Wednesday, March 11, 2015

அரை லூஸ்களின் கூடாரம்...!

அரை லூஸ்களின் கூடாரம்...!


நீண்ட நாட்களுக்கு பிறகு சென்னைக்கு வந்த அந்த நண்பரைச் சந்தித்தேன்.

காட்பாடியில் இருந்து வந்திருந்தார்.

தம்முடைய பணிகளை முடித்துக் கொண்டு என்னை செல்பேசியில் அழைத்தார்.

இருவரும் மதிய உணவை ஒன்றாக சாப்பிட்டோம்.

பெரியமேட்டில் உள்ள பிரியாணிக்கு புகழ் பெற்ற அந்த ஓட்டலில் நீண்ட நேரம் பேசிக் கொண்டே சுவையான பிரியாணியை ஒரு பிடி பிடித்தோம்.

பேச்சின் இடையே முகநூலில் நீங்கள் இணையவில்லையா என நண்பரிடம் கேட்டேன்.
நண்பர் சிரித்துக் கொண்டே இப்படி சொன்னார்.

அது அரை லூஸ்களின் கூடாரம்.
அதனால் தமக்கு ஆர்வம் இல்லை என்றார்.

என்னது அரை லூஸ்களின் கூடாரமா என நண்பரின் முகத்தை ஆச்சரியத்துடன் நோக்கினேன்.

ஆமாம் தலைவா (என்னை நண்பர் அப்படி அழைப்பதுதான் வழக்கம்) ஒரு நாள் அலுவலகத்தில் மற்றொரு நண்பர் முகநூலில் மூழ்கி இருந்த போது நானும் கூட அமர்ந்து என்னதான் இருக்கிறது என ஆவலுடன் கவனித்தேன்.

ஒரு சிலர் நல்ல கருத்துக்களை பதிவு செய்திருந்தார்கள்.

பலர் நான் இப்போது ரயிலில் பயணம் செய்கிறேன்.

நான் இப்போது கமலா திரையரங்கில் அனேகன் படம் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

நான் இப்போது தயிர் சாதம் சாப்பிடுகிறேன்.

நான் இப்போது வாக்கிங் போய் கொண்டிருக்கிறேன்.

என்ற பாணியில் பதிவு செய்திருந்தார்கள்.

சிலர் பார்க்க தகுதி இல்லாத படங்களை போட்டு இருந்தார்கள்.

சிலர் சினிமா நடிகர் நடிகை படங்களை போட்டு ஜே என்று எழுதி இருந்தார்கள்.

இதற்கு ஒரு கூட்டம் லைக் வேறு போட்டு இருந்தது.

முகநூலில் நல்ல கருத்துக்களை பதிவு செய்யாமல் அதை சிலர் பாழ்ப்படுத்தி வருகிறார்கள்.

அதனால் தமக்கு அதில் ஆர்வம் இல்லை என்றார் நண்பர்.

நண்பரின் குற்றச்சாட்டில் நியாயம் இருப்பதாக எனக்கு தோன்றியது.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்

Friday, March 6, 2015

புருஷனுக்கு மரியாதை..?

புருஷனுக்கு மரியாதை..?

திருவல்லிக்கேணி பெரிய தெரு சந்திப்பில் நண்பர் எஸ்.ஆர்.கே. வருகைக்காக காத்திருந்த போது என் அருகில் இருந்த பெண் ஒருவர் எதிர் முனையில் இருந்த தன்னுடைய கணவரை என்னங்க...என்னங்க..என கத்தி கத்தி அழைத்து கொண்டே இருந்தார்.

ஆனால் அந்த நபரோ கவனித்தப்பாடு தெரியவில்லை. பொறுமை இழந்த அந்த பெண் முண்டம் திரும்பி பார்க்குதா பார் என திட்ட ஆரம்பித்தார்.

பின்னர் எதிரில் சென்ற மற்றொரு நபர் மூலம் தனது கணவரை அழைத்த அந்த பெண் அவர் திரும்பி பார்த்ததும் கன்னா பின்னா என திட்ட ஆரம்பித்தார்.

நான் ஆடி போயிட்டேன்.

கணவனே கண் கண்ட தெய்வம் என மதிக்கும்; மரியாதை கொடுக்கும் நம்ப தமிழகத்தில் தற்கால பெண்கள் தங்களது புருஷனுக்கு கொடுக்கும் மரியாதை இதுதான்.

மதங்களை கடந்து மனிதம்...!

மதங்களை கடந்து மனிதம்...!

நீண்ட நாட்களுக்குப் பிறகு மாம்பலத்தில் இருக்கும் எஸ்.ஆர்.கே. (செந்தில் ராஜ்குமார் - சன் டிவி) வீட்டிற்கு சென்றேன்.

அவரது துணைவியார் அன்புடன் வரவேற்றார். 

நலம் விசாரித்தார்.

டிபன்..தேனீர் அளித்து விருந்தோம்பல் செய்து தமிழர் பண்பாட்டை வெளிப்படுத்தினார்.

விடை பெற்று திரும்பும் நேரம் என்னங்க பொங்கலுக்கு ஊருக்கு போனபோது சாருக்காக தொப்பி வாங்கினோமே எங்கே வெச்சிங்க என எஸ்.ஆர்.கே.விடம் அவரது துணைவியார் கேட்க ஆமாம் மறந்தே போச்சில்லே என எஸ்.ஆர்.கே. தன்னையே கோபித்துக் கொண்டார்.

பிறகு இருவரும் தேடி சிறிது நேரத்திற்குள் அழகான இரண்டு வெள்ளை நிற தொப்பியை என்னிடம் வழங்கினார்கள்.



ஒரு நிமிடம் நான் ஆடி போனேன்.

கோட்பாடு கொள்கை ரீதியாக வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அன்பு வெளிப்படுத்துவதில் தமிழர்கள் மனிதர்களாக இன்னும் மனித நேயத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது இந்த சம்பவத்தின் மூலம் உறுதியானது.

எஸ்.ஆர்.கே. தம்பதியினருக்கு என் நன்றி. வாழ்த்துக்கள்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்

எச்சரிக்கை...!

எச்சரிக்கை...!

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவாலின் சுனாமி அலையில் பிஜேபிக்கு மரண அடி.

இப்படிதான் மக்களும் செய்தி ஊடகங்களும் கருத்தை வெளியிட்டு வருகின்றன.

உண்மையில் கெஜ்ரிவால் அலை எதுவும் டெல்லியில் வீசவில்லை.

பிரதமர் மோடிக்கு எதிராக வீசிய மிக பயங்கரமான சுனாமி அலையின் பலன் ஆம் ஆத்மிக்கு கிடைத்துள்ளது.

இதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

பொய்யான வாக்குறுதிகளை வீசி பேசி பேசியே மக்களை ஏமாற்றலாம் என நினைக்கும் மோடி போன்ற விளம்பர பிரியர்களுக்கு மக்கள் கொடுத்த எச்சரிக்கை மணிதான் டெல்லி தேர்தல் முடிவுகள்.

=======================

கொண்டாட்டம்....!

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் வெற்றியை நாடே கொண்டாடுவது முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்ககளில் வரும் கருத்துகள் செய்திகள் மூலம் நன்றாக அறிய முடிகிறது.

பத்து லட்சம் ரூபாய் மதிப்பில் பிரதமர் மோடி கோட் சூட் அணிந்தால் மக்கள் கோபத்தை காண்பிக்காமல் என்ன செய்வார்கள் ?

மோடி ஜி உங்களுக்கு எட்டே மாத காலத்திற்குள் மக்கள் பாடம் கற்பித்துள்ளார்கள்.

டெல்லி தேர்தல் மோடி அரசின் செயல்பாடுகளுக்கான வாக்கெடுப்பு இல்லை என்ற சப்பை காரணங்களை கூறமால் இனி சுய விளம்பரத்திற்காக அதிகம் பேசாமல் நாட்டு மக்களுக்கு உண்மையாகவே நல்லதை செய்ய ஆர்வம் செலுத்துங்கள்.

சர்வாதிகார போக்கை கைவிடாது பேசி பேசியே மக்களை வெறுப்பேத்தினால் டெல்லி மக்களை போன்று நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் உங்களுக்கு பாடம் கற்பிக்க சிறிதும் தயங்க மாட்டார்கள்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்

சூடான பார்ட்டி....!

சூடான பார்ட்டி....!

இஸ்லாமியர்கள் மத்தியில் அண்மை காலமாக பொறுமை குணம் குறைந்து வருவது காண முடிகிறது.

என்னையும் சேர்த்துதான். (ஊடகத்துறையில் இருப்பதால் என்னவோ கொஞ்சம் வேகமாக செயல்பட்டு பொறுமை இழக்கிறேன்)

சமூக வலைத்தளம் தொலைக்காட்சி என பலவற்றில் நடக்கும் விவாதங்களை உன்னிப்பாக கவனித்தால் இது உண்மை என தெரிகிறது.

பொறுமை குணத்தை மிக உயர்வாக போதிக்கும் மார்க்கத்தில் இருந்து வந்த மக்கள் ஏன் இப்படி பொறுமையை இழந்து ஒற்றுமையை சீர்குலைத்து தங்களுக்குள் மோதிக் கொள்கிறார்கள் என புரியவில்லை.

அதனால்தான் என்னவோ தமிழகத்தில் இ.யூ.மு.லீ. த.மா.மு.லீ. த.மு.மு.க. ம.ம.க. இந்திய தேசிய லீக் த.மா.தே.லீக். தேசிய லீக். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத். இந்திய தவ்ஹீத் ஜமாஅத். ஜமாஅத் இ இஸ்லாமி. வெல்ஃபர் பார்ட்டி என 60க்கும் மேற்பட்ட இஸ்லாமிய அமைப்புகள் தோன்றி தாங்கள்தான் உண்மையான முஸ்லிம் அமைப்புகள் என கூறிக் கொள்கின்றன.

நாள்தோறும் இன்னும் பல அமைப்புகள் தோன்றி கொண்டே இருக்கின்றன.

ஆனால் பொறுமை ஒற்றுமை ஒருங்கிணைந்து செயல்படுதல் போன்ற நல்ல பண்புகள் இஸ்லாமிய அமைப்புகளிடம் காண்பது அரிதாக இருக்கிறது.

முஸ்லிம் மக்களுக்கு தாங்கள்தான் உண்மையாக உழைப்பதாக இந்த அமைப்புகள் கூறிக் கொள்கின்றன. பிற இஸ்லாமிய அமைப்புகளை தேவையில்லாமல் விமர்சனம் செய்கின்றன.

அதனால்தான் என்னமோ
எல்லோருமே சூடான பார்ட்டியாக இருக்கிறார்கள்.

வேண்டுமானால் பாருங்கள் இந்த கருத்தை பதிவு செய்த என்னை அர்த்தமற்ற மொழிகளால் வசைப்பாட பலர் லைன் கட்டி நிற்க போகிறார்கள்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்.

சரவணன் - மீனாட்சி...!


சரவணன் - மீனாட்சி...!

என் வாழ்க்கையில் மறக்க முடியாத நபர்களில் சகோதரர் சங்கரபாண்டியனும் ஒருவர். கடந்த 2008ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் எனக்கு ஏற்பட்ட விபத்தின் போது அவர் செய்த மனித நேய உதவிகள் மறக்க முடியாதவை.

சரி விஷயத்திற்கு வருகிறேன். 

கலைத்துறையில் ஆர்வம் கொண்ட இளைஞர் சங்கரபாண்டியன் பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு தற்போது தனது இலட்சியத்தை அடைந்துள்ளார்.



ஆம். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மக்களிடையே அமோக வரவேற்பை பெற்ற சரவணன் - மீனாட்சி தொடரில் அவரும் நடிக்கிறார். 


சாரி வாழ்கிறார்.

இந்த தகவலை அவர் செல்பேசி மூலம் எனக்கு தெரிவித்தபோது மனம் மகிழ்ச்சி அடைந்தது. அப்போதே அவரை வாழ்த்தினேன்.

பின்னர் அவரை அலுவலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன்.

கலைத்துறையில் சங்கரபாண்டியன் உச்சத்தை தொட்டு சாதனை புரிய வேண்டும்....வாழ்த்துக்கள்...

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்


தொப்பி....!

தொப்பி....!



இந்து மதத்தைச் சேர்ந்த சகோதரர் எஸ்.ஆர்.கே. (செந்தில் ராஜ்குமார் சன் தொலைக்காட்சி) அன்பைப் பொழிந்து மகிழ்ச்சியுடன் அளித்த வெள்ளை நிற தொப்பியை அணிந்து கொண்ட இஸ்லாமிய மார்க்கத்தைச் சேர்ந்த எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்.

கொள்கை கோட்பாடுகளில் நாம் வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் உண்மையான அன்பு மனித நேயம் மகிழ்ச்சி ஆகியவற்றை செலுத்துவதில் பரிமாற்றிக் கொள்வதில் நிஜ மனிதர்களாக இருந்து வருகிறோம்.

நம்மை போன்றவர்கள் நாட்டில் நிறைய பேர் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்.

மூன்று பேர்...!

மூன்று பேர்...!
சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் நடந்த சம்பவம் இது.

நீண்ட தாடி வைத்துக் கொண்டிருந்த இஸ்லாமியவர் ஒருவர் ஆட்டோ ஓட்டுநர் ஒருவரை கீழே தள்ளி நையப்புடைத்துக் கொண்டிருந்தார்.

ஒரு இஸ்லாமியனைப் பார்த்து எப்படிடா அந்த வார்த்தை கூறலாம் என கூறிக்கொண்டு மேலும் மேலும் அடித்து கொண்டிருந்தார்.

பிரச்சினை அவருக்கும் ஆட்டோ ஓட்டுநருக்கு என்பது புரிந்தது.

ஆனால் அடித்துக் கொண்டிருந்த இஸ்லாமியரோ துணைக்கு இஸ்லாத்தையும் அழைத்துக் கொண்டார்.

மற்றொரு சம்பவம்.

ஒரு நாள் மாநகர பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தேன். கூடவே மற்றொரு இஸ்லாமியரும் பயணம் செய்தார். நீண்ட தாடி இருந்தது.

பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்தது. உட்கார இடம் கிடைக்கவில்லை.

சிறிது தூரம் சென்றவுடன் அந்த இஸ்லாமியருக்கு இடம் கிடைத்தது. எனினும் பலர் நின்று கொண்டே பயணம் செய்து கொண்டிருந்தனர்.

சிறிது நேரத்திற்கு பிறகு பேருந்தில் இடம் காலி ஆனதும் நின்று கொண்டிருந்த பயணி ஒருவர் அதில் உட்கார ஆயுத்தமானார்.

ஆனால் அந்த இடத்தில் அமர அனுமதிக்காத இஸ்லாமியர் பேருந்தின் கடைசி பகுதியில் இருந்த தம்முடைய உறவினரை குவி குவி அழைத்தார். அவர் வரும் வரை யாரையும் காலியாக இருக்கும் பகுதியில் அமர அனுமதிக்கவில்லை.

எனவே அந்த இஸ்லாமியர் மீது பேருந்தில் இருந்த மற்ற பயணிகள் வெறுப்பு அடைந்து வாக்குவாதம் செய்தனர்.

மூன்றாவது சம்பவம்.

திருவல்லிக்கேணி பாரதி மெஸ்ஸில் சாப்பிட்டு கொண்டிருந்தேன்.

அங்கேயும் நீண்ட தாடியுடன் வந்து இருந்த இஸ்லாமியர் அது சரியில்லை இது சரியில்லை என உரக்க உரக்க கூறி அட்டகாசம் செய்து கொண்டிருந்தார்.

மெஸ் ஊழியர்களைக் குறைக் கூறிக்கொண்டே இருந்தார்.

இதனால் அவரும் மெஸ்ஸில் இருந்த மற்றவர்களின் பார்வையில் நீண்ட நேரம் பட்டுக் கொண்டே இருந்தார்.

மூன்று சம்பவங்களிலும் அந்த மூன்று இஸ்லாமிய சகோதரர்கள் நடந்து கொண்ட விதம் இஸ்லாமியர்கள் எல்லோருமே இப்படிதான் போல என்ற அபிப்பிராயம் மாற்று மத சகோதரர்கள் மத்தியில் எழுந்தது.

அது நியாயம்தான்.

நம்முடைய ஒவ்வொரு செயல்கள் மூலம்தான் இஸ்லாம் குறித்து மற்றவர்களுக்கு நாம் எடுத்துச் சொல்ல முடியும் என்பதை பெரும்பாலான இஸ்லாமிய சகோதரர்கள் ஏனோ மறந்து விடுகிறார்கள்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்.

சிதைக்கப்படும் உறவுகள்....! (2)

சிதைக்கப்படும் உறவுகள்....! (2)

சில ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் இது.

செல்பேசி புழக்கத்தில் வராத காலம் அது.

வீட்டில் தொலைபேசி இருப்பது பெருமையாக கருதப்பட்ட நேரம்.

அந்த கால கட்டத்தில் நண்பர் ஒருவரின் வீட்டிற்கு சென்று இருந்தேன்.

வரவேற்று தேநீர் கொடுத்தார். நலம் விசாரித்தார்.

நீண்ட நேர பேச்சின் போது தொலைபேசி அழைக்கும் சப்தம் கேட்டது.

நண்பரின் முகம் திடீரென வேறு மாதிரியாக மாறியது.

தொலைபேசியின் அழைப்பை அவரது மகன் வந்து கவனித்தார்.

நான் இயல்பாக இருந்தேன்.

நண்பர் திடீரென என்னை பார்த்து இப்படி கூறினார்.

தொலைபேசி என்னுடைய உறவினர் ஒருவரது. சும்மா கொஞ்ச நாட்கள் இங்கே இருக்கட்டும் என கொண்டு வந்து வைத்துள்ளார்.

நான் புன்முறுவலை அவருக்குப் பதிலாக தந்தேன்.

சிறிது நேரப் பேச்சுக்குப் பிறகு நண்பரிடம் இருந்து விடைபெற்று வீடு திரும்பினேன்.

ஆனால் நண்பரின் செயல் மட்டும் என் மனதை விட்டு விலகவில்லை.

நண்பர் புதிதாக தொலைபேசி இணைப்பை வாங்கி உள்ளார். அது மகிழ்ச்சியான செய்தி.

ஆனால் அது தனது இல்லை. உறவினர் ஒருவரது என நண்பர் கூற காரணம் என்ன ?

எங்கே நான் பொறாமை அடைந்து விடுவோனோ என்ற தவறான எண்ணம்தான்.

ஒருவர் வாழ்க்கையில் முன்னேறும் போது அதைப் பார்க்கும் மற்றொருவர் தமக்கும் அது போன்ற வளர்ச்சி கிடைக்க வேண்டும் என நினைப்பது மனித இயல்பு.

அதை எப்படி பொறாமை என கற்பனை செய்து கொள்ளலாம்.

நண்பர் அப்படிதான் கற்பனை செய்து கொண்டார்.

அதனால் நல்ல உறவுகள் சிதைந்து போனது.

நண்பர் உடனான நட்பில் விரிசல் ஏற்பட்டது.

இப்போதும் சந்திக்கிறோம். ஆனால் உண்மையான அன்பு பரிமாற்றம் இல்லை.

இது போன்ற சம்பவங்கள் உங்களில் பலருக்கும் நிகழ்ந்து இருக்கலாம்.

வாழ்க்கையில் நாம் செய்யும் சில சந்தேகங்கள் கற்பனைகள் வாழ்க்கையை அர்த்தமற்றதாக மாற்றி விடுகிறது.

அமைதியை இழக்கச் செய்கிறது.

உறவுகளை சிதைக்க காரணமாக அமைந்து விடுகிறது.

எனவே வீண் சந்தேகங்கள் கற்பனைகள் ஆகியவற்றை தவிர்ப்போம்.

அதன்மூலம் வாழ்க்கையில் உறவுகளைப் பேணி மகிழ்ச்சியாக அமைதியாக வாழ முயற்சி செய்வோம்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்.

சிதைக்கப்படும் உறவுகள்...!

சிதைக்கப்படும் உறவுகள்...!


இது சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம்.

நெருங்கி பழகிய நண்பர் ஒருவர் சட்டம் படித்து வழக்கறிஞராக பதிவு செய்தார்.

நம்முடைய சமுதாயத்தில் உள்ள இளைஞர்கள் கல்வியில் ஆர்வம் இல்லாமல் இருக்கும் நிலையில் நமக்கு நெருக்கமான நண்பர் வழக்கறிஞராக மாறியது உண்மையிலேயே மகிழ்ச்சி அளித்தது.

நண்பர் வழக்கறிஞராக பதிவு செய்த நாளில் என் சொந்த செலவில் சென்னைக்கு சென்று அவரை வாழ்த்தினேன்.

பல நண்பர்கள் வாழ்த்த நேரில் வரவில்லை.

சரி. விஷயத்திற்கு வருகிறேன்.

வழக்கறிஞராக மாறிய நண்பரின் போக்கில் சிறிது நாட்களிலேயே மாற்றங்கள் காண முடிந்தது.

பல்வேறு சந்தர்ப்பங்களில் நிகழ்ச்சிகளில் என்னை புறக்கணிக்க ஆரம்பித்தார்.

தம்முடைய தகுதிக்கும் அந்தஸ்துக்கு நான் ஏற்றவன் இல்லை என்பது அவரின் ஒவ்வொரு செயல்களும் உணர்த்தின.

என்னிடம் பேசுவதையும் நிறுத்திக் கொண்டார்.

இருந்தும் நான் நண்பரிடம் வழக்கம் போலதான் அன்பு பாராட்டி வந்தேன்.

ஈத் பெருநாள் வந்த போது நண்பர் வழக்கமாக வரும் குறிப்பிட்ட அந்த அலுவலகத்திற்கு சென்றேன்.

நண்பர் அன்று அங்கு வரவில்லை. சிறிது நேரம் காத்திருந்தேன். நண்பர் அலுவலக ஊழியருக்கு தொலைபேசி செய்தார்.

நான் வந்திருப்பதை அலுவலக ஊழியர் நண்பரிடம் தெரிவித்தார்.
நான் பேச விரும்புவதாகவும் கூறினார்.

நண்பர் பேசுவார். அவருக்கு ஈத் பெருநாள் வாழ்த்து தெரிவிக்கலாம் என ஆவலுடன் காத்திருந்தேன்.

நண்பர் என்ன செய்தார் தெரியுமா...!

தொலைபேசியில் பேசிய அலுவலக ஊழியரிடம் அவருக்கு நீயே வாழ்த்து சொல்லிடுப்பா என கூறி தொலைபேசி இணைப்பை தூண்டித்தார்.

சார் உங்களுக்கு லாயர் சார் வாழ்த்து சொல்ல சொன்னார் சார் என்றார் அலுவலக ஊழியர்.

எனக்கு ஒன்றுமே புரியவில்லை.

நல்ல நாளிலும் வாழ்த்துக்களை அன்பைப் பரிமாற்றிக் கொள்ள நண்பர் விரும்பவில்லை. அவருக்கு மனம் இருக்கவில்லை.

என்னிடம் பழகுவதை கவுரவ குறைச்சலாக கருதினார். தமது அந்தஸ்துக்கு ஏற்றதில்லை என எண்ணினார்.

அந்த நண்பரின் நட்பை அன்றே உதறி தள்ளினேன்.

மதிக்காதவர்களின் வீட்டில் பிணமாக கூட படுக்காதே என்று எங்கோ படித்தது நினைவுக்கு வந்தது.

வசதி வாய்ப்புகள் குறைவாக இருக்கும் போது ஒரு மாதிரியாகவும் செல்வம் அந்தஸ்து உயரும் போது வேறு மாதிரியாகவும் கண்டும் காணாமல் போகும் இத்தகைய மனிதர்களின் நட்பு தொடர்ந்தால் என்ன தொடராமல் போனால் என்ன.

உறவுகளைச் சிதைக்கும் இத்தகைய நபர்களிடம் எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

வாழ்க்கையில் எனக்கு அனுபவம் சொல்லித் தந்த பாடம் இது.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்.