சிதைக்கப்படும் உறவுகள்....! (2)
சில ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் இது.
செல்பேசி புழக்கத்தில் வராத காலம் அது.
வீட்டில் தொலைபேசி இருப்பது பெருமையாக கருதப்பட்ட நேரம்.
அந்த கால கட்டத்தில் நண்பர் ஒருவரின் வீட்டிற்கு சென்று இருந்தேன்.
வரவேற்று தேநீர் கொடுத்தார். நலம் விசாரித்தார்.
நீண்ட நேர பேச்சின் போது தொலைபேசி அழைக்கும் சப்தம் கேட்டது.
நண்பரின் முகம் திடீரென வேறு மாதிரியாக மாறியது.
தொலைபேசியின் அழைப்பை அவரது மகன் வந்து கவனித்தார்.
நான் இயல்பாக இருந்தேன்.
நண்பர் திடீரென என்னை பார்த்து இப்படி கூறினார்.
தொலைபேசி என்னுடைய உறவினர் ஒருவரது. சும்மா கொஞ்ச நாட்கள் இங்கே இருக்கட்டும் என கொண்டு வந்து வைத்துள்ளார்.
நான் புன்முறுவலை அவருக்குப் பதிலாக தந்தேன்.
சிறிது நேரப் பேச்சுக்குப் பிறகு நண்பரிடம் இருந்து விடைபெற்று வீடு திரும்பினேன்.
ஆனால் நண்பரின் செயல் மட்டும் என் மனதை விட்டு விலகவில்லை.
நண்பர் புதிதாக தொலைபேசி இணைப்பை வாங்கி உள்ளார். அது மகிழ்ச்சியான செய்தி.
ஆனால் அது தனது இல்லை. உறவினர் ஒருவரது என நண்பர் கூற காரணம் என்ன ?
எங்கே நான் பொறாமை அடைந்து விடுவோனோ என்ற தவறான எண்ணம்தான்.
ஒருவர் வாழ்க்கையில் முன்னேறும் போது அதைப் பார்க்கும் மற்றொருவர் தமக்கும் அது போன்ற வளர்ச்சி கிடைக்க வேண்டும் என நினைப்பது மனித இயல்பு.
அதை எப்படி பொறாமை என கற்பனை செய்து கொள்ளலாம்.
நண்பர் அப்படிதான் கற்பனை செய்து கொண்டார்.
அதனால் நல்ல உறவுகள் சிதைந்து போனது.
நண்பர் உடனான நட்பில் விரிசல் ஏற்பட்டது.
இப்போதும் சந்திக்கிறோம். ஆனால் உண்மையான அன்பு பரிமாற்றம் இல்லை.
இது போன்ற சம்பவங்கள் உங்களில் பலருக்கும் நிகழ்ந்து இருக்கலாம்.
வாழ்க்கையில் நாம் செய்யும் சில சந்தேகங்கள் கற்பனைகள் வாழ்க்கையை அர்த்தமற்றதாக மாற்றி விடுகிறது.
அமைதியை இழக்கச் செய்கிறது.
உறவுகளை சிதைக்க காரணமாக அமைந்து விடுகிறது.
எனவே வீண் சந்தேகங்கள் கற்பனைகள் ஆகியவற்றை தவிர்ப்போம்.
அதன்மூலம் வாழ்க்கையில் உறவுகளைப் பேணி மகிழ்ச்சியாக அமைதியாக வாழ முயற்சி செய்வோம்.
எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்.
பத்திரிகையாளர்.
No comments:
Post a Comment