Wednesday, June 22, 2011

அஞ்சலக சேமிப்பு வரி - பாதிப்புகள்
அஞ்சல் அலுவலக சேமிப்பு பணத்திற்கான வட்டிக்கு வருமான வரி விதிக்கப்படும் என நடுவண் அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால்,  சேமிக்கும் பழக்கம் குறைந்து,  அஞ்சல் அலுவலகங்களை மக்கள் மறந்தே விடுவார்கள் என்ற நிலை உருவாகியுள்ளது.


அஞ்சல் அலுவலகங்களில் பணத்தை சேமிப்பதை, கிராம மற்றும் நகர்ப்புற மக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். அஞ்சலக சேமிப்பு கணக்கில் ஒரு லட்சம் ரூபாய் வரை பணம் வைத்துக் கொள்ள முடியும். சேமிப்பு தொகையில் இருந்து வழங்கப்படும் வட்டிக்கு, இதுவரை வருமான வரி விதிக்கப்படவில்லை. ஆனால், தற்போது  அஞ்சல் சேமிப்பு தனி நபர் கணக்கில் 3 ஆயிரத்து 500 ரூபாய்க்கு அதிகமாக பெறப்படும் வட்டிக்கு வருமான வரி விதிக்கப்படும் என நடுவண் அரசு அறிவித்துள்ளது. இது மக்களிடையே பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.


கூட்டாக வைத்திருக்கும் கணக்கில் 7 ஆயிரத்துக்கு மேலான வட்டி தொகைக்கு வருமான வரி செலுத்த வேண்டும் என்கிறது அரசு. இந்த அறிவிப்புகள், கிராமப்புறங்களில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.


அஞ்சலக சேமிப்பு பணம் நாட்டின் வளர்ச்சிப் பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டது. தற்போது, வட்டிக்கு வரி என்ற அறிவிப்பால், அஞ்சலகங்களில் சேமிப்பு குறைந்து, வளர்ச்சிப் பணிகளுக்கு தேவையான நிதியும் தடைபடும். நடுவண் அரசு தனது முடிவில் மாற்றம் செய்வதன் மூலம்  மட்டுமே, அஞ்சலக சேமிப்பு பழக்கத்தை மக்களிடையே தொடரச் செய்ய முடியும்.

S. A. ABDUL AZEEZ

No comments: