எழுச்சியும் வீழ்ச்சியும்...!
மக்களவை தேர்தலுக்கு பிறகு பாஜகவில் ஹீரோவாக கருதப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி, தற்போது மெல்ல மெல்ல ஜீரோவாக மாறி வருகிறார்.
பாஜகவே இனி தன்னால்தான். தாம் இல்லையெனில் கட்சியே இல்லை என்ற இறுமாப்புடன் இருந்த மோடிக்கு, டெல்லி, பீகார் சட்டப்பேரவை மற்றும் உத்தரப் பிரதேச உள்ளாட்சி தேர்தல் தோல்விகள் நல்ல பாடத்தை கற்பித்து உள்ளன.
இந்த தோல்விகளுக்கு பிறகு மோடிக்கு மிகப் பெரிய சரிவு ஏற்பட்டுள்ளது எனலாம்.
வெற்றி கிடைத்தால் அதற்கு மோடி சொந்தம் கொண்டாடுவதும் தோல்வி கிடைத்தால் கட்சியில் உள்ள அனைவரும் பொறுப்பு என கூறுவதை எப்படி ஏற்க முடியும் என்றும் பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோர் தற்போது கேள்வி எழுப்பி உள்ளனர்.
டெல்லி தோல்விக்கு பிறகு மோடி மற்றும் அமித் ஷா பாடம் கற்கவில்லை என குற்றம் சாட்டியுள்ள இவர்கள், பீகார் தோல்விக்கு மோடியும் அமித் ஷாவும்தான் முழு பொறுப்பு என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அத்வானி உள்ளிட்டோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
அதேநேரத்தில் இதுபோன்ற கருத்துகளை கூறினால் கட்சிக்கு மிகப் பெரிய பின்னடைவு ஏற்படும் என்றும் விபரீத பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் அத்வானி & கோ மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஆக மோடிக்கு எதிராக மூத்த தலைவர்கள் உயர்த்தியுள்ள போர்க்கொடியால் பாஜகவில் உண்மையிலேயே சலசலப்பு ஏற்பட்டு உட்கட்சி மோதல் வெடித்து உள்ளது என்றே கூறலாம்.
இத்தகைய ஒரு நிலைக்கு யார் காரணம் என்றால் அதற்கு நிச்சயமாக மோடி என்றே அடித்துக் கூறலாம்.
மத்தியில் ஆட்சி பொறுப்புக்கு வந்த பிறகு மோடி மூத்த தலைவர்களை சிறிதும் கண்டுகொள்ளவில்லை.
அத்வானி உள்ளிட்டவர்களை உதாசீனம் செய்தார்.
அதற்கு முக்கிய காரணம், தாம்தான் பாஜக தம்மால்தான் பாஜக என நினைத்தார்.
அந்த நினைப்பில் தான் அனைத்தும் செய்து வந்தார்.
தம்மை மட்டுமே முன்னிலை படுத்தி மத்திய அரசின் பணிகள் நடக்கும்படி பார்த்துக் கொண்டார்.
அடிக்கடி வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்து உலகம் சுற்றும் வாலிபனாக தம்மை காட்டிக் கொண்டார்.
தம்முடைய பயணங்களின் மூலம் நாட்டிற்கு மிகப் பெரிய நம்மை கிடைத்துவிட்டது போன்று சுய விளம்பரம் செய்துகொண்டார்.
ஒவ்வொரு மாதமும் வானொலியில் உரை.
கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் செல்பி புகைப்படம் எடுத்து மகிழ்ச்சி.
என அனைத்தும் தம்மை சுற்றியே நடக்கும்படி பார்த்துக் கொண்ட மோடி இப்போது பீகார் தோல்விக்கு மட்டும் பொறுப்பு ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்.
தாம் பொறுப்பு இல்லை என்றும் தம்முடைய மவுனத்தின் மூலம் மறைமுகமாக சொல்கிறார்.
இதன்மூலம் இன்னும் தம்மால்தான் பாஜக என மோடி நினைப்பது உறுதியாக தெரிகிறது.
பீகார் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு நாடு முழுவதும் பாஜகவிற்கு எதிரான அலை வீசுவது நன்றாக தெரிகிறது.
ஆக பாஜகவின் திடீர் எழுச்சிக்கும் தற்போதைய படிப்படியான வீழ்ச்சிக்கும் மோடியே காரணம் என்பதுதான் அரசியல் நோக்கர்களின் கருத்து.
எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்.
No comments:
Post a Comment