Thursday, June 26, 2014

மதுவுக்கு எதிராக ஓர் போர்....! (87)

"மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்....! " 

நாள் - 87

டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு: 

உண்ணாவிரதத்துக்கு முயன்ற பாலபாரதி எம்.எல்.ஏ கைது...!


திண்டுக்கல் மேட்டுப்பட்டி நுழைவு வாயில் கருவூலகம் அருகே அங்கு விலாஸ் இறக்கத்தில் டாஸ்மாக் கடை உள்ளது.

பொது மக்கள் அதிகம் வசிக்கும் இந்த பகுதியில் உள்ள கடையை அகற்ற கோரி பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதுகுறித்து தொகுதி எம்.எல்.ஏவான பாலபாரதியிடம் (மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு) அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக எம்.எல்.ஏ உறுதி அளித்தார்.

அதன்படி இன்று  ( 26.06.2014) காலை பாலபாரதி எம்.எல்.ஏ. டாஸ்மாக்க கடைக்கு வந்தார். கடை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டம் செய்தார்.

தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்தனர். அப்போது போலீசார் எம்.எல்.ஏ.விடம் அனுமதி இன்றி போராட்டம் செய்யகூடாது என்றனர்.

இதனால் போலீசாருக்கும் எம்.எல்.ஏ.வுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே எம்.எல்.ஏ. நான் எனது தொகுதி மக்களுக்காக போராட உள்ளேன் என்று கடை முன்பு உண்ணாவிரதம் போராட்டம் நடத்தப்படும் என்று கூறி கடை முன்பு அமர்ந்தார். நான் இன்று கடையை திறக்கவிட மாட்டேன் என்று ஆவேசமாக கூறினார்.

தகவல் அறிந்ததும் இந்தியஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்த சரத், விஷ்ணு, லெனின், போஸ், அழகு உள்பட 7 பேர் வந்தனர். அவர்களும் எம்.எல்.ஏவுடன் அமர்ந்து போராட்டம் செய்தனர்.

உடனே போலீசார் இந்த பகுதியில் போராட்டம் நடத்த கூடாது என்று எச்சரித்தனர். இதனால் கட்சியினருக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

நிலைமை மோசமானதால் போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பான நிலை ஏற்பட்டது.

எனினும் தடையை மீறி உண்ணாவிரதம் இருக்க முயன்றதாக பாலபாரதி எம்.எல்.ஏ மற்றும் 7 பேரை கைது செய்தனர்.

கைதான அவர்கள் போலீஸ் வேனில் ஏற்றிசெல்லப்பட்டு குள்ளனம்பட்டியில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.

டாஸ்மாக் கடைக்கு எதிராக போராட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. பாலபாரதியை நாம் பாராட்டுகிறோம்.

மதுவுக்கு எதிரான அவரது போராட்டம் தொடர வேண்டும். வெல்ல வேண்டும் என வாழ்த்துகிறோம்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
====================

No comments: