" மதுவுக்கு எதிராக ஓர் ( பிரச்சாரம்) போர்.....! " நாள்: 5
மதுக்கடைகளை மூடக் கோரி தமிழத்தின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன...
குறிப்பாக, குடியிருப்பு பகுதிகள், வழிப்பாட்டு தலங்கள், கல்வி நிறுவனங்கள், மக்கள் அதிகமாக கூடும் சந்தை பகுதி ஆகிய இடங்களில், டாஸ்மாக் மதுபானக் கடைகளை திறக்க மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகின்றனர்.
மதுக்கடைகளுக்கு எதிராக அண்மையில் நடைபெற்ற பல போராட்டங்களில் ஒருசில போராட்டங்கள் குறித்த தகவல்கள் இதோ உங்கள் பார்வைக்கு...
விழுப்புரம் அருகே குடியிருப்பு பகுதிக்குள் டாஸ்மாக் மதுபானக்கடையை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள்.
விழுப்புரம் மாவட்டம் வளவனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஏற்கனவே, ஒரு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது.
இந்த கடைக்கே அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் வேளையில், வள்ளலார் நகர் பகுதியில் மேலும் ஒருகடையை டாஸ்மாக் நிறுவனம் திறந்துள்ளது.
இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் 30.11.2013 அன்று திறக்கப்பட்ட கடைக்கு பூட்டுப் போட்டு போராட்டம் நடத்தினார்கள்.
இதேபோன்று, மதுவால் ஏற்படும் தீமைகளை விளக்கி ஏற்காடு தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் மதுரையை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி நந்தினியும், அவரது தந்தையும் துண்டுப் பிரச்சுரம் வினியோகம் செய்தனர்.
தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த, இடைத்தேர்தலின்போது நோட்டோ பொத்தானை பயன்படுத்தி பொதுமக்கள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
ஆனால், பிரச்சாரத்திற்கு போலீஸார் அனுமதி மறுத்ததால், மாணவி நந்தினியும், அவரது தந்தையும் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்கள்.
சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் காயிதே மில்லத் நெடுஞ்சாலையில் உள்ள மதுபானக்கடையை அகற்றக் கோரி த.மு.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுக்கடையை இழுத்து மூடும் போராட்டம் என்ற பெயரில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். பொதுமக்களும் ஆதரவு அளித்தனர்.
இதனால் அப்பகுதியில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு அடைந்தது. பதற்றம் நிலவியதால் போலீசார் குவிக்கப்பட்டனர்.
இப்படி மதுக்கடைகளுக்கு எதிராக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடைபெறும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களுக்கு பொதுமக்கள் பெரிதும் ஆதரவு அளித்து வருவது ஆறுதல் அளிக்கிறது...
எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
=======================
No comments:
Post a Comment