Friday, December 19, 2014

மதுவுக்கு எதிராக ஓர் போர்.....! (105)

"மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்.....!"

நாள் - 105

மதுவிலக்கு என்பது இந்திய அரசின் தேசியக் கொள்கையாக  அறிவிக்கப்பட்டு, அரசு மதுபான கடைகளை உடனடியாக இழுத்து மூட வேண்டும்.....!

தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்......!!

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் (19.12.2014) அன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே நந்தினி என்ற பள்ளி  சிறுமியும், வேலூர் குடியாத்தம் பகுதியை சேர்ந்த கிருத்திகா என்ற பள்ளி சிறுமியும் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட கொடூரம்  நிகழ்ந்துள்ளதை அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் நிகழ்ந்துக் கொண்டிருக்கும் அவலம் என்றும் திருமாவளவன் கூறியுள்ளார்.

இதை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ள அவர், 20 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் மதுபழக்கத்துக்கு அடிமையாவது அதிகரித்து வருவதாகவும் கூறியுள்ளார்.

மேலும், செல்போனிலும், கணினிகளிலும் பாலுறவு காட்சிகளை கொண்ட இணையதளங்களால்  இளைஞர்கள் பாதை தவறும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

குடியாத்தம் கிருத்திகாவை பாலுறவுக்கு கட்டாயப்படுத்திப் படுகொலை செய்த மாணவன் இணையதளங்களில்  காட்சிகளைப் பார்க்க கூடியவன் என்று கூறப்படுவதாகவும், அவனுக்கு குடிப்பழக்கமும் உண்டு என்று விசாரணையில் தெரிய வந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரபு நாடுகளில் பாலுறவு அடங்கிய இணையதளங்களை 100 சதவீதம் தடை செய்தை சுட்டிக் காட்டியுள்ள தொல்.திருமாவளவன்,  இந்திய அரசும் அத்தகைய இணையதளங்களுக்கு ஏன் தடைவிதிக்க கூடாது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.


மேலும், மதுபான கடைகளை  அரசு உடனடியாக மூட வேண்டும் என்றும், பாலுறவு இணையதளங்களை தடை செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மதுவிலக்கு என்பது இந்திய அரசின் தேசியக் கொள்கையாக அறிவிக்கப்பட்டு அரசு மதுபான கடைகளை உடனடியாக இழுத்து மூட வேண்டும் என்றும் அதற்கான சட்டத்தையும் இந்திய அரசு இயற்ற வேண்டும் என்றும் தொல்.திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தொல்.திருமாவளவனின் இந்த கோரிக்கைகள் அனைத்தும் நியாயமானவை.

இளைஞர் சமுதாயம், இனிய சமுதாயமாக, நல்ல சமுதாயமாக, நாட்டின் வளர்ச்சியில், வீட்டின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்ட சமுதாயமாக மலர வேண்டும் என்றால், இந்த கோரிக்கைகள் அனைத்தும் கண்டிப்பாக நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்.

இதுதான் எமது விருப்பம்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================

No comments: