டாஸ்மாக் மதுக்கடைகள் இருக்கின்றன. புனிதத் தலமான வேளாங்கண்ணி பேருந்து நிலையத்தில் இருக்கும் ஒரு மதுக்கடையால் அந்த பேருந்து நிலையமே திறந்தவெளி மது அருந்தும் கூடமாக மாறியிருக்கிறது.

உலகப் புகழ்பெற்றிருந்தாலும் வேளாங்கண்ணி மிகச் சிறிய ஊர். அதனால் பேருந்து நிலையமும் மிகச்சிறியதுதான். சின்னச் சின்ன கடைகள் சூழ இருந்த பேருந்து நிலையம் கடந்த பத்தாண்டு காலத்தில்தான் கொஞ்சம் கொஞ்ச

மாக வசதிகளோடு பளபளக்கத் தொடங்கியிருக்கிறது. பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றிய பேரூராட்சி நிர்வாகம் சொந்தமாக வணிக வளாகம் கட்டி கடைகளை வாடகைக்கு விட்டிருக்கிறது. அந்த கடைகளில் 15-ம் எண் கடையில் டாஸ்மாக் கடையும் இருக்கிறது. அதுதான் மொத்த பேருந்து நிலையத்துக்கும் தற்போது பெரும் இடையூறாகவும் அவலமாகவும் இருக்கிறது.

வேளாங்கண்ணிக்கு அன்றாடம் ஆயிரக்கணக்கில் மக்கள் வந்து போகிறார்கள். அவர்கள் வந்து பேருந்து நிலையத்தில் மாதாவை காணப்போகும் பரவசத்தோடு இறங்கினால் அங்கே மது குடித்த மயக்கத்தில் திரியும் தன்னிலை மறந்தவர்களையும், பேருந்து நிலையம் முழுவதிலும் ஆங்காங்கே அமர்ந்து மது குடித்துக் கொண்டிருப்பவர்களையும்தான் பார்க்க முடியும். யாரைப் பற்றியும், எதைப்பற்றியும் கவலைப்படாமல் கிடைத்த இடத்தை ‘பார்’ என நினைத்துக் கொண்டு கும்பலாக உட்கார்ந்து ஊற்றிக் கொண்டிருப்பார்கள் குடிமகன்கள்.

பேருந்து நிலையமாயிற்றே குழந்தைகள், பெண்கள் வருகிறார் களே என்ற குறைந்தபட்ச நாகரிகம் கூட குடிமகன்களுக்கு இருப்பதில்லை. வெளியூர் பக்தர்கள் மட்டுமல்ல, உள்ளூர்க்காரர்களும் அந்தப் பக்கம் வந்துதான் ஆகவேண்டும். காரணம் காய்கறி மார்க்கெட், மீன் மார்க்கெட், பால்பூத் என்று எல்லாமும் அங்கேதான் இருக்கின்றன. இதில் ஏதாவது ஒன்று தேவைப்பட்டாலும் பேருந்து நிலையத்துக்கு வந்து குடிமகன்களின் கலாட்டாவையும், வசைமொழிகளையும் சந்தித்துதான் ஆகவேண்டும். குடிமகன்களைத் தட்டிக் கேட்டால் அடிதடி ஆகிறது.


ஒவ்வொரு நாளும் அடிதடி, பெண்களிடம் கலாட்டா என்பது ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பேருந்தை விட்டு இறங்கியதும் மதுக்கடையைப் பார்த்த உற்சாகத்தில் மதுவை அருந்திவிட்டு போதையில் கடலில் குளிக்கும்போது காணாமல்போய் பின்னர் சடலமாகத்தான் மீட்கப்படுகின்றனர். இப்படி பலமுனை ஆபத்துகளை தன்னகத்தே வைத்திருக்கிற மதுக்கடையைப் பேருந்து நிலையத்தில் வைத்

திருப்பது சரிதானா நியாயம்தானா? என்று கேட்டதற்கு வேளாங்கண்ணி பேரூராட்சி தலைவர் தாமஸ் ஆல்வா எடிசன் ‘தி இந்து’விடம் கூறியது:

“சத்தியமா நியாயம் இல்லை, அதனால்தான் 2002 டிசம்பர், 2003 ஜூன் என்று இரண்டு முறை பேருராட்சியில் அந்த மதுக்கடையை அகற்றக் கோரி தீர்மானம் போட்டு மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்பியிருக்கிறோம். ஆனால், அதற்கு பலன்தான் இல்லை. நாங்கள் என்ன செய்வது? கடையை அகற்றவேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்திருக்கிறோம்.

டாஸ்மாக் நிர்வாகம் இதில் வரும் வருமானத்தை மட்டும் தான் பார்க்கிறதே தவிர, இதனால் மக்களுக்கு ஏற்படும் இடையூறுகளைப் பார்க்க மறுக்கிறது. மோர்க்கார சிறுவனுக்கு மாதா காட்சி கொடுத்த இடத்திலிருந்து வெறும் 50 மீட்டர் தொலைவில் இருக்கும் இந்த மதுக்கடையை அந்த இடத்தின் புனிதம் கருதியாவது உடனே அகற்ற வேண்டும்” என்று அவரும் சேர்ந்து கோரிக்கை வைக்கிறார்.


மாவட்ட நிர்வாகமும், டாஸ்மாக் நிர்வாகமும் கொஞ்சம் மனசு வைக்கத்தான் வேண்டும்.

வார கடைசியில் ஒரு நாள் வியாபாரம் ரூ.5 லட்சம்

சுற்றுப்புற கிராமங்களிலிருந்து பொருள்கள் வாங்குவதற்காக நகரத்துக்கு வரும் பெரும்பாலான ஆண்கள் தாங்கள் கொண்டுவரும் பணத்தில் பாதிக்கும் அதிகமாக டாஸ்மாக் கடைக்குதான் செலவிடுகின்றனர். வேளாங்கண்ணி பேருந்து நிலையத்தில் உள்ள 15-ம் எண் டாஸ்மாக் கடையின் ஒரு நாள் சராசரி வியாபாரம் ரூ.3 லட்சம். அதுவே வார கடைசி என்றால் ரூ. 5 லட்சம் முதல் 6 லட்சம். உள்ளூர் கடை என்றால் சராசரியாக நாளைக்கு ரூ.1.5 லட்சம் விற்பனை ஆவதாக டாஸ்மாக் ஊழியர்கள் தெரிவித்தனர்.

நன்றி...தி இந்து தமிழ் நாளிதழ்

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
=====================