Tuesday, September 23, 2014

மதுவுக்கு எதிராக ஓர் போர்...! (95)

"மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்...! "

நாள் - 95



சரக்கு வாங்க வந்தவர்களின் காலில் விழுந்து பெண்கள் கெஞ்சல்....!

டாஸ்மாக் கடை முன் நூதன போராட்டம்......!!

தமிழகத்தில் ஆறாக ஓடும் மதுவுக்கு எதிராக பலர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர் போராட்டங்கள்....

நூதன போராட்டங்கள்

உண்ணாவிரதங்கள்...

சாலை மறியல்...

பேரணிகள்....

என, மதுவிற்கு எதிராக தமிழகத்தில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

சென்னையில் கடந்த 21.09.2014 அன்று நடைபெற்ற நூதன போராட்டம் அனைவரின் கவனத்தை ஈர்த்தது.

ஆம்,

தமிழ்நாடு பாரத மக்கள் இயக்கம் சார்பில், தமிழகத்தில் மதுவிலக்கை அமுல்படுத்தக்கோரி சென்னை புது வாண்ணாரப்பேட்டையில் டாஸ்மாக் கடைமுன் நூதன  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இயக்க தலைவர் ராமதாசன் தலைமையில் 10 பெண்கள் உட்பட 40 பேர் புதுவண்ணாரப்பேட்டை வஉசி நகரில் உள்ள டாஸ்மாக் கடை முன்பு  திரண்டனர்.

அங்கு சரக்கு வாங்க வந்தவர்களின் காலில் விழுந்து மது பானம் குடிக்காதீர்கள் என வேண்டுகோள் விடுத்தனர்.

இதனால் குடிமகன்கள் பதறிப்போய் விலகி  ஓடினர்.

ஆனாலும் விரட்டி விரட்டி சென்று காலில் விழுந்தனர்.



குடிகாரர்களை பார்த்து சில பெண்கள் கைகூப்பி அழுது குடிக்காதீங்க அண்ணே..என்று வேண்டுகோள்  விடுத்தனர்.

இதனால் குடிமகன்கள் என்ன செய்வதென்று தெரியாமல் தர்மசங்கடத்தில் திண்டாடினர்.

காலில் விழுந்து கெஞ்சியதாலும் அழுது கும்பிட்டு கேட்டதாலும் சில  குடிமகன்கள் சரக்கு வாங்காமல் திரும்பி சென்றனர்.

பலர் இதையெல்லாம் ஒரு பொருட்டாகவே நினைக்காமல், பாட்டில்களை வாங்கினர்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மது பானங்களை வாங்கி சாலையில் போட்டு உடைத்தனர்.

பெண்கள் ஒப்பாரி வைத்து அழுதனர்.

மதுவிலக்கை வலியுறுத்தி மயிலாடுதுறையில் உண்ணாவிரத போராட்டமும் இந்த  இயக்கத்தினர் சார்பில் நடைபெற்றது.

மதுவுக்கு எதிராக நடைபெற்ற இந்த போராட்டம் மக்களிடையே, குறிப்பாக மகா குடிகாரர்களிடையே விழிப்புணர்வை நிச்சயம் ஏற்படுத்தி இருக்கும் என நம்புகிறோம்.

இதுபோன்ற நூதன போராட்டங்கள் தொடர வாழ்த்துகிறோம்.

தமிழகம் மது இல்லாத மாநிலமாக விரைவில் மாற நாமும் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டே இருப்போம் என உறுதியாக சொல்லிக் கொள்கிறோம்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================

(நன்றி...தினகரன் நாளிதழ் (22.09.2014)
==================================

No comments: