Thursday, August 21, 2014

மதுவுக்கு எதிராக ஓர் போர்...! (91)

மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்...!  

நாள் - 91 

கேரளம் வழி காட்டுகிறது....!

பூரண மதுவிலக்கை அமல்படுத்த அரசு முடிவு: கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டி அறிவிப்பு

கேரளாவில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த முடிவு செய்திருப்பதாகவும் இதனை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அமல்படுத்திட முடிவு செய்திருப்பதாகவும் அம்மாநில முதலமைச்சர் உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார்.

கேரளாவில் காங்கிரஸ் தலைமையில் ஐக்கிய ஜனநாய முன்னணி ஆட்சி நடக்கிறது. முதலமைச்சராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உம்மன்சாண்டி உள்ளார்.

இம்மாநிலத்தில் லைசென்ஸ் பெற்ற மதுக்கடை பார்கள் மற்றும் மதுபான விடுதிகள் உள்ளன. தவிர 3 ஸ்டார், 4 ஸ்டார், மற்றும் 5 ஸ்டார் ஹோட்டல்களுக்கும் பார் லைசென்ஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் மாநிலத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்திட உம்மன்சாண்டி அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக விவாதிப்பதற்காக கூட்டணி கட்சிகளின் உயர்மட்டக்குழுக் கூட்டம் (21.08.2014) நடந்தது. இதில் புதிய மது கொள்கையை அமல்படுத்திட முடிவு செய்யப்பட்டது.

அதன்படிமுதல்கட்டமாக 3 ஸ்டார் மற்றும் 4 ஸ்டார் ஹோட்டல்களுக்கு வழங்கப்பட்ட லைசென்ஸ்கள் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள்து. இதன் மூலம் மாநிலத்தில் 730 பார்கள் இழுத்து மூடிவிடவும், 5 ஸ்டார் ஹோட்டல்களுக்கு மட்டும் லைசென்ஸ்கள் வழங்கிடவும், இவற்றில் 312 பார்களுக்கான லைசென்ஸ் காலம் மார்ச் 31 ,2015-ம் ஆண்டு முடிவடைகிறது. இவற்றின் லைசென்ஸ்களை மேலும் புதுப்பிக்க தடை விதித்திடவும், இத்திட்டம் 2015-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமல்படுத்திடவும், அடுத்த 5ஆண்டுகளில் மதுபானவிடுதிகளை மூடிடவும், படிப்படியாக அடுத்த 10 ஆண்டுகளில் மாநிலத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்திடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து முதலமைச்சர் உம்மன்சாண்டி கூறுகையில், புதிய மதுகொள்கை மூலம் மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.


சில்லறை மதுபான் கடைகளைப் பொறுத்தவரை, ஆண்டுதோறும் 10 சதவீத கடைகள் மூடப்படும் என்றும் மாதத்தின் முதல் நாள், மதுவுக்கு விடுமுறை நாள் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில் அனைத்து சண்டேயும் மது விடுமுறை நாட்களாக அறிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சாண்டி தெரிவித்துள்ளார். இதன்மூலம் ஆண்டு 52 நாட்களுக்கு மேல் மது விடுமுறை நாட்களாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் மதுவுக்கு எதிராக மாநிலம் முழுவதும் மாபெரும் பிரச்சாரம் செய்யப்படும் என்றும் இதற்காக மாநில மதுபான கழகத்தின் விற்பனை வருவாயில் ஒரு சதவீதம் பிரச்சார செலவுக்கு பயன்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


மது பார்களில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு சுயவேலைவாய்ப்பு மூலம் மாற்று ஏற்பாடு செய்திட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உம்மன் சாண்டி கூறியுள்ளார்.

கேரள அரசின் இந்த நடவடிக்கைகள் உண்மையிலேயே பாராட்டு வேண்டிய ஒன்று.

மதுவை ஒழிக்க படிப்படியாக நடவடிக்கை எடுத்து, மாநிலத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த உம்மன் சாண்டி அரசு எடுத்த முயற்சிகள் நிச்சயம் வெற்றி பெறும். கேரளம் மது இல்லாத மாநிலமாக விரைவில் மலரும்.

தமிழகத்தில் இந்த நிலை எப்போது ஏற்படும் என்ற ஏக்கம் நம் எல்லோருக்கும் பிறந்துள்ளது.

மாநில முதலமைச்சர் அம்மா (ஜெயலலிதா) மனது வைத்தால் நிச்சயம் நடக்கும்...


தமிழகத்தில் இருந்த மதுவை ஒழிக்க முதலமைச்சர் ஜெயலலிதாவால் மட்டுமே முடியும்.

தமிழக பெண்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த அதிரடி நடவடிக்கையை அம்மா அவர்கள் எடுப்பார் என தமிழக மக்கள் நம்புகிறார்கள்...


நம்பிக்கைதான் வாழ்க்கை...

விரைவில் நல்லது நடக்கட்டும்....

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================

No comments: