சென்னையில் நான்.....! (16)
என்ன...சினிமா தலைப்பு போன்று இருக்கிறது என நினைக்கிறீர்களா...!
சினிமா தலைப்புதான்..
ஆனால்,
என்னுடைய சென்னை வாழ்க்கையில், புறநகர் ரயில்சேவை முக்கிய இடம் பிடித்துக் கொண்டிருப்பதால், அந்த ரயில் பயணங்களில்போது, எனக்கு ஏற்பட்ட பல சுவையான, கசப்பான அனுபவங்களை இன்னும் என்னால் மறக்க முடியவில்லை.
மின்சார ரயில் சேவை, புறநகர் ரயில் சேவை என எப்படி நாம் அழைத்துக் கொண்டாலும்,
என்னை போன்று, சென்னையில் வசிக்கும் ஒரு கோடிக்கும் அதிகமான மக்களுக்கு, மின்சார ரயில் சேவை மிகவும் பலன் அளித்துக் கொண்டிருக்கிறது என்றே கூறலாம்.
சென்னையின் முக்கிய அம்சமாக, அடையாளமாக விளங்கும் மின்சார ரயில் சேவை, மக்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றே கூறலாம்..
மின்சார ரயிலில் பயணிப்பது ஒரு தனிச்சுகம்தான்.
அலுவலகம்,
வீடு,
சுற்றுலா,
என பல்வேறு இடங்களுக்கு, குறைந்த கட்டணத்தில், நம்மை விரைந்து சென்று சேர்க்கின்றன இந்த மின்சார ரயில்கள்.
எனவே, என்னை போன்று நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பலர், சென்னையில் மின்சார ரயில் சேவையை நம்பியே இருக்கிறோம்.
சென்னையில், கடந்த 1931ஆம் ஆண்டு ஏப்ரல் 2ஆம் தேதி முதல்முதலாக, மின்சார ரயில் சேவை தொடங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை கடற்கரை - தாம்பரம் மார்க்கத்தில் இந்த சேவை தொடங்கப்பட்டபோது, குறைந்த அளவு மக்களே மின்சார ரயில் சேவையை பயன்படுத்தி வந்தனர்.
ஆனால்,
தற்போதே, நிலைமையோ அப்படி இல்லை.
தினமும் லட்சக்கணக்கான மக்கள், மின்சார ரயில் சேவையை நம்பியே இருக்கின்றனர்.
சென்னை பாரி முனை பகுதியில் என்னுடைய ஊடக அலுவலகம் இருந்தபோது, சேப்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து நான் தினமும் புறப்பட்டு, சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு வந்து சேர்வது வழக்கம்.
அப்போது, ரயிலில் பயணம் செய்யும்போது, பல விதமான மனிதர்கள், அவர்களில் சிலரின் வினோத பழக்கங்கள் ஆகியவற்றை கண்டு வியப்பது உண்டு.
பயணச் சீட்டு வாங்காமல் தைரியாக வரும் மனிதர்கள்....
பெண்ணை சீண்டுவதற்காகவே வரும் இளைஞர்கள்...
நல்ல ஆடைகளை அணிந்துக் கொண்டு குடும்ப விளக்காக வரும் பெண்கள்...
ஏமாறும் மனிதர்களிடம், பொருட்களை, பணத்தை ஆட்டையை போடும் ஏமாற்று பேர்வழிகள்
என பலவிதமான மனிதர்களை, மின்சார ரயில் பயணங்களின்போது, நான் கண்டு இருக்கிறேன்.
நிமிடத்திற்கு நிமிடம் ரயில்கள் வந்து சென்றாலும், அவசர அவசரமாக ரயிலை பிடிக்க ஆசைப்பட்டு, விபத்தில் சிக்கிக் கொள்ளும் பயணிகளை கண்டு கோபம் அடைந்தது உண்டு.
செல்போன்களில் பேசிக் கொண்டு, கடவுப் பாதையை கடந்து, மின்சார ரயிலில் அடிப்பட்டு உயிரை மாய்த்துக் கொண்ட இளைஞர்கள், பெண்கள் என பலரை கண்டு நொந்தது உண்டு.
ரயில் பயணங்களின்போது, பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு சிரிக்க சிரிக்க பேசி வரும் சிலர், பின்னர் நம்முடைய பொருட்களை, நமக்கே தெரியாமல் எடுத்துக் கொண்டு ஓட்டம் பிடிப்பது உண்டு.
சில நேரங்களில் பிறரை மாட்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் மனித கூட்டங்களையும் நாம் மின்சார ரயில் பயணங்களின்போது பார்க்கலாம்.
இதுபோன்ற, பல அனுபவங்கள் எனக்கு ஏற்பட்டது உண்டு.
எனவே, மின்சார ரயிலில் மட்டுமல்ல, பொதுவாக, ரயில் பயணத்தின்போது, பக்கத்தில் உட்காரும் நபர் குறித்து மிகவும் எச்சரிக்கையாகவே இருப்பேன்.
அதிகம் பேச்சு கொடுக்க மாட்டேன்.
பெண்கள் அமர்ந்து இருக்கும் பகுதியில் அமருவதை தவிர்ப்பேன்.
இதற்கு முக்கிய காரணம், மின்சார ரயிலில் பயணித்தபோது எனக்கு கிடைத்த சில கசப்பான அனுபவங்கள்தான்.
சரி..
முக்கியமான விஷயத்திற்கு வருகிறேன்.
நம்முடைய நண்பர்களில் சிலர், பயணச்சீட்டு வாங்காமலேயே ரயிலில் பயணம் செய்ததை கண்டு, ஒருநாள் எனக்கும் அந்த விபரீத ஆசை வந்தது.
ஏன் நாமும் பயணச்சீட்டு வாங்காமல் ஒருநாள் பயணம் செய்தே பார்க்கலாமே என நினைத்தேன்.
அப்படி, ஒருநாள் சென்றபோது, எப்போதும் வராத டிக்கெட் பரிசோதகர், நான் பயணம் செய்த அந்த நாள் மட்டும் ஏனோ வந்து, என்னை பிடித்துக் கொண்டார்.
டிக்கெட் கேட்டார்.
விழித்தேன். முழித்தேன்.
அபராதம் கட்டு என்றார்.
வேறு வழியில்லாமல், அபாரதம் கட்டி, ரயில் நிலையத்தை விட்டு வெளியே வந்தேன்.
அவமானமாக இருந்தது.
டிக்கெட் வாங்காமல் பயணம் செய்த தவறுக்காக, பின்னர் நான் வருந்தியது உண்டு...
இப்போது, டிக்கெட் வாங்கினாலும், அது பத்திரமாக இருக்கிறதா என்று அடிக்கடி பார்த்துக் கொண்டு ரயிலில் பயணம் செய்து வருகிறேன்.
எல்லாம் அனுபவம் தரும் பாடங்கள்தான்.
சில நேரங்களில் அறையில் தனிமையாக இருக்கும்போது, வெளியே செல்ல மனம் ஆசை கொள்ளும்.
அப்போது,
சேப்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து வேளச்சேரி ரயில் நிலையம் வரை பயணம் செய்து, பின்னர் மீண்டும் திரும்பி வருவது உண்டு..
இதனால், மனம் லேசுபடும்.
மனிதக் கூட்டத்தைக் காணும்போது, சில கவலைகள் மறந்து போகும்...
இப்படி, பல நேரங்களில் கவலை மறக்க, சிரிக்க, சந்தோஷமாக இருக்க, மனித இனங்களை கண்டு ரசிக்க
மின்சார ரயிலில் பயணிப்பது உண்டு.
அதற்காக மின்சார ரயில் சேவை எனக்கு உதவி செய்து வருகிறது.
என்னுடைய சென்னை வாழ்க்கையில் மறக்க முடியாத ஓர் பயணம், மின்சார ரயில் பயணம் என்றால் அது மிகையாகாது.
(அனுபவங்கள் தொடரும்)
எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================