மனிதம் இறந்து போகவில்லை...!
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளச்சேதங்கள் ஏராளம்.
அதனால் பாதிப்புக்கு ஆளாகி இருக்கும் மக்களின் துயரங்களை கூற வார்த்தைகள் இல்லை.
சென்னையை விட்டு ஓடினால் போதும் என்ற மனநிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் இருந்து வருகின்றனர்.
கடும் வெள்ளத்தில் வீடு, பொருட்கள் என அனைத்தையும் இழந்த மக்கள், உணவு, உடை இல்லாமல் தவிக்கும் நிலையில் தற்போது இருந்து வருகின்றனர்.
கோடிகளில் வீடு வாங்கியவர்களும் இப்போது தெரு கோடிக்கு வந்துவிட்டனர்.
இப்படிப்பட்ட ஒரு மோசமான நிலையில், அசாதாரண சூழ்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ அனைத்து தரப்பு மக்களும் முன்வந்து இருப்பது உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது.
சாதி, மதம், இனம், மொழி என எதையும் பார்க்காமல், கனமழையால் பாதிக்கப்பட்ட மக்கள், கோவில்கள், மசூதிகள், சர்ச்சுகளில் வந்து தங்கிக் கொள்ளலாம் என சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
சமூக வலைத்தளங்களை பார்க்கும்போது, தொடர்ந்து அழைப்புகள் வந்துக் கொண்டே இருக்கின்றன.
தங்க வசதி செய்யப்பட்டுள்ளது.
உணவுக்கு வசதி செய்யப்பட்டுள்ளது.
மருந்து வசதிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வாருங்கள். வந்து தங்கிக் கொள்ளுங்கள்.
என கூறி செல்பேனி எண்களை தந்து பலரும் அழைத்துக் கொண்டே இருக்கிறார்கள்.
அத்துடன், கல்லூரிகள், திரையரங்குகள் உள்ளிட்ட மிகப் பெரிய இடங்களிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இலவச உணவுக்கும் மருந்துக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் ஒரு விஷயம் உறுதியாக தெரிகிறது.
அது, மனிதம் இன்னும் இறந்து போகவில்லை என்பதுதான்.
மழை, வெள்ளம் கடும் பாதிப்பை ஏற்படுத்தினாலும், மனிதனை சிந்திக்க வைத்துள்ளது.
ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற நீதியை போதித்துள்ளது.
அதன்மூலம் மட்டுமே, உண்மையான அமைதி, மகிழ்ச்சி மக்களுக்கு கிடைக்கும் என பாடத்தை கற்பித்து இருக்கிறது.
சாதாரண விஷயங்களுக்கு அடித்துக் கொண்டு விரோதத்தை வளர்த்துக் கொள்ளும் மனிதர்கள், இனியாவது சிந்தனை செய்ய வேண்டும்.
மனித உறவுகளை வளர்த்துக் கொண்டு, இனிதாக வாழ வழிவகைகளை தேட வேண்டும்.
அதன்மூலம் மனிதத்தை பேண வேண்டும்.
இதுதான், கனமழை, வெள்ளம் மனிதனுக்கு தற்போது சொல்லி இருக்கும் படிப்பினை.
கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த பலனும் எதிர்பார்க்காமல் அனைத்து உதவிகளையும் செய்ய முன்வந்துள்ள நல்ல உள்ளங்களுக்கு என்னுடைய சலாம் மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்,
அவர்களின் பணிகளை இறைவன் நிச்சயம் ஏற்றுக் கொள்வான்.
சரியான தருணத்தில் உதவி செய்ய வந்த அவர்களின் பணிகளை பாராட்ட வார்த்தைகளே இல்லை.
வெல்க நல்ல மனிதர்களின் மனித நேயப் பணிகள்.
எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்.
No comments:
Post a Comment