காக்கா முட்டை...!
சென்னை சேரி சிறுவர்களின் வாழ்க்கையை அழகிய கவிதையாக வடித்துள்ளார் இயக்குநர் எம்.மணிகண்டன்.
படத்தில் நடித்துள்ள இரண்டு சிறுவர்களும் உண்மையில் நடிக்கவில்லை. வாழ்ந்து இருக்கிறார்கள்.
ஒரு சாதாரண பீட்சாவை (pizza) வைத்துக் கொண்டு இவ்வளவு சுவையாக படத்தை தர முடியுமா என்பது ஆச்சரியம்தான்.
ஆனால் மனம் தைரியம் சமூக அக்கறை கொஞ்சம் இருந்தால் தரமான படத்தை இயக்க முடியும் தர முடியும் என்பதை இந்த படத்தின் மூலம் இயக்குநர் மணிகண்டன் நிருபித்து சாதித்துள்ளார்.
படத்தில் குத்தாட்டம் கிடையாது.
மது அருந்தும் காட்சிகள் கிடையாது.
சென்னை சேரிகளில் குடியும் கும்மாளம்தான் இருக்கும் என பல திரைபடங்களில் நாம் பார்த்து இருக்கிறோம்.
ஆனால் இந்த படத்தில் அதற்கு நேர்மாறாக சேரி மக்களின் வாழ்க்கை அழகிய கவிதையாக செதுக்கப்பட்டுள்ளது.
சென்னை மொழியில் வரும் பாடல்கள் அனைத்தும் படத்துடன் சேர்த்து ரசிகர்களையும் முணுமுணுக்க வைக்கின்றன.
சிறுவர்களின் தாயாக நடித்துள்ள பெண்மணியும் பாட்டியாக வருபவரும் படத்தோடு வாழ்ந்து இருக்கிறார்கள்.
இருவரும் நடிப்பதாகவே தெரியவில்லை.
கதாபாத்திரமாகவே மாறிவிட்டார்கள் எனலாம்.
படத்தின் ஒவ்வொரு காட்சியும் நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ளது.
படத்தின் இறுதி காட்சியில் பீட்சா சாப்பிடும் சிறுவர்கள் இரண்டு பேரும் அதன் சுவை பிடிக்காமல் முகத்தை சுளித்துக் கொண்டு பாட்டி சுட்டுத்தந்த பீட்சா தோசையே மேல் என கூறுவது செம டச்சிங்.
படத்தில் நம்ம ஊடக சகோதர சகோதரிகள் வந்து செல்வது காட்சிகளுக்கு மேலும் வலு சேர்க்கிறது.
நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழில் நல்ல தரமான திரைப்படம் வந்திருக்கிறது.
குடும்பத்தில் உள்ள அனைவரும் தைரியமாக இந்த படத்தை நிச்சயம் பார்க்கலாம்.
காக்கா முட்டை காண கிடைக்காத அரிய முட்டை.
நல்ல சத்துக்கள் (கருத்துக்கள்) நிறைந்த முட்டை.
ரசிகர்கள் அவசியம் சுவைக்க வேண்டிய முட்டை.
எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்.
No comments:
Post a Comment