ஒரு கணம் யோசியுங்கள்...! ஓட்டுப்போடுமுன்....!!
கடந்த 1989ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பு உலக புகழ் பெற்ற குமுதம் வார இதழ் வாசகர்களுக்கு ஒரு போட்டியை அறிவித்தது.
எம்.எல்.ஏ.வுக்கு வேண்டிய பத்துத் தகுதிகள் என்ன ? என்பதுதான் அந்த போட்டி.
நாமும் ஒரு கட்டுரையை அனுப்பி வைத்தோம்.
என்ன ஆச்சரியம்.
எமது கட்டுரை தேர்வு குழுவால் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டு குமுதம் இதழில் பிரசுரிக்கப்பட்டது.
பரிசு தொகையும் காசோலையில் எனக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
27 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய, வைத்த கோரிக்கை இதோ உங்கள் பார்வைக்கு...!
1. எம்.எல்.ஏ.வாக வருபவருக்கு கல்வித் தகுதி அவசியம். குறைந்தபட்சம் பட்டதாரியாக இருக்க வேண்டும்.
2. ஓரே கட்சியில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் அங்கம் வகிப்பவராக இருக்க வேண்டும்.
3. எம்.எல்.ஏ. நம்ம சாதியைச் சேர்ந்தவர் அல்லது மதத்தைச் என்று மக்கள் சொல்லாமல் நம்ம ஊரைச் சேர்ந்தவர் என்று பெருமையுடன் சொல்லக் கூடியவராக இருக்க வேண்டும்.
4. சட்டப்பேரவையில் கண்ணியமாகவும் பொறுப்புடனும் நடந்து கொள்ளும் பொறுமைசாலியாக இருக்க வேண்டும். மைக், பேப்பர் வெயிட் போன்ற பொருட்களைத் தூக்கி வீசுபவராக இருக்கக்கூடாது.
5. ஆடம்பரம் இல்லாதவராக ஏழை எளியவர்களுக்கும் இளைஞர்களுக்கும் உதவி செய்யக்கூடியவராக எம்.எல்.ஏ. என்ற பந்தாவெல்லாம் இல்லாமல் மக்கள் பார்த்துப் பேசக்கூடியவராக இருக்க வேண்டும்.
6. சட்டப்பேரவைக் கூட்டம் நடக்கும் நாட்களைத் தவிர, மற்ற நாட்களில் தன்னுடைய தொகுதியில் இருப்பவராக இருக்க வேண்டும். மாதம் ஒருமுறை தொகுதியின் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று அங்குள்ள குறைகளை அறிந்து வர வேண்டும்.
7. பணத்திற்கு விலை போகக் கூடியவராக இருக்கக்கூடாது. நீதி, நேர்மை, உண்மை எங்கும் இல்லை என்றால் பதவியை ராஜினாமா செய்யக்கூடிய துணிச்சல்காரராக இருக்க வேண்டும்.
8. நல்ல ஆரோக்கியமான உடல்நலம் பெற்றவராக இருக்க வேண்டும். மது மற்றும் இதர கெட்ட பழக்கங்கள் கூடாது.
9. எம்.எல்.ஏ. பதவியினால் வரும் வருமானத்தில் தன்னுடைய வாழ்க்கையை நடத்துபவராக இருக்கக்கூடாது. தனக்கென்று ஒரு தனித் தொழிலைக் கொண்டவராக இருக்க வேண்டும். அதில் கிடைக்கும் வருமானத்தில் வாழ்க்கையை நடத்துபவராக இருக்க வேண்டும். எம்.எல்.ஏ. பதவி மூலம் தன்னை அபிவிருத்தி செய்துகொள்ளலாம் என்று நினைக்காமல், மக்களுக்கு சேவை செய்யக் கிடைத்த ஒரு வாய்ப்புத்தான் இந்த எம்.எல்.ஏ. பதவி என்று கருதக்கூடியவராக இருக்க வேண்டும்.
10. தன்னுடைய பதவிக் காலத்தில் தொகுதிக்கு என்னென்ன நன்மைகள் செய்ய முடியுமோ அவற்றையெல்லாம் குறிப்பிட்ட காலத்திற்குள் செய்து முடிப்பவராக இருக்க வேண்டும்.
எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்.
No comments:
Post a Comment