Sunday, September 28, 2014

தீர்ப்பு.....!

தீர்ப்பு.....!  

சில சந்தேகங்கள்.....!!

சில கேள்விகள்.....!!!



அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா கடந்த 27ஆம் தேதி பரபரப்பு தீர்ப்பை வழங்கினார்.

நான்கு ஆண்டுகள் சிறை....! 100 கோடி ரூபாய் அபராதம்....!!

அபராதம் கட்டத் தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும்...

இப்படி, ஜெயலலிதாவுக்கு எதிராக அதிரடி தீர்ப்பு வழங்கி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் நீதிபதி மைக்கேல் டி குன்ஹா.

இந்த தீர்ப்பு குறித்து தற்போது பல சந்தேகங்களையும் சில கேள்விகளையும் அதிமுக தரப்பு எழுப்பியுள்ளது.

காவிரி பிரச்சினையில் தமிழகத்தின் நலனுக்காகவும் உரிமைக்காகவும் தொடர்ந்து போராடி வெற்றி பெற்றவர் ஜெயலலிதா...

இதனால், கர்நாடக மக்கள் அவர் மீது கடும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில், ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூரு நீதிமன்றத்தில் நடைபெறுகிறது.

நீதிபதி மைக்கேல் டி குன்ஹா முன்னிலையில் வழக்கின் விசாரணை நடைபெற்றது.

நீதிபதி மைக்கேல் டி குன்ஹா கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்.

கர்நாடக மாநிலத்தின் பல்வேறு இடங்களில் நீதிபதியாக பணியாற்றியவர்.

இதேபோன்று அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி சிங்கும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்...

வழக்கு நடந்த இடம் கர்நாடகா..

நீதிபதி கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்...

அரசு தரப்பு வழக்கறிஞர் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்...

இப்படி, காவிரி பிரச்சினையில் தமிழகத்திற்கு எதிராக இருக்கும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மத்தியில் நடைபெற்ற வழக்கில், எப்படி நியாயம் கிடைத்து இருக்க முடியும் என கேள்வி எழுப்புகிறார்கள் அதிமுகவினர்.

காவிரி பிரச்சினையில் தமிழகத்தின் உரிமைக்காக போராடி, வெற்றியை கண்டு தமிழத்திற்கு பெருமையை சேர்த்த ஜெயலலிதாவை எப்படியும் பழி வாங்க வேண்டும் என துடித்துக் கொண்டிருந்தார்கள் கர்நாடக மக்கள்...



அதற்கு சொத்துக் குவிப்பு வழக்கு சாதகமாக அமைந்து விட்டது என்பது அதிமுக தரப்பு வாதம்...

நீதிபதி மைக்கேல் டி குன்ஹா, நீதியின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கவில்லை என்றும், கோபத்தின் வெளிப்பாடாகவே அவரது தீர்ப்பு உள்ளதாகவும் கூறுகிறார்கள் அதிமுகவினர்..

தீர்ப்பு நாளான 27ஆம் தேதி காலை 11 மணிக்கு தீர்ப்பு வழங்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், மாலை வரை நேரத்தை நீட்டி, பிறகு தீர்ப்பு வழங்கினார் நீதிபதி..

இதன்மூலம், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் உடனடியாக ஜாமின் மனு தாக்கல் செய்ய முடியாது நிலையை குன்ஹா ஏற்படுத்தி விட்டதாகவும் அதிமுகவினர் குற்றம் சாட்டுகிறார்கள்.



காவிரி பிரச்சினையில் தமிழகத்தின் உரிமையை மீட்ட ஜெயலலிதாவை, அரசியல் ரீதியாக எதிர்கொள்ள துணிவு இல்லாமல், தமிழின துரோகி சுப்பிரமணியன் சுவாமி தொடுத்த பொய்யான வழக்கிற்கு, திமுக ஆதரவு அளித்தது என்றும் குற்றம் சாட்டுகிறது அதிமுக தரப்பு.

கர்நாடக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றால்தான் ஜெயலலிதாவை வீழ்த்த முடியும் என்ற ஆசையில், வழக்கை நடத்தி அதன்மூலம், தண்டனை பெற வைத்ததாக திமுக மீது குற்றம் சாட்டுகிறார்கள் அதிமுகவினர்.

இதனால், காவிரி பிரச்சினையில் தமிழகத்தின் உரிமையை மீட்ட ஜெயலலிதாவுக்கு எதிராக செயல்பட்டு, தமிழகத்திற்கு திமுக துரோகம் இழைத்து விட்டதாக குற்றம் சாட்டுகிறது அதிமுக தரப்பு...



இந்நிலையில், தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரபல மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி, ஜெயலலிதா மீதான வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பை அரசியல் எதிரிகள் வேண்டுமானால் ஏற்றுக் கொள்ளலாம் என கூறியுள்ளார்.

ஆனால், இந்த தீர்ப்பை மேன்மைமிக்க வழக்கறிஞர்களால் ஆழமாக பரிசீலிக்க வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஊழல் தடுப்புச் சட்டத்தின்படி, நீதிபதி குன்ஹா தீர்ப்பை வழங்கவில்லை என்றும் ராம்ஜெத்மலானி குற்றம் சாட்டியுள்ளார்.

ஜெயலலிதாவுக்கு நூறு கோடி ரூபாய் அபராதம் விதித்தது சட்டத்தின் எல்லையை மீறியச் செயல் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீதிபதி குன்ஹா, நீதித்துறையில் மிகப் பெரிய பிழையை ஏற்படுத்திவிட்டதாகவும், அபராதம் விதித்ததில் நீதித்துறையின் கோட்பாடுகளை மீறிவிட்டதாகவும் ஜெத்மாலனி குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் வழக்கறிஞர் என்ற முறையில் இந்த தீர்ப்பை எதிர்ப்பதாகவும் ராம்ஜெத்மலானி தெரிவித்துள்ளார்.

ஆக, ஊழல் தடுப்புச் சட்டத்தின்படி தீர்ப்பு வழங்கவில்லை என்பது மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி மூலம் உறுதியாக தெரியவந்துள்ளது.

நீதித்துறையில் மிகப் பெரிய பிழையை நீதிபதி குன்ஹா ஏற்படுத்திவிட்டதாகவும், நீதித்துறையின் கோட்பாடுகளை மீறிவிட்டதாகவும் ஜெத்மலானி கூறி இருப்பதில் உண்மை இருப்பதாக தோன்றுகிறது...

எனவே, சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து அதிமுக தரப்பு எழுப்பும் சந்தேகங்களில், கேள்விகளில் நியாயம் இருப்பதாகவே தோன்றுகிறது...



மேலும் தீர்ப்பு குறித்து மூத்த வழக்கறிஞர் ஜெத்மலானி தெரிவித்த கருத்தால், அதிமுவின் வாதத்திற்கு மேலும் வலு சேர்ந்து இருக்கிறது.

இதன்மூலம், தமிழகத்தில் ஜெயலலிதாவுக்கு மக்கள் மத்தியில் ஓரு புதிய ஆதரவு, செல்வாக்கு அதிகரித்துள்ளது.

அதற்கு இந்த தீர்ப்பு ஒரு வாய்ப்பாக அமைந்துவிட்டதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதிலும் உண்மை இருக்கவே செய்கிறது...

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================


No comments: