மாநகர பேருந்தில் ஓசி பயணம்....!
சென்னையில் கொட்டிய பேய் மழையை தொடர்ந்து மாநகர பேருந்துகளில் 4 நாட்களுக்கு இலவசமாக மக்கள் பயணம் மேற்கொள்ளலாம் என தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்.
கடந்த 5ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு இந்த சலுகை வழங்கப்பட்டது.
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னைவாசிகளுக்கு, குறிப்பாக அலுவலகப் பணிகளுக்கு செல்வோருக்கு இந்த சலுகை உண்மையிலேயே பலன் அளித்தது என்றே கூறலாம்.
நானும் அந்த நான்கு நாட்களில், மாநகர பேருந்தில் ஓசியில் பயணம் செய்து அலுவலகம் சென்று வந்தேன்.
இந்த ஓசி பயணம் மூலமாக, குறிப்பிட்ட ஒரு பேருந்திற்காக மணிக்கணக்காக காத்திருக்காமல், எந்த பேருந்து வருகிறதோ அதில் ஏறி, மீண்டும் மற்றொரு பேருந்தில் ஏறி அமர்ந்து குறிப்பிட்ட நேரத்திற்கு மிக விரைவாக அலுவலகம் வந்து சேர முடிந்தது.
பேருந்திற்காக காத்திந்து அதனால் ஏற்படும் டென்ஷன் இந்த நான்கு நாட்களில் ஏற்படவில்லை.
ஓட்டுநர்கள், நடத்துநர்கள் கலகலப்பாக பேசி கொண்டே வந்தார்கள்.
பயணிகள் மீது எரிச்சல் அடையவில்லை. எறிந்து விழவில்லை.
முன்னாடி போ, பின்னாடி ஏறு என பயணிகளை நச்சரிக்கவில்லை.
டிக்கெட்டுக்கு சரியான சில்லரை கொடு என கோபத்தோடு பேசவில்லை.
பேருந்துகளிலும் நெரிசல் அதிகமாக இருக்கவில்லை.
விருப்பப்பட்ட பேருந்துகளில் மக்கள் பயணம் செய்ததே இதற்கு காரணம் எனலாம்.
ஆக, மழைக்காலத்தில் மாநகர பேருந்தில் ஓசியில் பயணம் செய்தது தனி சுகம் அளிக்கவே செய்தது.
சென்னையின் மழைக்காலத்தில் அரசு அறிவித்த இந்த சலுகை, மழைக்கால அனுபவங்களில் ஓர் தனி அனுபவம் என்றே கூறலாம்.
இதுபோன்ற சுகமான அனுபவங்கள் நமக்கு அடிக்கடி கிடைக்காது அல்லவா.
கிடைக்கும்போது அனுபவித்தால்தான் சரி.
என்னைப் போலவே, ஒரு கோடிக்கும் மேற்பட்ட மக்கள் இந்த புதிய அனுபவத்தை மாநகர பேருந்துகளில் அனுபவித்து இருப்பார்கள் என்றே நினைக்கிறேன்.
எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்.
No comments:
Post a Comment