செயற்கை நுண்ணறிவின் மையத்தில் அரபு மொழி
அரபு பல்கலைக்கழகங்களுக்கு கத்தார் அழைப்பு
தோஹாவில் அரபு நாடுகளில் உயர்கல்வி குறித்த ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பின் (யுனெஸ்கோ) 5-வது மாநாடு 02.11.2026 திங்கள்கிழமை அன்று தொடங்கியது. இந்த மாநாட்டின் தொடக்க அமர்வில் பேசிய கத்தார் கல்வி மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் லோல்வா பின் ரஷித் பின் முகமது அல்-காதர், செயற்கை நுண்ணறிவுன் மையத்தில் அரபு மொழியை வைக்க வேண்டும் என அழைப்பை விடுத்தார்.
இந்தத் தொடக்க விழாவில், யுனெஸ்கோ நிர்வாகக் குழுவின் தலைவரும், யுனெஸ்கோவிற்கான கத்தாரின் நிரந்தரப் பிரதிநிதியுமான டாக்டர் நாசர் பின் ஹமத் அல்-ஹின்சாப், மற்றும் தோஹாவில் உள்ள வளைகுடா நாடுகள் மற்றும் ஏமனுக்கான யுனெஸ்கோ பிராந்திய அலுவலகத்தின் இயக்குனர் சலா கலீத் ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும், ஏராளமான கல்வியாளர்கள், நிபுணர்கள், கொள்கை முடிவெடுப்பவர்கள், பல்கலைக்கழகப் பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு பிராந்திய மற்றும் சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.
செயற்கை நுண்ணறிவு எழுச்சி :
"அரபு பிராந்தியத்தில் உயர்கல்வியின் புதிய கற்றல் சூழல்" என்ற கருப்பொருளைக் கொண்ட இந்த இரண்டு நாள் மாநாட்டில், கல்வி மற்றும் கொள்கை வகுத்தல் துறையைச் சேர்ந்த நிபுணர்கள் பங்கேற்றனர். மாநாட்டில் அமைச்சர் லோல்வா பின் ரஷித் பின் முகமது அல்-காதர் பேசுகையில், "செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களின் எழுச்சியால் உயர்கல்வித் துறை மிக வேகமாக மாறி வருகிறது. கடந்த இரு தசாப்தங்களாக, நமது பல்கலைக்கழகங்கள் கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதிலும், கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களை மேம்படுத்துவதிலும், உயர்கல்வியில் பாலின சமத்துவத்தை அடைவதிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைச் செய்துள்ளன" என்று குறிப்பிட்டார்.
மிகவும் வலுவான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய உயர்கல்வி அமைப்புகளை உருவாக்குவதற்கு பிராந்திய ஒத்துழைப்பு மிக அவசியம் என்பதை அமைச்சர் வலியுறுத்தினார். இருப்பினும், முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும், அரபு பல்கலைக்கழகங்களுக்கு இடையே நிலவும் ஏற்றத்தாழ்வுகள் இன்னும் நீங்கவில்லை என்று அவர் குறிப்பிட்டார். பல அரபு நாடுகளில் குறிப்பாக பாலஸ்தீனம், சூடான், ஏமன் மற்றும் சிரியாவில் பல்கலைக்கழகங்கள் நிதி நெருக்கடி, திறமையான பணியாளர்களைத் தக்கவைத்தல் மற்றும் கல்விச் செயல்பாடுகளில் ஏற்படும் தடைகள் போன்ற சவால்களைத் தொடர்ந்து எதிர்கொண்டு வருகின்றன. அமைச்சர் அல்காதர் இது குறித்துக் கூறுகையில், "யுனெஸ்கோவின் மதிப்பீட்டின்படி, காசாவில் உள்ள பல்கலைக்கழக வளாகங்களில் 95 சதவீதம் அழிக்கப்பட்டுள்ளன அல்லது சேதமடைந்துள்ளன. இதில் 22 வளாகங்கள் முற்றிலுமாக அழிந்துவிட்டன. சூடானில் 124 பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் அழிக்கப்பட்டுள்ளன அல்லது சூறையாடப்பட்டுள்ளன. ஏமனிலும் இத்தகைய கடினமான சூழலே நிலவுகிறது" என்று சுட்டிக்காட்டினார்.
அறிவுசார் சொத்துக்கள் இழப்பு :
மேலும் தொடர்ந்து பேசிய அமைச்சர், "இதன் பொருள், கல்வியாளர்களும் ஆராய்ச்சியாளர்களும் பல தசாப்தங்களாகக் கட்டமைத்த அறிவியல் மற்றும் அறிவுசார் சொத்துக்கள் இழக்கப்பட்டுள்ளன என்பதாகும். இது நமது பொதுவான அரபு அறிவியல் நினைவகத்தின் ஒரு பகுதியாகும். கல்வியைத் தொடர வாய்ப்புகளை வழங்குதல், பாதிக்கப்பட்ட ஆராய்ச்சியாளர்களுக்கு அடைக்கலம் அளித்தல், மற்றும் கல்வி மற்றும் ஆராய்ச்சியின் தொடர்ச்சியை உறுதி செய்யும் கூட்டணிகளை உருவாக்குதல் ஆகியவற்றின் மூலம், இந்த அறிவார்ந்த சொத்துக்களைப் பாதுகாப்பதில் பங்களிக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது" என்று கூறினார்.
அரபு பல்கலைக்கழகங்களில் செயற்கை நுண்ணறிவு :
இன்றைய அரபு பல்கலைக்கழகங்கள் எதிர்கொள்ளும் மிக முக்கியமான மாற்றங்களில் ஒன்று செயற்கை நுண்ணறிவு என்று குறிப்பிட்ட அமைச்சர், இதன் தாக்கம் பல்கலைக்கழகங்களின் அடிப்படை நோக்கங்களையே மாற்றியமைப்பதாகக் கூறினார். அறிவு உருவாக்கம் மற்றும் மதிப்பீடு முதல், தேவையான திறன்களைக் கொண்ட தகுதியுள்ள பட்டதாரிகளை உருவாக்குவது வரை, அனைத்து அம்சங்களிலும் இதன் தாக்கம் உணரப்படுகிறது. "இதன் பொருள், இத்தொழில்நுட்பங்களின் பயன்பாட்டை நிர்வகிக்கும் விதிகள் இன்னும் உருவாக்கப்பட்டு வருகின்றன என்பதாகும். இந்தச் செயல்பாட்டில் பங்காளிகளாக மாற அரபு பல்கலைக்கழகங்களுக்கு இன்னும் வாய்ப்பு உள்ளது. நவீன தொழில்நுட்பங்கள் நம்மிடம் அரபு மொழியில் உரையாடுவது மட்டும் போதாது; அந்தத் தொழில்நுட்பங்களின் அடித்தளத்திலும் உருவாக்கத்திலும் நமது மொழி இடம்பெற வேண்டும்" என்று அமைச்சர் வலியுறுத்தினார்.
=================
செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களின் எழுச்சியால் உயர்கல்வித் துறை மிக வேகமாக மாறி வருகிறது. கடந்த இரு தசாப்தங்களாக, நமது பல்கலைக்கழகங்கள் கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதிலும், கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களை மேம்படுத்துவதிலும், உயர்கல்வியில் பாலின சமத்துவத்தை அடைவதிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைச் செய்துள்ளன"
=================
கத்தாரின் 'ஃபனார்' முன்னெடுப்பு, அரபு மொழியை மேம்படுத்துவதற்கான ஒரு சிறந்த உதாரணம் என்று அமைச்சர் அல்காதர் குறிப்பிட்டார். "இதற்கான ஒரு முன்னெடுப்புதான் 'ஃபனார்'. இது ஹமத் பின் கலீஃபா பல்கலைக்கழகத்தின் 'கத்தார் கணினி ஆராய்ச்சி நிறுவனம்' தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துடன் இணைந்து உருவாக்கிய ஒரு மாதிரியாகும். கத்தாரிலும் பிற அரபு நாடுகளிலும் உள்ள பல பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் இந்த மாதிரியைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன" என்று அவர் விளக்கினார்.
அரபு பல்கலைக்கழகங்களுக்கு அழைப்பு :
"எனவே, அரபு பல்கலைக்கழகங்களும் உயர்கல்வி நிறுவனங்களும் அரபு மொழியை அடிப்படையாகக் கொண்ட இத்தகைய மாதிரிகளை ஏற்றுக்கொண்டு, அவற்றை மேம்படுத்த பங்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இது ஒரு கூட்டு அரபுத் திட்டமாக மாறி, கல்வி மற்றும் அறிவு உருவாக்கத்தின் எதிர்காலத்தில் நமது மொழியின் இருப்பை மேலும் வலுப்படுத்தும்" என்று அமைச்சர் வலியுறுத்தினார். "இந்த மாநாடு, யுனெஸ்கோவின் உயர்கல்வியை மாற்றுவதற்கான செயல்திட்டத்தின் அரபுப் பதிப்பின் வெளியீட்டையும் குறிக்கிறது. அறிவைப் பாதுகாத்தல், அதை உருவாக்குதல் மற்றும் வாய்ப்புகளுக்கான சமமான அணுகலை உறுதி செய்தல் ஆகியவற்றின் அடிப்படையில், 2030-க்கு அப்பால் அரபு நாடுகளின் பகிரப்பட்ட முன்னுரிமைகளை வடிவமைக்க இந்த விவாதங்கள் உதவும் என்று நாங்கள் நம்புகிறோம்," என்று கூறி அமைச்சர் லோல்வா பின் ரஷித் பின் முகமது அல்-காதர் தனது உரையை நிறைவு செய்தார்.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்




No comments:
Post a Comment