Friday, March 7, 2014

மதுவுக்கு எதிராக ஓர் போர்.....! (69)

"மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்.....!"  

நாள் - 69

சமூக அக்கறையுடன் திரைப்பட பாடல்கள் எழுதும் கவிஞர்களின் ஒருவர் கவிஞர் தாமரை.

திரைப்பட பாடல்கள் மட்டுமல்ல, சமூகத்தில் நிலவும் கொடுமைகளை கண்டு வேதனை அடையும் கவிஞர் தாமரை, அதை தமது கவிதைகள் மூலம் வெளிப்படுத்தியும் வருகிறார்.  ‘

இப்படிதான் மதுவுக்கு எதிராக அவர் ஒரு கவிதையை எழுதியுள்ளர்.
அந்த கவிதையையும், அதுகுறித்து  அவர் அளித்த விளக்கம் குறித்தும் முகநூலில் அவர் எழுதிய வார்த்தைகளை இங்கு தருவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

கவிஞர் தாமரைக்கு என்னுடைய பாராட்டுகள் மட்டுமல்ல, நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இனி, கவிஞர் தாமரையின் வார்த்தைகள்.....

சமூகத்தில் சொல்லொவொண்ணா சீரழிவை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் ஒரு கொடுமையைப் பற்றி இப்போது பரவலாக எல்லோரும் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்...

மது என்னும் மாஅரக்கன் தன் ஆயிரம் கைகளால் சமூகத்தை வளைத்து நெறித்து குருதியை உறிஞ்சி எலும்புகளைத் துப்பிக் கொண்டிருக்கிறான்.... ஆனாலும் எதுவுமே நடவாதது போல எல்லோரும் அவரவர் ( தத்தம் மதுவை அருந்திய வண்ணம்) வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

யாராவது பேசியே ஆக வேண்டிய கட்டாயம் வந்து விட்டது... சமூகத்தின் பெரிய மனிதர்கள் கையில் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் , நன்று... நாமும் உரத்துப் பரப்புரை செய்வோம்..தேர்தல் நேரம், கட்சிகள் முழுமதுவிலக்கை தங்கள் அறிக்கையில் கொடுக்க நாம்தான் நிர்ப்பந்திக்க வேண்டும்.. தமிழகம் மதுவற்ற மாநிலமாக மாற வேண்டும்.

இன்னொன்று , இந்தக் கொடுமையால் பெண்கள் தாம் அதிகம் பாதிக்கப் படுகிறார்கள். வார்த்தைகளால் சொல்லத் தக்கன அன்று !.

ஆண்களின் கள்ள மௌனம் எதனால் என்பது தெளிவு !. நீதியரசர் சந்துரு, தமிழருவி மணியன் ஐயா, ஞாநி அவர்கள், மருத்துவர் ராமதாஸ் ஐயா, வைகோ அவர்கள், பெரியவர் சசிப் பெருமாள்.... யார் இதற்கு எதிராகக் குரல் கொடுப்பினும், சாதி,கட்சி, வர்க்க வேறுபாடு பார்க்காமல் அவர்களோடு இணைந்து குரல் கொடுப்பது நம் கடமை !. என் ஆதரவு எப்போதும் உண்டு.

மதுக்கொடுமை பற்றி ஒரு கவிதை.. 2004 இல் எழுதப்பட்டது.. உங்களுக்காக இங்கே பதிவிடுகிறேன்...


வலி குடித்தல் !
--------------------

மீனைப் போல் நீந்தும் திறன்
பெறுகிறது இந்த அறை
உங்களால்
புகைமூட்டத்துக்கு நடுவே நீங்கள்
தள்ளாடியபடி நிற்கிறீர்கள்

உங்கள் கிண்ணங்கள் வேதனைகளாலும்
ஆற்றொண்ணாத் துயரங்களாலும்
நிரம்பி வழிகின்றன

வெளிர்வண்ண, அடர்வண்ணத்
திரவங்களில் மிதக்கின்றன
தோலுரிந்த கெட்டவார்த்தைகளும்
பூச்சற்ற முனகல்களும்....

உங்கள் மனைவிகள் கறுப்பாகவும்
சப்பை மூக்கிகளாகவும் இருக்கிறார்கள்
அவர்களது வளைவுகளும் நெளிவுகளும்
உங்கள் கைக்கு அடங்குவதாயில்லை

உங்கள் மேலதிகாரிகள் பெரும் முரடர்கள்
உங்கள் பதவி உயர்வுக்குக் குறுக்கே
விரித்துக் கொள்கிறார்கள் தங்கள்
படுக்கைகளை
நீங்கள் வறுமையில் வாடும்போது
உங்கள் நண்பர்கள் மாடமாளிகைகளில்
வசிக்கிறார்கள்

உங்கள் வணிகம் நசிந்து வருவது
யாருக்கும் புரிவதில்லை
உங்கள் உடல் உழைப்புக்கு
அவசியம் தேவைப்படுகிறது
ஒரு திரவ ஒத்தடம் !

உங்கள் போத்தலின் பொன்மட்டம்
குறையக் குறைய உங்களின்
துயரங்கள் உதிர்ந்து
சிறகாக வடிவம் பெறுகின்றன
காற்றின் சிகரங்களில் நீங்கள்
சஞ்சரிக்கிறீர்கள்...

வேட்டிவிலக தெருவில் நீங்கள்
கிடக்கும் போது நாய்கள்
உங்கள் பிண்டத்தை லபக்கிக் கொண்டு
ஓடாமல் தாங்கிக் கொள்ளக் கிடைக்கின்றன

எப்போதும் இரண்டு கைகள்
வீடு கொண்டு சேர்க்கும் அவை
தாயுடையதா, தாரத்துடையதா
என்று பிரித்துப் பார்க்கத் தேவையின்றி...

இரவெல்லாம் பாடுபட்டுக்
காப்பாற்றிவிட்டனர் மருத்துவர்கள்
வாயும் குடலும் வெந்த
பெண்சிசுவை...
கள்ளிப் பாலைத் தாண்டிவிட்டது, நன்று
இன்னும் போக நெடுந்தூரம் உள்ளது

உங்கள் கிடங்குகளில் இல்லை
எங்கள் வலிகளுக்கான மது!

அது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை
எனினும் சேமிக்கத் தொடங்கிவிட்டோம்
எங்களுக்கான திராட்சைகளை !

-தாமரை, 2004

மதுவுக்கு எதிராக அருமையான கவிதை வரிகளை வரைந்த கவிஞர் தாமரைக்கு மீண்டும் ஒருமுறை நன்றி., பாராட்டுகள்...

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================

No comments: