சென்னையின் இதயப் பகுதியில் அமைந்துள்ள சிவப்பு நிறக்கட்டமான உயர்நீதிமன்ற கட்டடத்திற்கு ஒரு தனிச் சிறப்பு எப்போதும் உண்டு.
ஆற்காடு நவாப்பிற்கு சொந்தமான இடத்தில் இந்தோ-சார்சியனிக் கட்டடக் கலை நுட்பத்தில்தான் பல ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் உருவாக்கப்பட்டதுதான் உயர்நீதிமன்றம். உலகத்திலேயே இரண்டாவது மிகப் பெரிய நீதிமன்ற வளாகமான சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நீண்ட நெடிய வரலாறு உண்டு. உயர்நீதின்றத்தின் ஒவ்வொரு கல்லுக்கும், அறைக்கும் தனி அழகு இருக்கவே செய்கிறது.
அழகிய கலை நுட்பத்துடன் இயற்கையான சுற்றுச்சூழலில், தெளிவான ஒளி விழும் விதத்தில் வடிவமைக்கப்பட்ட இந்த கட்டடம், முதல் உலகப் போரின்போது, சேதம் அடைந்து, பின்னர் சரி செய்யப்பட்டது. ஆனால் உயர்நீதிமன்றத்தின் அடையமாக அமைக்கப்பட்ட கலங்கரை விளக்கோ இன்றும் சிதைந்த நிலையிலேயே உள்ளது.
1862 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசால் தொடங்கப்பட்ட மும்பை, கொல்கத்தா ஆகிய மூன்று உயர்நீதிமன்றங்களில் சென்னை உயர்நீதிமன்றமும் அடங்கும். 1870 ஆம் ஆண்டிற்கு முன்புவரை ஆங்கிலேயர்கள் மட்டுமே வழக்குரைஞர்களாக பணிபுரிந்து வந்த நிலையில், அதன்பிறகு, இந்தியர்களும் இங்கு வழக்குரைஞர்களாக வாதாட அனுமதிக்கப்பட்டது. பல சிறப்புகளை கொண்ட இந்த உயர்நீதிமன்றத்தில் முதல் நீதிபதியாக திருவாரூர் முத்துசாமி அய்யர் நியமிக்கப்பட்டார்.
1996 ஆம் ஆண்டு வரை மெட்ராஸ் உயர்நீதிமன்றம் என அழைக்கப்பட்டு பின்னர் நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெற்று சென்னை உயர்நீதிமன்றம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
40 நீதிமன்றங்களை உள்ளடக்கிய இந்த நீதிமன்றத்தில், மொத்தம் 60க்கும் மேற்பட்ட நீதிபதிகள் இருக்க வேண்டும். ஆனால் 49 நீதிபதிகள் மட்டுமே தற்போது உள்ளனர். 4 ஆயிரம் வழக்குரைஞர்கள் வாதாட, 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக நாட்டின் பல இடங்களில் இருந்து நாள்தோறும் 20 ஆயிரம் பேர் உயர்நீதிமன்றத்திற்கு வந்து செல்கின்றனர்.

பல சிறப்புகளை தன்னகத்தே கொண்டுள்ள உயர்நீதிமன்றத்தில் இதுவரை ஏனோ, தமிழ் வழக்காடும் மொழியாக அறிவிக்கப்படவில்லை.
சட்டத்துறையில் பல முன்மாதிரியான திருத்தங்கள், தீர்ப்புகள், அதிரடி அறிவிப்புகளை தந்த பெருமை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு உண்டு. அதேநேரத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு பிரப்வரி 19 ஆம் தேதி உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் வழக்குரைஞர்கள் மற்றும் காவல்துறையினருக்கு இடையே மிகப் பெரிய மோதல், உயர்நீதிமன்ற வரலாற்றில் அழிக்க முடியாது ஒரு கரும்புள்ளியாகும்.
டெல்லி உயர்நீதிமன்ற வளாகத்தில் அண்மையில் நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலை அடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய பாதுகாப்பு நெறிமுறைகளை நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து உயர்நீதிமன்றத்தின் 7 முக்கிய வாயில்களிலும் ஒளிப்பதிவு கண்காணிப்பு கருவிகள் பொருத்தப்பட்டு, தீவிர ஆய்விற்கு பிறகே அனைவரும் நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுகின்றனர். உயர்நீதிமன்றத்திற்குள் வருவோரை கண்காணிக்க காவல்துறையின் தனி அறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் 460 காவலர்கள் 24 மணி நேரமும் ஈடுபட்டு வருகின்றனர்.
நீதிபதிகள், வழக்குரைஞர்கள் மற்றும் பொதுமக்களின் ஊர்திகளுக்கு தனித்தனி இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதிய பாதுகாப்பு நெறிகளை பொதுமக்கள் மற்றும் வழக்குரைஞர்கள் அனைவரும் அவசியம் பின்பற்ற வேண்டும் என காவல்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.
பல வழக்குகளுக்காக நாள்தோறும் மக்கள் கூட்டம் அலைமோதும் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நாட்டின் நீதித்துறையில் எப்போதும் தனி இடம் உண்டு. அடுத்த ஆண்டு 150 ஆண்டை நெருங்கியுள்ள இந்த உயர்நீதிமன்றம், பல அறிவு ஜீவிகளை கண்டுள்ளது.
எனினும் சரியான குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, இங்கு இன்னும் செய்து தரப்படவில்லை. கலை நுட்பத்துடன் உருவாக்கப்பட்ட உயர்நீதிமன்ற கட்டடம் இன்று ஏனோ சரியாக பராமரிக்கப்படாததால், மெல்ல மெல்ல, அதன் வீரியத்தை இழந்து வருகிறது. வழக்கின் தன்மையை மக்கள் அறிந்துக் கொள்ளவும், இளம் வழக்குரைஞர்களை ஊக்குவிக்கவும் தமிழ் வழக்காடும் மொழியாக அறிவிக்கப்பட வேண்டும். இதன்மூலம் மட்டுமே, சென்னை உயர்நீதிமன்றத்தின் புகழ் மேலும் சிறப்பு பெறும்.
எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment