ஒருநாள் இரவில்.....!
மலையாள படம் ஷட்டரின் தழுவல்தான் இந்த ஒருநாள் இரவில் திரைப்படம்.
தனது மகளின் காதல் அதனால் ஏற்படும் மன அழுத்தம், உடனே மகளின் திருமணத்திற்கு ஏற்பாடு, அதற்கு மனைவி மகள் எதிர்ப்பு என பல்வேறு பிரச்சினைகளால் தவிக்கும் சத்யராஜ், தமக்கு சொந்தமான ஷட்டரில் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்துகிறார்.
பிறகு அங்கிருந்து ஆட்டோவில் கிளம்பும்போது பஸ் ஸ்டாப்பில் நிற்கும் பெண் ஒருவரை பார்த்து சபலம் அடைகிறார்.
பின்னர் ஆட்டோ டிரைவரின் உதவியுடன் அந்தப் பெண்ணை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு லாட்ஜ்க்கு செல்கிறார்.
அங்கு அறை கிடைக்காமல் மீண்டும் தனது ஷட்டருக்கு வந்து அந்த பெண்ணுடன் சேர்ந்து மாட்டிக்கொண்டு வெளியே வராமல் எப்படி தவியாய் தவிக்கிறார் என்பதுதான் ஒருநாள் இரவில் படத்தின் கதை.
சும்மா சொல்லக்கூடாது சத்யராஜ் உண்மையிலேயே நன்றாகவே நடித்து இருக்கிறார்.
தப்பு செய்துவிட்டதாக நினைத்து அவர் தவியாய் தவிப்பது இயற்கையாகவே உள்ளது.
நடிப்பதாக தெரியவில்லை.
விபச்சார அழகியாக வரும் அனுமோள் தமது வசீகரமான முகத்துடன் மட்டுமல்லாமல் நடிப்பிலும் இயற்கையாகவே கலக்கி இருக்கிறார்.
யூகி சேது, ஆர்.சுந்தர்ராஜன், ஆட்டோ டிரைவராக வரும் வருண் உள்ளிட்டோரும் தங்களது பாத்திரங்களில் ஊன்றி நடித்துள்ளனர்.
நவீன் ஐயரின் பின்னணி இசை காட்சிகளுக்கு பொருத்தமாக இருப்பதால் படத்தில் சத்யராஜ் படபடப்பு அடையும்போது அது ரசிகர்களையும் தொற்றிக் கொள்கிறது என்றே கூறலாம்.
மனசாட்சிக்கும் குடும்ப மானம் மரியாதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு குடும்ப தலைவன் திடீரென ஏற்படும் சபலத்தால் எப்படி மனவேதனை அடைகிறான் என்பதை இயக்குநர் அந்தோணி மிக அழகாக திரை வடிவத்தில் கொண்டு வந்து இருக்கிறார்.
படத்தில் பெண் கல்வியின் முக்கியத்துவம் குறித்து வரும் வசனம் மனதை தொடுகிறது.
மொத்தத்தில் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு இருக்கும் ஒருநாள் இரவில் திரைப்படம் ரசிகர்களை கவரவே செய்யும்.
எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்.
No comments:
Post a Comment