Wednesday, July 27, 2011

‘‘ரமலான் நோன்பின் மாண்புகள்’’




ரமலான்! 

இஸ்லாமியர்களிடையே இறையச்சத்தை செழித்து வளர்க்கும் வசந்தகாலம் !!

இஸ்லாத்தின் ஐந்து தூண்களில் மூன்றாவது தூணாக கருதப்படும் நோன்பு என்னும் தூய வழிபாட்டை கடைபிடிக்கும் இனிய காலம்!!!

மகத்துவமிக்க இந்த புனிதமான ரமலான் மாதத்தில் இறைக்கட்டளையை ஏற்று நோன்பை கடைப்பிடிக்கும் இஸ்லாமியர்களுக்கு, இறையச்சம் ஏற்பட்டு உடல், உள்ளம் ஆகியவற்றை தூய்மைப்படுத்தும் வாய்ப்பு கிட்டுகிறது.

நேர்வழியின் தெளிவான அறிவுரைகளை கொண்டதும், சத்தியத்தையும், அசத்தியத்தையும் பிரித்துக்காட்டக் கூடியதுமான திருக்குர்ஆன் என்னும் சத்திய வேதத்தை தந்த இறைவனுக்கு,  நன்றி கூறுவதற்காக வைக்கப்படுகிறது ரமலான் மாத நோன்பு. 

இதன்மூலம் அனைத்து சகோதரர்களுடன் ஒருங்கிணைந்து அமைதியுடன் வாழ  இஸ்லாமியர்களுக்கு நல்ல பயிற்சி கிடைக்கிறது.  பல தொல்லைகளுக்கு மூலக் காரணம் மனம்.

இப்படி பல தொல்லைகளுக்கு காரணமாக இருக்கும் மனதை, 30 நாட்கள் ஒருமுகப்படுத்தி ஓர் இறை சிந்தனையை உள்ளத்தில் வேரூன்ற செய்யும் இஸ்லாமியர்கள், அன்பு, பொறுமை, கொடை ஆகிய பண்புகளை தங்களிடையே வளர்த்து கொள்கின்றனர்.

ரமலான் மாதத்தில் சூரியன் உதிப்பதற்கு முன்னர் உணவு உட்கொண்டு  பகல் நேரத்தில் குடிநீர் உட்பட எந்தவித உணவையும் உண்ணாமல் இறை சிந்தனையை மட்டுமே உள்ளத்தில் குடியமர்த்தும் இஸ்லாமியர்கள், மாலையில் சூரியன் மறைந்ததும் நோன்பு திறந்து உண்கின்றனர் உணவு. 

இதனால், உடல், உள்ளம் ரீதியாக இவர்கள் பெறும் நன்மைகளோ  ஏராளம்.

இதனை மருத்துவ உலகமும் உண்மை என்று ஒப்புக் கொண்டுள்ளது.
பல ஆராய்ச்சிகளும் அதற்கு அத்தாட்சி அளிக்கின்றன.

நோன்பின் மூலம் ஏழைகளின் பசி அறிந்துக் கொள்ள முடிகிறது.

வறுமையின் துன்பம் எப்படி இருக்கும் என்பதை புரிந்துக் கொள்ள முடிகிறது.

இதனால் ஏழைகளின் மீது இரக்கம் ஏற்படுகிறது. அலட்சியம் செய்யும் போக்கு மாறிவிடுகிறது.

ஏழைகளுடன் சகோதரத்துடன் பழக, வாழ பயிற்சி கிடைக்கிறது.

இது ரமலான் மாதத்தில் நடக்கும் அதிசயம்.

ரமலான் மாதத்தின்  இரவு நேரங்களில் நடைபெறும் சிறப்புத் தொழுகைக்கு தனி முக்கியத்துவம் உண்டு.

உலகம் முழுவதும் உள்ள பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகை நடைபெற்றாலும், சவுதி அரேபியாவின் மக்கா நகரில் உள்ள காபா என்னும் இறை இல்லத்தில் நடைபெறும் கூட்டு தொழுகையில் உலகம் முழுவதும் இருந்து  லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்கின்றனர்.
ஒரே நேரத்தில் லட்சக்கணக்கானோர் காபா இறை இல்லத்தில் ஒன்றுகூடி, இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் சிறப்பு தொழுகையில் கலந்து கொள்வது கண்கொள்ளாக் காட்சி.

உலக அமைதிக்காக அவர்கள் இறைவனிடம் மனம் உருகி கண்ணீர் சிந்தி, கூட்டு வழிபாடு நடத்துவது கல் மனதையும் உருகச் செய்யும்.

இந்தியாவில் டெல்லி, மும்பை, சென்னை, ஹைதராபாத் ஜம்மு, லக்னோ உள்ளிட்ட அனைத்து நகரங்களும் ரமலான் மாதத்தில் களைகட்டிவிடுகின்றன.

ரமலான் மாதத்தின் முதல் பிறை பார்க்கும் இஸ்லாமியர்கள், ஒருவரை ஒருவர் சந்தித்து அன்பை பரிமாற்றி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வது காலம் காலமாக இருந்து வரும் நடைமுறை.


சென்னை உள்ளிட்ட பெரிய நகரங்களில் இருக்கும் பல உணவு விடுதிகளில்,இரவு முழுவதும் விதவிதமான உணவுகள் தயாரிக்கப்பட்டு,  நோன்பாளிகளுக்கு விற்பனை  செய்யப்படுவதும் ரமலான் மாதத்தில்தான்.

வணிக நிறுவனங்களில் ரமலான் மாதத்தில் நோன்பாளிகளுக்காகவே சுவை மிகுந்த பேரிச்சப்பழங்கள் விற்பனைக்கு குவிக்கப்படுவது ஆண்டாண்டு காலமாக இருந்து வரும் நடைமுறை.  

ரமலான் மாத நோன்புகளை கடைபிடிக்கும் இஸ்லாமியர்களின் மகிழ்ச்சியில் இந்து, மற்றும் பிற மத சகோதரர்களும் பங்கேற்பது இந்திய நாட்டின் மதசார்பின்மைக்கு இன்றும் எடுத்துக்காட்டாக இருந்து வருகிறது.

நோன்பு திறக்க பள்ளிவாசல்களுக்கு செல்லும் இஸ்லாமியர்களுக்கு சத்தான உணவு, குடிநீர், பழங்கள் ஆகியவற்றை இந்து, கிறிஸ்துவ சகோதரர்கள்,  அன்புடன் அளித்து மகிழ்ச்சி அடையும் நிகழ்வுகள் தமிழகத்தில் ஏராளம்.



பல அரசியல் கட்சிகள்,  நாடு முழுவதும் இஃப்தார் என்னும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிகளை¢ நடத்துவது சகோதரத்துவ அன்பின் ஒரு வெளிப்பாடே.

இந்த மனித நேய நடைமுறை இந்தோனேஷியா, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட ஆசிய நாடுகளிலும் உண்டு.

ரமலானில் நோன்புடன் இன்னும் ஒரு இறைக்கட்டளையை நிறைவேற்றும் பாக்கியம் இஸ்லாமியர்களுக்கு கிடைக்கிறது.

அது, ஜகாத் என்னும் ஏழை வரியை ஏழைகளுக்கு வழங்குவது.

வசதி படைத்த இஸ்லாமியர்கள், தாங்கள் ஈட்டிய செல்வங்களில் இருந்து, இரண்டரை விழுக்காடு ஏழை மக்களுக்கு வழங்கி தங்களது செல்வத்தை தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது இறைக்கட்டளை.

இந்த இறைக் கட்டளையை ஏற்று இஸ்லாமியர்கள் வழங்கும் கொடைதான் ஜகாத் என்னும் ஏழை வரி.

ஏழைகளின் இருப்பிடங்களை நாடிச் சென்று அதனை வழங்க வேண்டும் என்ற வழிமுறைக்கு ஏற்ப, இஸ்லாமியர்கள் ஏழைவரியை கொடுத்து மகிழ்ச்சியில் திளைப்பதும் ரமலான் மாதத்தில்தான்.

இதன்மூலம் செல்வம் தூய்மை அடைவதுடன் செல்வந்தர்களுக்கும், ஏழைகளுக்கும் இடையே ஓர் உறவு வளர்கிறது. அன்பு பாலம் உருவாகிறது.

இறைவேதமான திருக்குர்ஆன் இறங்கிய நிகழ்வு ரமலான் மாதத்தில் நடைபெற்றதால் இம்மாதம் புனிதமும் கண்ணியமும் பெறுகிறது.

எனவே, ரமலான் மாதத்தில் திருக்குர்ஆனை இஸ்லாமியர்கள் அதிகளவு படித்து தங்கள் உள்ளங்களில் பதிய வைத்துக் கொள்கின்றனர்.

அரபி மொழியில் இருக்கும் குர்ஆனை,  தங்களுடைய தாய் மொழியில் பொருள் உணர்ந்து அறிய வேண்டும் என்பதற்காகவே மொழி பெயர்க்கப்பட்ட குர்ஆன் பிரதிகளைக் வாங்கிப் படிக்கும் இஸ்லாமியர்கள்,  அதன் பொருளை புரிந்து வாழ்க்கையில் கடைப் பிடிக்கவும்  பயிற்சி  பெறுகின்றனர்.

இறைவனுக்காகவே நோன்பு வைத்து 5 வேளை தொழுகையை தொழும் இஸ்லாமியர்கள், ஷவ்வால்  மாதத்தின் முதல் பிறை பார்த்ததும்,  பெருநாள் கொண்டாட்டங்களுக்கு தங்களை தயார் படுத்திக் கொள்ள இறங்கி விடுகின்றனர்.

புத்தாடை,  விதவிதமான அணிகலன்களை  வாங்குவதில் இஸ்லாமிய குழந்தைகள் மற்றும் மகளிருக்கு  தனி ஆர்வம் ஏற்படுவதால், வணிக நிறுவனங்களில் ரமலான் மாதத்தில் கூட்டத்திற்கு குறைவில்லை.

ரமலான் மாதத்தில் நோன்பு வைக்க வாய்ப்பளித்த இறைவனுக்கு நன்றி செலுத்துவதற்காக பெருநாள் தொழுகைக்கு செல்லும் இஸ்லாமியர்கள், அதற்கு முன்பு பித்ரா என்ற கொடையை அளிப்பது கூடுதல் சிறப்பு.

இதன் முலம் பெருநாள் அன்று எந்த ஒரு ஏழையும் பசித்திருக்க கூடாது என்ற நோக்கம் நிறைவேறுகிறது.

 உலக மக்கள் தொகையில் 100 கோடிக்கும் மேலாக இருக்கும் இஸ்லாமியர்களிடையே நாட்டிற்கு நாடு வேறுபட்ட கலாச்சாரம், பண்பாடு இருந்து வந்தாலும்,  தொழுகை, நோன்பு ஆகிய இறைவழிபாட்டில் உலகம் முழுவதும் ஒரே முறை கடைபிடிக்கப்படுகிறது.

இதனால், இந்தோனேஷியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சீனா,  வளைகுடா நாடுகள் பாகிஸ்தான், வங்கதேசம், அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ரமலான் கொண்டாட்டங்களுக்கு எப்போதும் குறைவு இருப்பதில்லை.

அண்மையில் விடுதலை நாடாக அறிவிக்கப்பட்ட கொசோவோவில், முதல் முறையாக கொண்டாடப்பட்ட ரமலான் விழா பெரும் களைகட்டியது.

இங்குள்ள இஸ்லாமியர்கள் விடுதலை நாளுடன், ரமலான் திருநாளையும் ஒன்றுசேர கொண்டாடி மகிழ்ந்தது தனி சிறப்பு.

உலகத்தில் அமைதி நிலவ மனிதர்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும்.
இது இறைவனின் கட்டளை.

ஒற்றுமையை கடைப்பிடியுங்கள். பிரிந்துவிடாதீர்கள் என்று மனிதர்களை பார்த்து கூறுகின்றான் இறைவன்.

இனம், மொழி, கலாச்சாரம் வேறுபாட்டாலும், மனித சமுதாயம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தது என்பது இறைவனின் வாக்கு.

இதனை முழுமையாக ரமலான் மாதத்தில் உணர்ந்து கொள்ளும் இஸ்லாமியர்கள், அந்த மகிழ்ச்சியில் மீண்டும் இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பெருநாளன்று ஒன்றுகூடி கூட்டுத் தொழுகை நிறைவேற்றி  ஈகைத் திருநாள் கொண்டாட்டங்களில் திளைக்கின்றனர். 



இந்த மகிழ்ச்சி, அமைதி மற்றும் சகோதரத்துவம் உலகம் முழுவதும் என்றென்றும் தொடர்ந்து நீடித்தால் மனித சமுதாயம் மிகச் சிறந்த சமுதாயமாக மாறும்.

மனித சமுதாயம் மிகச் சிறந்த சமுதாயமாக மாறினால்,  பின்னர் மனிதர்களுக்குள் எப்படி பிறக்கும் சச்சரவுகள் ? வேறுபாடுகள் ?

எப்படி வெடிக்கும் மோதல்கள் ?



அனைத்து மனிதர்களின் உள்ளத்தில் சகோதரத்துவம், அன்பு என்றென்றும் குடிபுகுந்து விட்டால் மகிழ்ச்சிக்கு சொல்லவா வேண்டும்.

இப்படிப்பட்ட அன்பு, சகோதரத்துவம் ஆகிய பாடங்களைதான் ரமலான் மாதத்தில்  இஸ்லாமியர்களின் உள்ளங்களில் பதிய வைக்கப்படுகிறது.

 30 நாட்கள் முழுவதும் மனதை ஒருமுகப்படுத்தி பெற்ற பாடத்தை,  வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிக்க வேண்டும்.

இதைத்தான் இறைவனும் விரும்புகிறான்..

அது மனித குலத்தின் முழு மகிழ்ச்சிகாக மட்டுமே.

மனித குலத்திற்கு அன்பை போதிக்கும்,  ஒரு அருமையான மாதம்தான் ரமலான்.

இப்படிப்பட்ட மகத்தான மாதம்தான்,  இஸ்லாமியர்கள் வாழ்வில் ஒவ்வொரு ஆண்டும் வந்து செல்கிறது.

இம்மை, மறுமை வாழ்க்கைக்கு வழி காட்டுகிறது.






(ஆகஸ்ட் முதல் வாரம் ரமலான் நோன்பு தொடங்குவதையொட்டி, இந்த கட்டுரை எழுதப்பட்டது)


எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்




No comments: