Saturday, August 2, 2014

மதுவுக்கு எதிராக ஓர் போர்.....! (90)

மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்.....! 

நாள் - 90



நாடு முழுவதும் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என போராடி வருபவர்களில் மிகவும் முக்கியமானவர் காந்தியவாதி சசிபெருமாள் ஒருவர் ஆவார்.

தமிழகத்தில் பல போராட்டங்களை நடத்தி வரும் அவர், தற்போது தலைநகர் டெல்லியிலும் போராட்டத்தில் குவித்துள்ளார்.

நாடு முழுவதும் பூரண மதுவிலக்குச் சட்டத்தை அமல்படுத்தக் கோரி தேசிய மக்கள் கூட்டமைப்பின் தலைவரும், காந்தியவாதியுமான சசிபெருமாள் டெல்லியில் 4-ஆவது நாளாக (2.8.14) கொட்டும் மழையில் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தார்.

அவர் டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த ஜூலை 30-ஆம் தேதி காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினார். இந்த நிலையில், டெல்லியில் பல இடங்களில் ஆகஸ்ட் 2ஆம் தேதி காலை முதல் பரவலாக மழை பெய்யத் தொடங்கியது.

இருப்பினும், அவர் தன் உண்ணாவிரதத்தை கைவிடாமல் தொடர்ந்து மேற்கொண்டார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  மது, போதைப் பொருள்களை தடை செய்ய வேண்டியது அரசின் கடமை என்றார்.

நம் நாட்டில் மதுபானங்கள் தாராளமாகக் கிடைக்கும் வகையில், மாநில அரசுகளே அவற்றை விற்பனை செய்து வருவதாக சசிபெருமாள் கூறினார்.  குறிப்பாக தமிழகத்தில் தற்போது பள்ளி மாணவர்களும் மதுக்கடையை நோக்கி செல்லும் நிலையை அரசு ஏற்படுத்திவிட்டதாக அவர் வேதனை தெரிவித்தார்.

மது அருந்துவதை ஒரு கலாசாரமாக சமூகம் மாற்றியுள்ளது வேதனை அளிப்பதாக கூறிய அவர்,  இதனால், பல குடும்பங்கள் சீரழிந்துள்ளதாகவும் தெரிவித்தார். எனவே, நாடு முழுவதும் பூரண மதுவிலக்குச் சட்டத்தை அமல்படுத்தினால், மக்கள் நன்னெறிப்படுத்தப்படுவார்கள் என்றும் சசிபெருமாள் கூறினார்.

இந்தக் கோரிக்கையை வலியுறுத்துவதற்காக பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஆகியோரை சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் சசிபெருமாள் தெரிவித்தார்.

மதுவுக்கு எதிராக போராட்டத்தில் குவித்துள்ள காந்தியவாதி சசிபெருமாளின் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்...

அவருக்கு என்றும் நமது ஆதரவு உண்டு...

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================

No comments: