" வீட்டுக்கு விருந்தாளிங்க வந்திருக்காங்க.....! "
காஞ்சிபுரத்தை சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன், இன்று மாலை (17.11.2013) என்னை செல்பேசியில் அழைத்தார்.
இருவரும் பேசி, நீண்ட நாட்கள் ஆகிவிட்டதால், நலம் விசாரிப்புகள், தொழில் நிலவரங்கள் என கொஞ்ச நேரம் பேச்சு சென்றது...
திடீரென சார் ஒரு நிமிடம் என சொன்ன வெங்கி (நாங்கள் செல்லமாக அவரை அப்படிதான் அழைப்பது வழக்கம்) பிறகு மீண்டும் பேச ஆரம்பித்தார்..
ஒன்றுமில்லை சார்...நண்பர் ஒருவர் வீட்டுக்கு விருந்தாளிங்க வந்திருக்காங்க என சொல்லி வந்தார் என சொன்ன வெங்கி, பொதுவா விருந்தாளிங்க வந்தா என்ன செய்வோம் சார், என என்னை கேட்டார்...
பிறகு அவரே தொடர்ந்து பதிலும் சொன்னார்...
கடைக்கு சென்று கோழிக்கறி அல்லது ஆட்டுக்கறி வாங்கி வருவோம்... அல்லது எளிமையான விருந்திற்காக குறிப்பிட்ட சில சமையல் அயிட்டங்களை வாங்கி வருவோம்...
ஆனா, நம்ப நண்பர் எங்கே வந்திருக்கிறார் தெரியுமா... டாஸ்மாக் கடைக்கு வந்து விருந்தினர்களுக்காக மதுபான பாட்டில்களை வாங்கிக் கொண்டிருக்கிறார் சார்...
என்று சொல்லி சிரித்தார் வெங்கி........ எனக்கும் சிரிப்பு வந்தது....
இந்த தொலைபேசி உரையாடலுக்கு பிறகு எனோ என் மனசு அமைதி கொள்ளவில்லை...
நாடு எங்கு சென்றுக் கொண்டிருக்கிறது....
சமூகம் எப்படி மாறிக் கொண்டிருக்கிறது...
ஒரு காலத்தில் மதுவை வெறுத்த சமுதாயம், இன்று அதனை எளிமையாக எடுத்துக் கொண்டிருக்கிறது...
மது அருந்தாதவர்களை பார்த்து, என்ன நிச்சயமாக நீங்கள் மது அருந்துவதில்லையா என ஏளனமாக கேட்கும் நிலை தற்போது இருந்து வருகிறது...
ஏன், கல்லூரி மாணவிகள், அலுவலகங்களில் பணிபுரியும் பெண்கள் கூட, மது பழக்கத்திற்கு அடிமையாகி சிரழிந்து கொண்டிருக்கிறார்கள்...
முகநூல்களில் வரும் சில புகைப்படங்கள் இதற்கு சாட்சி சொல்லிக் கொண்டிருக்கின்றன...
ஒரு காலத்தில் ஹீரோ, வில்லன் நடிகர்கள் மதுக்காட்சிகளில் நடிக்க மறுத்தார்கள்...
ஆனால், மது அருந்தும் காட்சிகள் இடம் பெறாத திரைப்படங்களே இல்லை என்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.
மது அருந்துவது உடலுக்கும், குடும்பத்திற்கும் கேடு விளைவிக்கும் என விளம்பரம் செய்யப்படுகிறது...
ஆனால், டாஸ்மாக் மதுக்கடைகளில் அதிகாலை நேரத்திலேயே கூட்டம் அலை மோதுகிறது...
குடும்பத்திற்கு செலவழிக்க வேண்டிய பணத்தை, மதுக்கடைகளில் செலவழித்துக் கொண்டிருக்கிறது ஒரு கூட்டம்...
இளைஞர்கள் மத்தியில் மெல்ல மெல்ல மதுப்பழக்கம் அதிகரித்து கொண்டு வருகிறது...
அப்படிதான் ஆய்வுகள் தெரிவிக்கின்றன....
மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டுவதால் ஏற்படும் விபத்துக்களால், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது...
குடும்ப உறவுகள் சீர்குலைந்து போகின்றன...
கணவன் மனைவி இடையே விவாகரத்து ஏற்பட்ட, மது முக்கிய காரணமாக அமைகிறது...
நீதிமன்றங்களில் வரும் விவாகரத்து வழக்குகளை ஆய்வு செய்து பார்த்தால், மதுவால் பிரச்சினை உருவாகி, கணவன் மனைவி இடையே மன வேறுபாடுகள் பிறந்து, விவாகரத்து வரை கொண்டு சென்று விடுகிறது...
கொலை, கொள்ளை போன்ற கிரிமினல் செயல்களுக்கும் மது மூலக் காரணமாக இருந்து வருகிறது...
மதுவை அருந்திவிட்டு சுயநினைவு இழந்து சாலைகளில் கிடக்கும் தொழிலாளிகள் எத்தனை பேர்....
இப்படி, சமூகத்திற்கு பல கேடுகளை விளைவிக்கும் மதுவை ஒழிக்க பல்வேறு சமூக ஆர்வலர்கள் அடிக்கடி போராட்டஙகளை நடத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள்...
குறிப்பாக, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மதுவிற்கு எதிராக பெண்களை திரட்டி அடிக்கடி போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்....
மதுக்கடைகளை மூடக் கோரி நடைப்பயணம் மேற்கொண்டார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ....
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என காந்தியவாதி சசிபெருமாள் தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டார்....
பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் அடிக்கடி மதுவிற்கு எதிராக போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கினறன...
சமூக அமைப்புகள் கூட, மதுக்கடைகளை மூடக் கோரி ஆர்ப்பாட்டங்களை நடத்துகின்றன...
தமிழ் உணர்வாளர்கள் மதுவிற்கு எதிராக குரல் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்...
இப்படி சமூகத்தில் 90 சதவீதம் பேர் மதுவிற்கு எதிராக போராட்டங்களை, ஆர்ப்பாட்டங்களை நடத்தி, எதிர்ப்பை தெரிவிக்கும்போதும், அரசு ஏன் மதுக்கடைகளை மூட முன்வருவதில்லை...
அரசின் கஜானா நிரப்ப வேண்டும் என்பதற்காக மதுக்கடைகளை நடத்தப்படுகின்றன....
மது ஆலை உரிமையாளர்களின் கஜானா நிரப்ப விரும்பும் அரசு, மதுவை தடை செய்ய முன்வருவதில்லை....
இப்படி பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன....
ஆனால், நிலைமையை இப்படியே விட்டுவிட்டால், அடுத்த சில ஆண்டுகளில் தமிழகம் மிகப் பெரிய சரிவை சந்திக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படும்...
சரிவு என்றால், பொருளாதார சரிவு மட்டுமல்ல, மது அருந்தும் பழக்கத்தால், மக்களின் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் கோடிக்கணக்கான பணத்தை செலவழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்...
மருத்துவத் துறைக்காக, அரசுகள் தங்கள் பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்க வேண்டிய நிலை உருவாகும்...
மனிதர்களிடையே உழைக்கும் சக்தி குறைந்து விடும்...
இளைஞர்கள் தள்ளாடுவார்கள்... உழைக்க முன்வர மாட்டார்கள்...
பணிகள் நடக்காது....சோம்பேறிகள் கூட்டம் உருவாகும்....
இது, நிச்சயம் நடக்கும்....மதுவை உடனே ஒழிக்காவிட்டால்....
சமூகம் விழித்துக் கொள்ள வேண்டும்....அரசும் மக்களின் நலனில் உடனே அக்கறை செலுத்த வேண்டும்...
குறிப்பாக பெண்களின் நலனில் அக்கறை செலுத்த முன்வர வேண்டும்....
குடும்பத்தில் அமைதி பிறக்க, சந்தோஷம் மலர உடனே மாநிலம் முழுவதும் உள்ள மதுக்கடைகளை மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்...
அப்படி செய்தால், நிச்சயம் தமிழக அரசை பெண்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமுதாயமும் வாழ்த்தும்...
இப்பிரச்சினையில் அனைத்துக்கட்சிகளும் ஒன்றுபட்டு குரல் கொடுத்து, சமூகத்தில் சீரழிவை ஏற்படுத்தி வரும் மதுவை ஒழிக்க முன்வர வேண்டும்...
விரைவில் நல்லது நடக்கும் என நம்புவோம்.....
எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================================
No comments:
Post a Comment