சகோதரர் விஜயரங்கம்....!
சன் தொலைக்காட்சியில் சேர்ந்த நேரம் அது....
பல ஜாம்பவான்கள் கோலோச்சிய சன் டி.வியின் மையின் நியூஸ் பிரிவில் சேர்ந்தபோது, எனக்கு எல்லாமே வியப்பாக இருந்தது...
அங்குதான் முதல் முறையாக சகோதரர் விஜயரங்கத்தை நான் சந்தித்தேன்...
என்னைவிட வயதில் குறைந்தவர்...
ஆனால், விஷுவல் ஊடகத்தில் அனுபவம் வாய்ந்தவர்...
புதிதாக விஷுவல் மீடியாவில் சேர்ந்தபோது, பல விஷயங்கள் எனக்கு உடனே புரியவில்லை...
பைட்.... என்றார்கள்...
பினாக்கிள்.... என்றார்கள்...
இன்டர்கட்...என்றார்கள்...
இப்படி பல புரியாத வார்த்தைகளில், பாஷைகளில் அடிக்கடி பேசிக் கொண்டார்கள் செய்திப்பிரிவில் இருந்த நண்பர்கள்...
அப்போது, எனக்கு பல விஷயங்களை புரிய வைத்தவர் விஜயரங்கம்...
அச்சு ஊடகத்திற்கு எழுதுவது தனி கலை...
ஆனால், விஷுவல் மீடியாவிற்கு எழுதுவது அதைவிட தனி கலை எனலாம்...
அந்த கலைகளை சொல்லித்தந்த பல சகோதரர்களில் விஜயரங்கமும் ஒருவர்...
பல நாள் அவருடன் இரவு நேர பணிகளில் சேர்ந்து நானும் பணிபுரிந்து இருக்கிறேன்.
உலகச் செய்திகள், விளையாட்டு செய்திகள் மட்டுமல்லாமல், முதல் கட் செய்திகளையும் எழுத ஊக்குவிப்பார் சகோதரர் விஜயரங்கம்...
சன் தொலைக்காட்சியை விட்டு அவர் கலைஞர் தொலைக்காட்சிக்கு சென்றபோதுகூட அவருடன் இருந்த நட்பு குறையவில்லை.
ஏன், சத்தியம் தொலைக்காட்சியின் தலைமைச் செய்தி ஆசிரியராக அவர் சேர்ந்தபோதுகூட, அதே பழைய விஜயரங்கமாகவே என்னிடம் பழகினார். பேசினார்...
எப்போது செல்பேசியில் அழைத்தாலும், உடனே, லைனுக்கு வந்துவிடுவார்...
அன்பாக பேசுவார்...
‘
ஒவ்வொரு நாளும் நண்பர்களுக்கு நான் எஸ்.எம்.எஸ. அனுப்புவது வழக்கம்..
அதில் பல பொன்மொழிகள், வாழ்க்கை தத்துவங்கள், ஏன் ஜோக்குகள்கூட இருக்கும்...
நான் அனுப்பும் எஸ்.எம்.எஸ்.களை படித்து மகிழ்வார்...சில நேரங்களில் பாராட்டு தெரிவிப்பார்..
என்னால் தொடர்ந்து உங்களை போன்று எஸ்.எம்.எஸ்.களை அனுப்ப முடியவில்லை சார் என்பார்...
அண்மையில்கூட அவரிடம் செல்பேசியில் தொடர்பு கொண்டபோது, உடனே லைனுக்கு வந்து பேசினார்.
நலம் விசாரித்தார்.
இப்படி நல்ல உள்ளம் கொண்ட விஜயரங்கம், திடீரென மரணம் அடைந்தது, பலரை போல என்னையும் அதிர்ச்சி அடையச் செய்துவிட்டது.
அவரது மரணம் என்னால் ஜீரணிக்க முடியவில்லை...
ஆனால், எல்லாம் இறைவனின் நாட்டம்....
இயற்கையை யாராலும் வெல்ல முடியாது...
அதேநேரத்தில்,
ஊடகத்துறையில் இருக்கும் நண்பர்கள் தங்களது உடல்நலத்தில் சிறிது அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது விஜயரங்கத்தின் மரணம் மூலம் நமக்கு பாடம் கிடைத்துள்ளது.
குறிப்பாக விஷுவல் மீடியாவில் இருப்பவர்களுக்கு உயர் இரத்த அழுத்த நோய் வர வாய்ப்பு அதிகம்...
எனவே, பணி பணி என்றும் உழைக்காமல், தேவைப்படும்போது, மனதை அமைதிப்படுத்திக் கொள்வது நல்லது.
சகோதரர் விஜயரங்கமே
உங்களுடைய மரணம், பலரை போல எனக்கும் பெரிய இழப்புதான்...
ஒவ்வொரு நாளும் இனி செய்திகளை பார்க்கும்போது, படிக்கும்போது உங்கள் நினைவு எனக்குள் வந்து செல்லும்...
உங்களை என்னால் மறக்கவே முடியாது...
எப்படி அய்யா உங்களை மறக்க முடியும்...
நாம் நெருங்கி பழகவில்லை....
ஆனாலும், நம் இருவரிடமும் உண்மையான அன்பு இருந்தது...
நேசம் இருந்தது..
.பாசம் இருந்தது...
புரிதல் இருந்தது...
உங்கள் ஆன்மா சாந்தி அடையட்டும்...
உங்கள் இழப்பால், உங்கள் குடும்பத்தாருக்கு ஏற்பட்டுள்ள துன்பங்களை, துயரங்களை தாங்கிக் கொள்ளக் கூடிய சக்தியை இறைவன் அவர்களுக்கு கொடுக்கட்டும்.
எஸ.ஏ.அப்துல் அஜீஸ்
======================
No comments:
Post a Comment