Friday, July 31, 2015

இனி வேறு வழியில்லை....!

இனி வேறு வழியில்லை....!

கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே டாஸ்மாக் மதுக்கடையை அகற்றக் கோரி, செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட காந்தியவாதி சசிபெருமாள் நீண்ட நேரத்துக்குப் பிறகு சிறிது நேரத்தில் உயிரிழந்தார்.

மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி தொடர்ந்து போராடிய சசிபெருமாளின் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கருணாநிதி: துன்பம் எப்போதும் துணையோடு வரும் என்பதுபோல அப்துல் கலாம் மறைந்த துயரத்தில் இருக்கும்போது, காந்தியவாதியான சசிபெருமாள் மறைந்தது அதிர்ச்சி அளிக்கிறது.

மு.க.ஸ்டாலின்: சசிபெருமாளின் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது.

விஜயகாந்த்: போராட்டக் களத்திலேயே சசிபெருமாள் இறந்த செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

தமிழிசை செüந்தர்ராஜன்: சசிபெருமாளின் மறைவு தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்தியே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தை ஏற்படுத்துகிறது. பள்ளி, கல்லூரி, வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலுள்ள மதுக்கடைகளையேனும் உடனடியாக தமிழக அரசு அப்புறப்படுத்த வேண்டும்.

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்: சசிபெருமாள் நடத்திய பல்வேறு போராட்டங்களை ஆட்சியாளர்கள் கவனத்தில் கொள்ளவில்லை. மது ஒழிப்புக் கோரிக்கைக்காக அவர் உயிரிழக்க நேர்ந்தது மிகவும் வேதனைக்குரியது.

ஜி.கே.வாசன்: சசிபெருமாளின் இழப்பு மது ஒழிப்புப் பிரசாரத்துக்குப் பேரிழப்பாகும். பூரண மதுவிலக்கை தமிழகத்தில் அமல்படுத்துவதற்காக, ஆபத்தான முயற்சியில் ஈடுபடாமல் அறவழியில் அனைவரும் போராட வேண்டும்.

பழ.நெடுமாறன்: சசிபெருமாளின் உண்மையான தியாகத்தை மதிக்கும் வகையில் உடனடியாக மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.

ஜி.ராமகிருஷ்ணன்: மதுவற்ற தமிழகம் உருவாகத் தொடர்ந்து போராடுவதே சசிபெருமாளுக்கு செலுத்தும் அஞ்சலியாகும்.

இரா.முத்தரசன்: மதுவால் பிறர் ரத்த வாந்தி எடுக்கக் கூடாது என்று போராடியவர், ரத்த வாந்தி எடுத்து மரணமுற்றது வேதனை அளிக்கிறது. தமிழகத்தில் மதுவிலக்கை உடனே அமல்படுத்த வேண்டும்.

ராமதாஸ்: சசிபெருமாள் மறைவு மது ஒழிப்புப் போராட்டத்துக்குப் பெரும் இழப்பாகும். டாஸ்மாக் மதுக்கடையை அகற்றியிருந்தால், அவரைக் காப்பாற்றியிருக்க முடியும்.

அன்புமணி: டாஸ்மாக் மதுக்கடைகளை மூடியிருந்தால் சசிபெருமாளைக் காப்பாற்றியிருக்க முடியும். இவ்விஷயத்தில் இனியும் பிடிவாதமாக இருக்காமல், தமிழக அரசு உடனடியாக மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.

தி.வேல்முருகன்: சசிபெருமாளின் உயிர்த் தியாகத்துக்கு மதிப்பளித்தாவது, தமிழகத்தில் பூரண மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும்.

தொல்.திருமாவளவன்: சசிபெருமாளின் உயிரிழப்புக்குப் பிறகாவது, தமிழக அரசு பிடிவாதத்தைத் தளர்த்திக்கொண்டு, மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.

கி.வீரமணி: தமிழக அரசின் கண்கள் இதற்குப் பிறகாவது திறக்கப்பட வேண்டும்; மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.

கே.எம். காதர் மொய்தீன்: தமிழகத்தில் முழு மதுவிலக்கு வேண்டும் என்ற லட்சியத்துடன் நீண்ட காலமாகப் பாடுபட்டு வந்த காந்தியவாதி சசிபெருமாள் மரணமடைந்திருப்பது வருத்தத்துக்குரியது. இவ்வளவு காலமாக எந்தக் கொள்கைக்காக அவர் பாடுபட்டு வந்தாரோ, அந்த முழு மதுவிலக்குக் கொள்கையைக் கொண்டு வர அரசு பாடுபட வேண்டும்.

மதுவுக்கு எதிராக தமிழகமே தற்போது ஒன்று திரண்டு நிற்கிறது.

இனியும் தமிழக அரசு மவுனம் கடைப்பிடிக்கக் கூடாது.

மதுவிலக்கு விவகாரத்தில் அலட்சியமாக இருக்கக் கூடாது.

உடனே டாஸ்மாக் கடைகளுக்கு மூடு விழா நடத்த வேண்டும்.

இல்லையென்றால் தியாகி சசிபெருமாளைப் போன்று மதுவிற்கு எதிராக பலர் தங்களது உயிர்களை இழக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் ஆபத்து உண்டு.

இதை மாநில அரசு உணர்ந்துக் கொண்டு நல்ல முடிவு உடனே எடுக்க வேண்டும்.

இதுதான் தமிழக பெண்களின் எதிர்பார்ப்பு.

ஏன், ஒட்டுமொத்த தமிழகத்தின் எதிர்பார்ப்பு என்றே கூறலாம்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்.

Saturday, July 25, 2015

தூக்குத் தண்டனை....! இரட்டை நிலை....!!

தூக்குத் தண்டனை....! 

தமிழக தலைவர்களின் இரட்டை நிலை....!!

தூக்குத் தண்டனை அறவே ஒழிக்கப்பட வேண்டும்.

உலகில் உள்ள பல நாடுகளில் தூக்குத் தண்டனை ஒழிக்கப்பட்டு விட்டது.

இந்தியாவில் இன்னும் அது தொடர்கிறது.

மனித நேயத்திற்கு எதிரான இந்த பழக்கத்தை, வழக்கத்தை உடனே நிறுத்த வேண்டும்.

இப்படி தூக்குத் தண்டனைக்கு எதிராக தமிழகத்தில் உள்ள சில அரசியல் கட்சித் தலைவர்கள் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறார்கள்.

ஆனால், மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள யாகூப் மேமனுக்கு வரும் 30ஆம் தேதி தூக்குத் தண்டனை நிறைவேற்ற நடவடிக்கைகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், அதற்கு எதிராக தமிழக தலைவர்கள் யாராது குரல் எழுப்புகிறார்களா என கேள்வி எழுப்பினால், பதில்,  இதுவரை இல்லை என்றே வருகிறது.

சமூக அமைப்பைச் சேர்ந்த ஒருசிலர் மட்டுமே, எதிர்ப்பு தெரிவித்து கருத்து தெரிவித்துள்ளனர்.

மும்பை தொடர்  குண்டுவெடிப்பு வழக்கில் யாகூப் மேமன் குற்றவாளியா இல்லையா என்பது கேள்வி அல்ல.

தூக்குத் தண்டனையை எதிர்த்து குரல் கொடுப்பவர்கள், அனைவரையும் சமமாக அல்லவா பார்க்க வேண்டும்.

தூக்குத் தண்டனைக்கு எதிராக குரல் எழுப்பும் தமிழக தலைவர்கள்,முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக  யாகூப் மேமனுக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றுவதை சிறிதும் கண்டுக் கொள்ளவில்லை.  அல்லது பொருட்படுத்தவில்லை.

இது என்ன நியாயம்.

இதன்மூலம் தூக்குத் தண்டனை விவகாரத்தில் தமிழக தலைவர்கள் இரட்டை நிலையை கடைப்பிடிப்பது உறுதியாக தெரிகிறது அல்லவா.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்

Wednesday, July 22, 2015

கிளம்பியாச்சு....!

ஈத் பெருநாள் தொழுகைக்கு கிளம்பியாச்சு....!



புத்தாடை அணிந்து நறுமணம் பூசிக் கொண்டு இனிப்பு சாப்பிட்டு ரமலான் மாதத்தில் நோன்பு வைக்க வாய்ப்பு அளித்து நல்வாழ்வு தந்த இறைவனுக்கு நன்றி செலுத்த ஈகைத் திருநாள் தொழுகைக்காக பள்ளிவாசலுக்கு செல்ல கிளம்பியாச்சு.


எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்

பாலிமர் டி.வி கேள்வி ?

ஊடக ஜனநாயகத்திற்கு ஆபத்தா...!

சன் டி.வி.யின் புலம்பலுக்கு பாலிமர் டி.வி. எழுப்பும் கேள்வி ?


முறைகேடாக தொலைபேசி இணைப்புகளை பயன்படுத்திய வழக்கு.

ஏர்செல் நிறுவன வழக்கு.

என இரண்டு வழக்குகளில் சன் டி.விக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது மத்திய அரசு.

பாதுகாப்பு அம்சங்களை காரணம் காட்டி சன் நெட்வொர்க்கை முடக்க நினைக்கிறது மத்திய அரசு.
உடனே ஊடக ஜனநாயகத்திற்கு ஆபத்து.

ஊடக சுதந்திரத்தை நசுக்கி வருகிறது மோடி அரசு என சன் டி.விக்கு ஆதரவாக சில அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்கள்.

இந்நிலையில் சன் டி.விக்கு ஆதரவாக அறிக்கை விட்ட தலைவர்களிடம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது பாலிமர் டி.வி.

சன் நெட்வொர்க் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் ஆகியோருக்கு எதிரான வழக்குகளை அவர்கள் சட்ட ரீதியாக சந்தித்து குற்றமற்றவர்கள் என நிருபிக்க வேண்டியதுதானே என கேட்கிறது பாலிமர் டி.வி.


ஊடக சுதந்திரம் குறித்து இன்று புலம்பும் சன் டி.வி. நிறுவனம் எத்தனை தொலைக்காட்சி நிறுவனங்களின் குரல்வளையை நசுக்கியது என்று கேட்கும் பாலிமர் டி.வி. அப்போது இந்த தலைவர்கள் என்ன செய்துக் கொண்டு இருந்தார்கள் என்றும் வினா எழுப்பியுள்ளது.

குறிப்பாக

புதிய தலைமுறை
பாலிமர்
நிலா
ஜி தமிழ்

போன்ற பல ஊடகங்களின் வளர்ச்சியை சன் டி.வி. நிறுவனம் எப்படி தடுத்தது என்று சில விளக்கங்களை கூறியுள்ள பாலிமர் டி.வி. சன் டி.வி. நிறுவனத்தின் இந்த நடவடிக்கையால் இந்நிறுவனங்களில் பணிபுரிந்த பலர் பாதிப்பு அடைந்தனர் என்றும் இப்போது சன் டி.வி. நிறுவன ஊழியர்களின் நலனில் அக்கறை செலுத்தும் அரசியல் கட்சித் தலைவர்கள் சன் டி.வி. நிறுவன செயலால் பல ஊடக நிறுவன ஊழியர்கள் பாதிக்கப்பட்டபோது மவுனம் கடைப்பிடித்து ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.

எனக்கு என்னவோ பாலிமர் டி.வி. எழுப்பும் பல கேள்விகளில் நியாயம் இருப்பதாகவே தோன்றுகிறது.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 
பத்திரிகையாளர்.

Tuesday, July 21, 2015

மீண்டும் மதுவிலக்கு...!

தமிழகத்தில் மீண்டும் மதுவிலக்கு...!


திமுக அறிவிப்பு...!!


மதுவின் தீமையால் தமிழகம் தள்ளாடி வரும் நிலையில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மாநிலத்தில் மதுவிலக்கு அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அக்கட்சியின் தலைவர் கலைஞர் கருணாநிதி விடுத்துள்ள அறிக்கையில் உறுதி அளித்துள்ளார்.

இந்த தகவலை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அப்பாடா மதுவின் தீமையை உணர்ந்து மக்களின் நலனில் அக்கறை கொண்டு தமிழகத்தில் மதுவை அறிமுகப்படுத்திய திமுகவே மீண்டும் மதுவிலக்கு அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்து இருப்பது ஆறுதல் அளிக்கிறது.

மகிழ்ச்சி அளிக்கிறது.

திமுகவின் இந்த நல்ல மாற்றம் உண்மையில் ஆனந்தம் அளிக்கிறது.

எனவே அந்த அறிவிப்பை நாம் வரவேற்கிறோம்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 
பத்திரிகையாளர்.

நீதி கேட்டு போராடுவது யார்...?

நீதி கேட்டு போராடுவது யார்...?


துருப்பிடித்த தமிழகம்.

நீதி கேட்டு பேரணி.

இப்படி முழக்கத்துடன் கடலூரில் பேரணி ஒன்றை நடத்தி முடித்துள்ளது திமுக.

இந்த பேரணியில் மூன்று லட்சம் பேர் கலந்து கொண்டதாக திமுக தரப்பில் கூறப்படுகிறது.

சரி.

நீதி கேட்டு போராடுவது யார்...?

தமிழகம் துருப்பிடிக்க யார் காரணம்...?

தமிழகத்தில் முதல் முதலில் மதுவை அறிமுகம் செய்தது யார்..?

ஊழல் என்ற பெயரை அறிமுகப்படுத்தி அதை மக்களிடையே பரப்பியது யார்...?

அப்பாவி மக்களின் நிலங்களை சொத்துக்களை மிரட்டி அபகரித்து கொள்ளை அடித்தது யார்...?

இப்படி பட்டியலைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

அந்தப் பட்டியலின் நீளம் அதிகம்.

தமிழகம் துருப்பிடிக்க காரணமே திமுக ஆட்சிதானே.

இந்த லட்சணத்தில் நீதி கேட்டு திமுக போராட்டம் நடத்துவது சரியா ?

நியாயமா ?

இப்படி படிக்காத சாதாரண மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
பேசிக் கொள்கிறார்கள்.

என்ன பதில் சொல்வது மக்களே.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 
பத்திரிகையாளர்.

Thursday, July 16, 2015

திருக்குர்ஆன் என்ன எதிர்பார்க்கிறது...?

திருக்குர்ஆன் மனிதர்களிடத்தில் என்ன எதிர்பார்க்கிறது...?


இந்தாண்டு புனித ரமலான் மாதத்தில் இறை வேதமான திருக்குர்ஆனின் தமிழாக்கத்தை முழுவதும் படிக்கக்கூடிய பாக்கியத்தை இறைவன் எனக்கு தந்தான்.

அதற்காக இறைவனுக்கு முதலில் நான் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அரபி மொழியில் உள்ள திருக்குர்ஆனை தமிழ் மொழியில் படிக்கும்போது படித்தபோது இறைவனின் அற்புதம் என் கண் முன்பு நிழலாடியது எனலாம்.

திருக்குர்ஆனில் இறைவன் என்ன சொல்கிறான் ?

மனிதர்களிடம் இருந்து என்ன எதிர்பார்க்கின்றான் ?

மனித வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் ?

மனிதனின் கடமைகள் பொறுப்புகள் என்ன ?

என்பதை என் அறிவுக்கு எட்டிய வரையில் புரிந்துகொள்ள முடிந்தது.

திருக்குர்ஆனில் மூன்று முக்கிய கருத்துக்கள் திரும்ப திரும்ப கூறப்பட்டுள்ளன.

அது

இறைவன் இருப்பதை நம்புவது.

அவன் ஒருவனே என மிகவும் உறுதியாக நம்புவது.

இறைவனுக்கு இணை துணைகளை ஏற்படுத்தாமல் இருப்பது.

இறைத்தூதர்களின் வருகை சந்தேகம் இல்லாமல் நம்புவது.

இந்த உலக வாழ்க்கைக்கு பிறகு நாம் சந்திக்க இருக்கும் மறுமை வாழ்க்கை குறித்து நம்பிக்கை கொள்வது.

இந்த மூன்று கருத்துகளை முன் வைத்து திருக்குர்ஆனில் ஏராளமான விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளன.

நபிமார்களின் வரலாறுகள்.

அந்த வரலாறுகள் மூலம் மனிதர்களுக்கு கிடைக்கும் படிப்பினைகள்.

மனிதன் மனிதர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள்.

உலகில் வாழும் வரை மனிதனின் பொறுப்புகள்.

தாய் தந்தை உற்றார் உறவினர்கள் ஏழை எளிய மக்கள் மற்றும் சமூகத்திற்கு மனிதன் ஆற்ற வேண்டிய கடமைகள்.

திருமண பந்தம் மனைவியிடம் கண்ணியமான முறையில் நடந்துக் கொள்வது.

பெண் குழந்தைகளை பாரமாக கருதாமல் ஒதுக்கி தள்ளாமல் நன்கு வளர்ப்பது.

இறை வழியில் தாராளமாக செலவு செய்வது.

இறை நம்பிக்கையுடன் தொழுகையை நிறைவேற்றுவது.

ஜகாத் கொடுப்பது.

அது யாருக்கு கொடுப்பது.

எப்படி கொடுப்பது.

ரமலான் மாதத்தில் நோன்பு வைப்பது.

வாழ்நாளில் ஹஜ் கடமையை நிறைவேற்றுவது.

இயற்கையின் அற்புதங்களை பார்த்து இறைவனுக்கு நன்றி செலுத்துவது.

வானம் சூரியன் சந்திரன் பூமி மலைகள் இருகடல்கள் மழை நீர் வறண்ட பூமி கால்நடைகள் மரம் செடிகொடி என இயற்கையின் அற்புதங்களை கண்டு அவற்றை ஆய்வு செய்ய அழைக்கிறது திருக்குர்ஆன்.

இவையெல்லாம் வீண் விளையாட்டிற்காக படைக்கப்படவில்லை என்கிறது திருக்குர்ஆன்.


மனிதன் எப்படி படைக்கப்படுகின்றான்?..

மரணத்திற்கு பிறகு அவன் எப்படி மீண்டும் படைக்கப்பட்டு மறுமையில் தனது செயல்களுக்கு கேள்வி கணக்கு கேட்கப்படுவான் என்பதை திருக்குர்ஆன் திரும்ப திரும்ப கூறி உலகில் ஆட்டம் போடும் மனிதர்களையும் அட்டகாசம் செய்யும் மக்களையும் எச்சரிக்கை செய்கிறது.

படைக்கப்பட்ட ஒவ்வொன்றும் அழியக்கூடியதே.

அந்த வகையில் சூரியன் சந்திரன் உலகம் என இறைவனால் படைக்கப்பட்ட அனைத்தும் ஒருநாள் அழிந்து விடும் என கூறுகிறது திருக்குர்ஆன்.

குரானின் இந்த கூற்றை இன்றைய விஞ்ஞான உலகமும் தமது ஆய்வுகளின் மூலம் உண்மை என நிருபித்து வருகிறது.

திருக்குர்ஆன் முஸ்லிம்களுக்கு மட்டும் சொந்தமானது அல்ல.

அது உலக மக்கள் அனைவருக்கும் பொதுவானது.

இதைத்தான் திருக்குர்ஆனில் இறைவன் கூறுகின்றான்.

இது உலக மக்கள் அனைவருக்கும் ஒரு நல்லுரையே அன்றி வேறில்லை.

ஆக திருக்குர்ஆன் உலக மக்கள் அனைவருக்கும் சொந்தம் என்பது தெளிவாகிறது.

எனவே நாம் அனைவரும் அதனை நன்கு படித்து புரிந்துகொள்ள வேண்டும்.

அதன்படி மனதை தூய்மைப்படுத்தி வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்.

குரான் கூறுகிறது.

திண்ணமாக வெற்றி பெற்று விட்டான் மனதைத் தூய்மைப்படுத்தியவன். மேலும் தோற்று விட்டான் அதனை நசுக்கியவன்.

என்ன அற்புதமான வார்த்தைகள்.

மேலும்

நன்மையின் கூலி நன்மையைத் தவிர வேறேதுவாய் இருக்க முடியும்.
என்றும் குரான் கேள்வி எழுப்புகிறது.

மனிதன் தான் மட்டும் நல்லவனாக ஒழுக்கம் உள்ளவனாக இருந்தால் போதாது.

வாழ்ந்தால் போதாது.

மற்றவர்களையும் நல் வாழ்க்கைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

திருக்குர்ஆன் கூறுகிறது.

காலத்தின் மீது சத்தியமாக மனிதன் உண்மையில் நஷ்டத்தில் இருக்கின்றான். ஆனால் எவர்கள் இறை நம்பிக்கை கொண்டும் நற்செயல்கள் புரிந்துக் கொண்டும் மேலும் ஒருவருக்கு ஒருவர் சத்தியத்தை எடுத்துரைத்தும் பொறுமையை கடைப்பிடிக்குமாறு அறிவுரை கூறிக்கொண்டும் இருந்தார்களோ அவர்களை தவிர.

திருக்குர்ஆனின் இந்த அறிவுரை ஏற்று உலக மக்கள் செயல்பட்டால் இம்மை மறுமை ஆகிய இரண்டு உலகிலும் அமைதியான மகிழ்ச்சியான வாழ்க்கையை பெறலாம்.

திருக்குர்ஆன் ஒரு கடல்.

ஏன் அதைவிட அதிகம்.

அந்த அற்புதத்தில் என் அறிவுக்கு எட்டிய சில கருத்துக்களை மட்டுமே இங்கே நான் பதிவு செய்துள்ளேன்.

திருக்குர்ஆனை மீண்டும் மீண்டும் படிக்கக்கூடிய வாய்ப்பை பாக்கியத்தை இறைவன் எனக்கு தந்து அருள் புரிய வேண்டும்.

அதன்மூலம் என் கல்வி ஞானத்தை மேம்படுத்த வேண்டும்.

இதுதான் இந்த ரமலானில் எனது பிரார்த்தனை.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 
பத்திரிகையாளர்.

Wednesday, July 15, 2015

அற்புத செயல்....!

இறைவன் முன் அரசனும் ஆண்டியும் சமம்....!

இதுதான் இஸ்லாத்தின் கொள்கை. போதனை.

நாடாளும் அரசன் பள்ளிவாசலுக்கு கால தாமதாக சென்றால், கூட்டுத் தொழுகையின்போது பின் வரிசையில்தான் நிற்க வேண்டும்.

ஆண்டி குறித்த நேரத்தில் சென்றுவிட்டால் முன் வரிசையில் இடம் பிடித்து விடலாம்.

இந்த அற்புத போதனையை உலகம் முழுவதும் உள்ள பள்ளிவாசல்களில் இஸ்லாமியர்கள் கடைப்பிடித்து வருகின்றனர்.

சரி.

சவுதி அரேபியாவில் உள்ள கபா புனித பள்ளிவாசலின் தலைமை இமாமாக இருக்கும் அப்துர் ரஹ்மான் சுதைஸியின் அற்புத செயலை இங்கு பார்ப்போம்.

ரமலான் புனித நோன்பு வைக்கும் அனைத்து தரப்பு மக்களிடமும் அன்புடன் பழகிய அவர், அதை தமது செயலிலும் செய்துக் காண்பித்து நிருபித்துள்ளார்.

மனித நேய பண்புகளை வெளிப்படுத்தியுள்ளார்.

ஆம்.


கபா பள்ளிவாசலில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு துறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற இமாம் அப்துர் ரஹ்மான் சுதைஸி, துப்புரவுப் பணியாளர்களுடன் இணைந்து அவர்களுடன் அமர்ந்து, நோன்பை துறந்தார்.

எப்படிப்பட்ட ஒரு அற்புதமான செயல்.

நம் நாட்டில் உள்ள அரசியல் தலைவர்கள் முதல், பண முதலாளிகள் வரை இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் எப்படி நடந்துக் கொள்கிறார்கள்.

சாதாரண மனிதர்களை கொஞ்சமாவது இவர்கள் மதிக்கிறார்களா.

நாம் யோசிக்க வேண்டும்.

இறைவன் முன்பு அனைவரும் சமம் எனும்போது, நமக்குள் எதற்கு பிரிவினை, பேதம்.

கபா பள்ளிவாசலின் தலைமை இமாம் அப்துர் ரஹ்மான் சுதைஸியின் செயலை கண்டு நம் சிந்தனைகளில், எண்ணங்களில் நல்ல மாற்றங்கள் வர வேண்டும்.

அதன்மூலம் நாமும் மனித புனிதர்களாக மாற முயல வேண்டும்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்.

Tuesday, July 14, 2015

நா காக்க...!

யாகாவாராயினும் நா காக்க...!


செய்தி அறையில் எப்போதும் ஓரே பரபரப்பு.

அதனால் தொற்றிக் கொள்ளும் டென்ஷன்.


இப்படிப்பட்ட சமயத்தில் நகைச்சுவை உணர்வுடன் பேசி டென்ஷனை குறைத்துக் கொள்வது வழக்கம்.

செய்தி அறையில் யாராவது மொக்கை ஜோக் அடித்தால் சிரிப்பு இன்னும் கூடிவிடும்.


அப்படிப்பட்ட ஒரு சுழலில் எடுத்த புகைப்படங்கள்தான் இவை.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 
பத்திரிகையாளர்.

எம்.எஸ்.வி.....!

எம்.எஸ்.வி.....!


கல்லூரி நாட்களில் சினிமா மோகத்தில் கதை எழுதி அதற்கு திரைக்கதை வசனம் என வடிவம் கொடுத்து டைட்டில் போடும்போது இயக்குநர் என்று என் பெயரை போட்டு மகிழ்ச்சி அடைவேன்.

என் படத்திற்கு இசை எம்.எஸ்.விஸ்வநாதன் என்று டைட்டில் கார்டு போடுவேன்.

அப்போது எனக்கும் மறைந்த என் நண்பர் சீதாராமனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடக்கும்.

காரணம் இசைஞானி இளையராஜா சினிமாவில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த ஆரம்பகால கட்டம் அது.

நம் படத்திற்கு இளையராஜாவின் இசைதான் சரியாக இருக்கும் என்பார் சீதாராமன்.

ஆனால் நானோ எம்.எஸ்.வி.யின் பக்கம் உறுதியாக நிற்பேன்.

அதற்கு பல காரணங்கள் உண்டு.

எம்.எஸ்.வி.யின் இசை மட்டுமன்றி அவரது குரலும் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

நீ இல்லாத இடமே இல்லை
நீதானே உலகின் எல்லை
அல்லாஹ் அல்லாஹ்
யா அல்லாஹ் அல்லாஹ்

என்ற கவிஞரின் வரிகளுக்கு உயிர் கொடுத்த மகான் அல்லவா எம்.எஸ்.வி.

சொல்லத்தான் நினைக்கிறேன்
உள்ளதால் துடிக்கிறேன்
வாய் இருந்தும் சொல்வதற்கு வார்த்தை இன்றி தவிக்கிறேன்

என்று எம்.எஸ்.வி. பாடிய அந்த பாடலை இன்றும் மறக்க முடியுமா.

எனக்கொரு காதலி இருக்கின்றாள்
அவள் ஏழு ஸ்வரங்களில் சிரிக்கின்றாள்

என்ற பாடலில் எம்.எஸ்.வி.யின் குரல் அற்புதமாக விளையாட்டு காட்டுவதை இன்றும் கேட்டு ரசிக்கலாம் அல்லவா.

அந்த காலத்தில் மட்டுமல்லாமல் அண்மைக் காலத்திலும் எம்.எஸ்.வி. பிற இசையமைப்பாளர்களின் இசையில் பாடிய பாடல்கள் சகா வரம் பெற்றவை.

குறிப்பாக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் கண்ணத்தில் முத்தமிட்டால் திரைப்படத்தில் வரும் விடை கொடு எங்கள் நாடே என்ற பாடலை கேட்கும்போது நம் உள்ளத்தில் ஒருவித சோகம் ஏற்பட்டு கண்களில் கண்ணீர் தாரை தாரையாக வந்து விடும்.

இதேபோல் சங்கமம் படத்தில் வரும் பாடலும் நெஞ்சைத் தொடும்.

இப்படி பல பாடல்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

உலகம் கண்ட ஓர் அற்புதமான இசை கலைஞர் மெல்லிசை மன்னர்.

எம்.எஸ்.வி. இயற்கை நியதிக்கு உட்பட்டு நம்மிடம் இருந்து பிரிந்து இறைவனிடம் சேர்ந்துள்ளார்.

ஆனால் காற்றில் இசைப் பறக்கும் வரை எம்.எஸ்.வி.யின் இசையை அவரது குரலை யாரும் ஒதுக்க முடியாது.

அந்த அற்புதமான இசையைக் கேட்காமல் யாரும் தாண்டிச் செல்ல முடியாது.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 
பத்திரிகையாளர்.

இஃப்தார்....!

விருந்து....!



இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சென்னை மத்திய மாவட்ட கிளை சார்பில் திருவல்லிக்கேணியில் இஃப்தார் நோன்பு திறக்கும் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தமிழக தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.


பத்திரிகையாளர் என்ற முறையில் எனக்கும் அழைப்பு அளிக்கப்பட்டதால் நானும் கலந்துகொண்டு சிறப்பித்தேன்.


அந்த இஃப்தார் நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் சில உங்கள் பார்வைக்கு.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 
பத்திரிகையாளர்.

Sunday, July 12, 2015

பாமகவின் துணிச்சல்...!

பாமகவின் துணிச்சலை, தைரியத்தை பாராட்டித்தான் ஆக வேண்டும்.....!



மாற்றம்

முன்னேற்றம்

அன்புமணி

புதியதோர்

தமிழகம்

செய்வோம்....

என்ற முழக்கத்துடன்

வரும் 2016ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பாமகவின் முதலமைச்சர் வேட்பாளராக டாக்டர் அன்புமணி ராமதாஸ் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

உண்மையில் பாமகவின் இந்த துணிச்சலை தைரியத்தை நாம் பாராட்டித்தான் ஆக வேண்டும்.

தமிழகத்தில் விவசாயிகளுக்கு முக்கியதுவம் கொடுக்கப்படும்.

தமிழகத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க தொழில் கொள்கை உருவாக்கப்படும்.

பொது இடங்களில் புகைப்பிடிப்பதை தடை செய்து சட்டம்.

தமிழகத்தில் அனைவரும்க்கும் தரமான சுகாதார வசதி.

இலவசங்களுக்கு ஏங்கும் பிச்சை எடுக்கும் முறை மாற்றப்படும்.

தமிழகத்தில் தற்போதைய கல்விமுறையை மாற்றி தரமான கல்வியை கொடுக்கப்படும்.

திராவிடக் கட்சிகள் தேர்தலில் கொண்டு வரபட்ட ‪தேர்தல் பார்முலா‬ ஒழிக்கப்படும்.

தமிழகத்தில் நடைபெறும் ஊழல் ஆட்சிக்கு முடிவுகட்டப்படும்.

தமிழகத்தில் லோக்அயுக்தா கொண்டுவரப்படும்.

மக்கள் வரிபணத்தில் நல்லதொரு திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

திராவிட கட்சிகளால் இலக்கு வைத்து நடத்தும் ஒரே நிறுவனம் டாஸ்மாக் என்ற நிலை மாற்றப்படும்.

தமிழகத்திற்கு திராவிட கட்சிகள் செய்த சாதனை ‪7000டாஸ்மாக்‬ கடைகள்தான். இதனை மாற்றுவோம்.

ஐநா வில் வேட்டி அணிந்து தமிழர்களுக்கு பெருமை சேர்த்த கட்சி பாமக.

இளைஞர்கள் படிக்க வேண்டுமா, குடிக்க வேண்டுமா முடிவு செய்யுங்கள்

தமிழகத்தை முன்னேற்ற ஒரே ஒரு வாய்ப்பு தாருங்கள்

திராவிட கட்சியின் ஊழல் ஆட்சியை முடிவுக்கட்டுங்கள்,

தமிழகத்தில் குழந்தை தொழிலாளர்களை ஒழிக்க அனைவருக்கும் கட்டாய கல்வி கிடைக்க ஆதரிப்பீர்.

தமிழக இளைஞர்கள் மது மற்றும் போதை பொருட்களுக்கு அடிமையாவதை தடுக்க ஆதரிப்பீர்

திராவிட கட்சிகளின் மக்களை இலவசம் கொடுத்து மக்களை ஏமாற்றும் இலவச கலாச்சாரத்தை ஒழிக்க ஆதரிப்பீர்

தமிழகத்தில் செயல்படும் மத்திய தொழிற்சாலையில் தமிழர்களுக்கு முன்னுரிமை கொடுக்க ஆதரிப்பீர்

மதுவை கொடுத்து 4 வயதை சிறுவர்களை குடிகாரர்களாக மாற்றியவர்களை ஆட்சியில் இருந்து அகற்ற ஆதரிப்பீர்

மது,ஊழல் இல்லா தமிழகம் காண ஆதரிப்பீர்

தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக ஆதரிப்பீர்

தமிழகத்தில் நடைபெறும் கல்வி கொள்ளையை தடுக்க ஆதரிப்பீர்

அனைவருக்கும் இலவச மருத்துவம் கிடைக்க ஆதரிப்பீர்

அனைவருக்கும் இலவச கல்வி கிடைக்க ஆதரிப்பீர்

இது மாற்றத்திற்கான நேரம்.

முன்னேற்றத்திற்கான நேரம்

இப்படி முழக்கங்களை மக்கள் முன்வைத்துள்ளது பாமக.

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மகா கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திக்க திமுக முயற்சி செய்து வரும் நிலையில்,  தைரியமாக முதலமைச்சர் வேட்பாளராக அன்புமணி ராமதாசை பாமக அறிவித்துள்ளது.

அத்துடன், இது மாற்றத்திற்கான நேரம் என்றும், முன்னேற்றத்திற்கான நேரம் என்றும் முழக்கங்களை பாமக முன் வைத்துள்ளது.


பாமகவின் இந்த முழக்கங்களை, கோரிக்கைகளை மக்கள் ஏற்றுக் கொள்வார்களா இல்லையா என்பது தேர்தல் நெருங்க, நெருங்க தெரிந்துவிடும்.

மேலும் தேர்தலில் மக்கள் நிச்சயம் தெளிவான முடிவை அறிவித்து விடுவார்கள்.

ஒன்று மட்டும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

நம் அனைவருக்கும் கனவு காணும் உரிமை உண்டு.

ஆனால், அந்த கனவு நிறைவேறுமா,...இல்லையா என்பது நிச்சயம் யாருக்கும் தெரியாது.

பாமகவின் அரசியல் நிலைப்பாட்டில் எனக்கு கருத்து வேறுபாடுகள் நிறைய இருந்தாலும்,
தமிழகத்தின் அரசியலில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்த விரும்பும் அன்புமணி ராமதாசுக்கு நமது பாராட்டுகள்.

இனி, எதிர்காலம்தான், அன்புமணி ராமதாசின் முதலமைச்சர் கனவிற்கு விடை அளிக்கும்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்

Saturday, July 11, 2015

நண்பா எழுந்து வா...!

" நண்பா மீண்டு வா, எழுந்து வா ” 


  விஜயகாந்த் உருக்கம்.....!

விஜயகாந்த்திற்கு மிகவும் நெருக்கமான நண்பராக இருந்து வந்தவர் தயாரிப்பாளர் இப்ராகிம் ராவுத்தர்.

விஜயகாந்த் நடிப்பில் 'கேப்டம் பிரபாகரன்', 'புலன் விசாரணை' உள்ளிட்ட பல்வேறு படங்களைத் தயாரித்தார். விஜயகாந்த் நாயகனாக உருவான பின்பு அவரது நிழலாக பல ஆண்டுகள் இருந்து வந்தவர் ராவுத்தர். இவரது நட்பில் சில காலத்திற்கு முன்பு விரிசில் ஏற்பட்டது.


தற்போது சில நாட்களாக தயாரிப்பாளர் இப்ராகிம் ராவுத்தர் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.

இதனை கேள்விப்பட்டு விஜயகாந்த், மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்தார்.

அதனைத் தொடர்ந்து விஜயகாந்த் உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அக்கடித்ததில் "நண்பா, நீ உடல்நிலை சரியில்லாமல் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாய் என்ற செய்தி கேட்டு வேதனையுடன் உன்னை உடல் நலம் விசாரிக்க வந்தேன். அங்கு நீ சுயநினைவு கூட இல்லாத நிலையில் கட்டிலில் இருந்ததை கண்டதும் என் மனம் பட்ட துயரத்தை நான் மட்டுமே அறிவேன்.

உன்னை கண்டவுடன் சிறுவயது முதல் நாம் கொண்ட உண்மையான நட்பும் வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற உறுதியோடு மதுரையில் இருந்து சென்னைக்கு வந்து சினிமா உலகில் போராடி நாம் பெற்ற வெற்றி தோல்விகளும் என் கண் முனே வந்து சென்றன.

காலத்தின் ஓட்டத்தில் எத்தனையோ மன கஷ்டங்களும், சந்தோஷங்களும் வந்து சென்றிருந்தாலும் என்றுமே உன்னை என் மனம் மறந்ததில்லை.

இப்ராஹிம் நீ மீண்டும் நல்ல ஆரோக்கியத்தோடு நலம் பெற்று வர வேண்டும் என்று என் பிரார்த்தனையை கடவுளிடத்திலே வைக்கிறேன்.


நண்பா மீண்டு வா, எழுந்து வா” என்று தமது கடிதத்தில் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

விஜயகாந்தின் உருக்கமான கடிதம்  நெஞ்சத்தைத் தொட்டது.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர் 

மனிதர்களில் இத்தனை நிறங்களா.....!

மனிதர்களில் இத்தனை நிறங்களா.....!



கலக்கல் புகைப்படம்.


மற்றொரு கலக்கல்.


இளமை துள்ளல்.


கருப்பு சட்டைக்காரன்.


மற்றொரு படம்.


மகிழ்ச்சியான தருணத்தில்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்.

Thursday, July 9, 2015

சபாஷ் நிதிஷ்குமார்.

பீகாரில் பூரண மதுவிலக்கு....!


முதலமைச்சர் நிதிஷ்குமார் உறுதி....!!

பீகாரில் வரும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம், முன்னாள் மத்திய அமைச்சர் லாலு பிரசாத் யாதவ்வின் ராஷ்டீரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

இதேபோன்று, பிஜேபியும் வலுவாகக் கூட்டணியை அமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.

இந்நிலையில் பாட்னாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், வரும் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மாநிலத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என உறுதியாக தெரிவித்தார்.

கடந்த இரண்டு முறை நடத்த தேர்தலில்களில் தாம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக கூறிய அவர், அதேபோன்று, மது விலக்கு தொடர்பான இந்த வாக்குறுதியும் கண்டிப்பாக நிறைவேற்றுவேன் என்றும் தெரிவித்தார்.

அத்துடன் மாநிலத்தை மது இல்லாத மாநிலமாக அறிவிப்பேன் என்றும் நிதிஷ்குமார் திட்டவட்டமாக கூறினார்.


சபாஷ் நிதிஷ்குமார்.

மதுவின் கொடுமையை, தீமையை அறிந்துக் கொண்டு பீகாரில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தப் போவதாக அறிவித்த உங்களுக்குதான் எங்கள் வாக்கு.

ஆனால், நாங்கள் பீகாரில் இல்லை.

எனினும் எங்களது ஆதரவு உங்களுக்கு எப்போதும் உண்டு.

பீகாரை போன்று தமிழகத்திலும் பூரண மதுவிலக்கை அமல்படுத்தப் போகும் கட்சிகளுக்குதான் எங்கள் வாக்கு என மக்கள் அறிவிக்க வேண்டும்.

அப்போதுதான், தமிழகத்தில் மதுவை ஒழிக்க முடியும்.

இல்லையென்றால், தீமையின் கொடுமையை யாராலும் தடுத்த நிறுத்த முடியாது.

பெண்களின் துயரங்களை தீர்க்க முதலமைச்சர் ஜெயலலிதா உடனே, மதுவிலக்கை அமல்படுத்தும் அறிவிப்பை அறிவிக்க வேண்டும்.

அதன்மூலம், வரும் தேர்தலில் பெண்களின் மற்றும் அனைத்து தரப்பு மக்களின் வாக்குகளை அள்ளி வெற்றி பெற வேண்டும்.

இதுதான் மக்களின் எதிர்பார்ப்பு.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்.

Tuesday, July 7, 2015

இன்னும் நம்பிக்கையை இழக்கவில்லை....!

இன்னும் நம்பிக்கையை இழக்கவில்லை....!


தமிழகத்தில் மது ஆறாக ஓடுகிறது.

தெருவுக்கு தெரு திறக்கப்பட்டு இருக்கும் டாஸ்மாக் கடைகளால் இளைய சமுதாயம் வலுக்கட்டாயமாக மதுப்பழக்கத்திற்கு அடிமை ஆகி வருகிறார்கள்.

பள்ளி சிறுவன் ஒருவன் வீட்டில் இருந்து கிளம்பி பள்ளிக்கூடத்திற்கு செல்லாமல் நேராக டாஸ்மாக் கடைக்குச் சென்று சரக்கு அடித்துவிட்டு பள்ளிச் சீருடையுடன் வீதியில் விழுந்து கிடந்த மோசமான காட்சியை அண்மையில் தமிழக மக்கள் ஏன் உலகம் முழுவதும் உள்ள மக்களே கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

கூலி தொழிலாளி தன்னுடைய சம்பாதியத்தில் முழுவதையும் டாஸ்மாக் கடையில் கொடுத்து விட்டு தெருவில் அரைகுறை ஆடையுடன் வீழ்ந்து கிடக்கும் காட்சிகளை தமிழகம் முழுவதும் நாம் கண்டு வருகிறோம்.

மது குடிப்பது தற்போது பேஷனாக மாறிவிட்டது.

மது அருந்தாமல் இருக்கும் சிலரை பார்த்து பலர் ஏளனமாக பார்க்கும் நிலை தமிழகத்தில் உருவாகியுள்ளது.


அதன் உச்சக்கட்டம்தான் திருவண்ணாமலை அருகே நான்கு வயது குழந்தைக்கு மதுவை சிலர் வலுக்கட்டாயமாக குடிக்க வைத்து ஆனந்தம் அடையும் சம்பவம் அரங்கேறியுள்ளது.

இதேபோல் சிறுமிகளுக்கும் சிலர் மதுவை கொடுத்து அவர்களின் வாழ்வில் விளையாடி வருகிறார்கள்.

ஆக ஒட்டுமொத்த தமிழகமே தற்போது மது என்ற அரக்கனின் பிடியில் சிக்கி தவிக்கிறது.

எனவே மதுக்கு முடிவு கட்ட வேண்டும் என பல நல்ல உள்ளங்கள் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்த வண்ணம் இருக்கிறார்கள்.

அண்டை மாநிலம் கேரளா எடுத்த நல்ல முடிவைப் போன்று தமிழகத்திலும் படிப்படியாக பூரண மதுவிலக்கு அமல்படுத்த அதிமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.


தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அம்மா அவர்களே நீங்கள் மீண்டும் முதலமைச்சராக பதவி ஏற்றபோது முதல் அறிவிப்பாக மது ஒழிப்பு டாஸ்மாக் கடைகளுக்கு மூடுவிழா குறித்துதான் இருக்கும் என தமிழக பெண்கள் எதிர்பார்த்தார்கள்.

ஏன் தங்களுடைய நல்ல அறிவிப்புக்காக தமிழகமே ஆவலுடன் காத்திருந்தது எனலாம்.

ஆனால் தமிழக மக்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது.

தற்போது நான்கு வயது குழந்தையும் மதுப்பழக்கத்திறகு ஆளாகும் நிலை உருவாகி உள்ளதை தமிழகம் கண்டுவிட்டது.

இனியும் தாமதித்தால் பிறக்கும் குழந்தைக்கு கூட பாலுக்கு பதிலாக மது ஊட்டும் அவல நிலை உருவாகலாம்.

எனவே தமிழகத்தில் மதுவுக்கு விடை கொடுக்கும் நேரம் நெருங்கி விட்டது எனலாம்.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூடி மது இல்லாத மாநிலமாக மாற்றும் தைரியம் துணிச்சல் முதலமைச்சர் அம்மா அவர்களுக்கு மட்டுமே உண்டு என நாங்கள் நம்புகிறோம்.

அதனால்தான் தமிழகம் இன்னும் நம்பிக்கையை இழக்கவில்லை.

முதலமைச்சர் அவர்களிடம் இருந்து விரைவில் நல்ல அறிவிப்பு வரும் என நாங்கள் காத்திருக்கிறோம்.

இறைவன் நாடினால் தமிழகம் மது இல்லாத மாநிலமாக விரைவில் மாறும்.

மகிழ்ச்சி பூங்காவாக மலரும்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 
பத்திரிகையாளர்.

ஓர் நல்ல அழகான செயல் விஜய்...!

ஓர் நல்ல அழகான செயல் விஜய்...!


ஐயம் வைடிங்...!

இது துப்பாக்கி திரைப்படத்தில் நீங்கள் பேசிய பாப்புலர் வசனம்.

ஆனால் தமிழகத்தில் மத நல்லிணக்கம் தவழ நீங்கள் காத்திருந்து இந்த புனித ரமலானில் இறைவனின் அருளைப் பெறும் நோக்கில் நல்ல ஓர் அழகிய செயலை செய்துள்ளீர்கள்.

புனித நோன்பு வைக்கும் நூறு இஸ்லாமியர்களை அழைத்து உங்கள் சொந்த செலவில் இஃப்தார் என்னும் நோன்பு திறப்பு நிகழ்ச்சியை நடத்தி மகிழ்ச்சி அடைந்துள்ளீர்கள்.

நோன்பு திறப்பு நிகழ்ச்சியை ஒரு சடங்காக நடத்தாமல் உங்கள் அழைப்பை ஏற்று வந்த உங்கள் சகோதர சமுதாயத்தைச் சேர்ந்த முஸ்லிம்களுக்கு நீங்களே உணவுகளை பரிமாற்றி உண்மையான அன்பை வெளிப்படுத்தியுள்ளீர்கள்.

அத்துடன் நீங்களும் இஸ்லாமியர்களுடன் அமர்ந்து நோன்பு கஞ்சியை சாப்பிட்டு மகிழுந்துள்ளீர்கள்.

இதை பார்க்கும் போது உண்மையிலேயே மனம் மகிழ்ச்சி அடைகிறது.

நாட்டில் ஒரு கூட்டம் சமூக நல்லிணக்கத்தை சீர்குலைத்து மத துவேஷத்தை பரப்ப முயற்சி செய்து வரும் நிலையில் அட முட்டாள் மர மண்டைகளே நாம் அனைவரும் ஒரே குலம் ஒரே இனம் ஒரே இறைவனின் மக்கள் நமக்குள் எதுக்குடா சண்டை சச்சரவு என நீங்கள் மறைமுகமாக கூறி இந்த நிகழ்ச்சியை நடத்தி இருப்பதாகவே எனக்கு தோன்றுகிறது.


நம்மிடம் பிரிவுகள் இருக்கலாம் ஆனால் நாம் அனைவரும் ஒரே தாய் தந்தையின் பிள்ளைகள் என்பதை உங்களின் எளிமையான அற்புதமான இந்த செயலின் மூலம் மக்களை பிளவுப்படுத்த நினைக்கும் கூட்டத்திற்கு நீங்கள் பாடம் போதித்துள்ளீர்கள்.

உங்களின் இந்த பணிக்காக என்னுடைய பாராட்டுகள். வாழ்த்துக்கள்.

இதுபோன்ற சமூக நல்லிணக்க நிகழ்ச்சிகளை தொடர்ந்து நீங்கள் நடத்த வேண்டும்.

அதற்காக இறைவன் உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தையும் வளத்தையும் நீண்ட ஆயுளையும் அளிக்க வேண்டும் என பிரார்த்தனை செய்கிறேன்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 
பத்திரிகையாளர்.

பவித்ரா...!

கிடைத்துவிட்டாள் பவித்ரா...!

இளம் பெண் பவித்ரா மாயமான விவகாரத்தில் ஆம்பூர் இளைஞர் ஷமில் அகமது விசாரணையின்போது காவல் ஆய்வாளர் மார்ட்டின் பிரேம்ராஜ் கடுமையாக தாக்கியதில் மரணம்.

இந்த கொடுச்செயலைக் கண்டித்து இஸ்லாமியர்கள் போராட்டம்.

அப்போது வெடித்த வன்முறையில் வாகனங்கள் கடைகள் தீ வைத்து எரிப்பு.

இதை தொடர்ந்து முஸ்லிம்கள் 126 பேர் கைது.

காவல் ஆய்வாளர் மார்ட்டின் பிரேம்ராஜ் மற்றும் 6 காவலர்கள் பணியிடை நீக்கம்.

அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை.

இந்த சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.சி. போலிசார் விசாரிக்க உத்தரவு.

இப்படி இவ்வளவு பிரச்சினைகளுக்கும் காரணமாக இருந்த இளம் பெண் பவித்ராவை போலிசார் சென்னையில் மீட்டனர்.

அவருடன் இரண்டு இளைஞர்களையும் பிடித்த போலிசார் மூன்று பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில் ஷமில் அகதுக்கும் தமக்கும் எந்த தொடர்பும் இல்லை என பவித்ரா கூறியதாக தகவல்.

அத்துடன் ஈரோட்டில் ஷமிலை சந்திக்கும் பவித்ராவை உடனே வீட்டுக்கு செல்லும்படி அவர் அறிவுறுத்தினார் என டைம்ஸ் ஆப் இந்தியா தி இந்து உள்ளிட்ட நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆனால் பவித்ராவோ தமது வீட்டிற்கு திரும்பாமல் சென்னைக்கு வந்து தங்கியுள்ளார்.

விசாரணையின்போது இந்த உண்மைகளை காவல் ஆய்வாளர் மார்ட்டினிடம் ஷமில் அகமது நிச்சயமாக தெரிவித்து இருப்பார்.

ஆனால் காவல் உடையில் இருந்த அந்த மனித மிருகமோ அதை காதில் வாங்காமல் ஷமிலை கடுமையாக தாக்கி அவரது மரணத்திற்கு காரணமாக இருந்து விட்டார்.

அப்போதே பவித்ராவை தேடும் முயற்சியில் போலிசார் இறங்கி இருந்தால் இவ்வளவு பிரச்சினைகள் வந்திருக்காது.

ஆம்பூரில் போலிசாருக்கு எதிராக போராட்டம் நடந்து இருக்காது.

வன்முறை வெடித்து இருக்காது.

முஸ்லிம்கள் எளிதில் உணர்ச்சிவயப்பட்டு இருக்க மாட்டார்கள்.

கைது நடவடிக்கைகளும் இருந்து இருக்காது.

என்னை பொறுத்தமட்டில் காவல் ஆய்வாளர் மார்ட்டினுக்கு எதிராக ஆம்பூர் மக்கள் வெகுண்டு எழுந்ததில் தவறு இருந்ததாக தெரியவில்லை.

ஆனால் அவர்கள் வன்முறை வெறி ஆட்டத்தில் ஈடுபட்டது மிகப் பெரிய குற்றம்.

இஸ்லாமிய நெறிமுறைக்கு எதிரானது. கொஞ்சமும் ஏற்றுக்கொள்ள முடியாதது.

ஆக இந்த விவகாரத்தில் தற்போது உண்மை ஓரளவுக்கு வெளிச்சத்திற்கு வந்து விட்டது.

இனியும் அரசு ஒரு வினாடி கூட தாமதிக்கக் கூடாது.

ஷமில் அகமது மீது கொலை வெறி தாக்குதல் நடத்தி அவரது மரணத்திற்கு காரணமாக இருந்த காவல் ஆய்வாளர் மார்ட்டின் மற்றும் 6 காவலர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்து அவர்களை உடனே கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.

சட்டத்தை தன் கையில் எடுத்துக் கொண்டு ஆட்டம் போட்டதுடன் அப்பாவி நிரபராதி ஒருவரின் உயிர் போக காரணமாக இருந்த இவர்கள் அனைவருக்கும் அதிகப்படியான தண்டனை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அப்போதுதான் காவல்துறையில் மிருகங்களாக இயங்கும் சிலரின் அட்டகாசங்கள் அடங்கும்.

இல்லையெனில் இதுபோன்ற சம்பவங்கள் இனி தொடர்கதை ஆகிவிடும்.

அத்துடன் ஆம்பூர் போராட்டத்தை காரணம் காட்டி கைது செய்யப்பட்ட அனைத்து அப்பாவிகளையும் உடனே விடுதலை செய்ய வேண்டும்.

கடைசியாக ஆம்பூர் சம்பவத்திற்கு பிறகாவது தமிழகத்தில் உள்ள இஸ்லாமிய அமைப்புகள் இனி ஒற்றுமையாக செயல்பட முன் வர வேண்டும்.

குறைந்தபட்சம் இது போன்ற பொது பிரச்சினைகளில் ஒருங்கிணைந்து செயல்பட முன் வர வேண்டும்.

அப்போதுதான் மீண்டும் ஒரு ஷமில் அகமது அநியாயமாக கொல்லப்படுவதை தடுத்து நிறுத்த முடியும்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 
பத்திரிகையாளர்.

என்னால்தான் மெட்ரோ ரயில்...!

என்னால்தான் மெட்ரோ ரயில்...!

சென்னையில் மெட்ரோ ரயில் திட்டம் தங்களால்தான் வந்தது என ஆளுக்கு ஆள் தற்போது உரிமை கொண்டாட தொடங்கி விட்டனர்.

உண்மையை சொல்ல வேண்டுமானால் சென்னையில் மெட்ரோ ரயில் திட்டம் வருவதற்கு நான்தான் முதல் காரணம்.

டெல்லியில் வாழ்ந்தபோது டெல்லி மெட்ரோ ரயில் திட்டத்தில் மயங்கி நம்ம சென்னையிலும் இதுபோன்ற ஒரு நல்ல திட்டம் வந்தால் நன்றாக இருக்குமே என தினமும் நான் கனவு கண்டேன்.

ஆசைப்பட்டேன்.

அந்த கனவுதான் இன்று நனவாகியுள்ளது.

சென்னை மக்களின் போக்குவரத்து தேவைக்காக நான் கண்ட கனவு ஆர்வம் ஆகியவற்றால்தான் சென்னையில் மெட்ரோ ரயில் திட்டம் சாத்தியமானது எனலாம்.

எனவே சென்னையில் மெட்ரோ ரயில் ஓடுவதற்கு நான் முதல் காரணம்.

இதில் மற்றவர்கள் யாரும் முதல் உரிமையை கொண்டாட முடியாது.

(பின் குறிப்பு. சென்னையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் கொஞ்சம் அதிகம்).

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 
பத்திரிகையாளர்.

Saturday, July 4, 2015

மலரும் நினைவுகள்...!

டெல்லி வாழ்க்கையின் மலரும் நினைவுகள்....!



நண்பர் ராஜியுடன்


IOS அலுவகத்தில் பணிபுரிந்தபோது...


நண்பர்கள் தீனதயாளன், சந்திரசேகர் மற்றும் மறைந்த சீதாராமன் ஆகியோருடன்...


டெல்லியில் தமிழக நண்பர்களுடன்...


டெல்லி இந்தியா கேட் அருகே...

என்றும் மறக்க முடியாத நினைவுகள்...!

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்