திருக்குர்ஆன் மனிதர்களிடத்தில் என்ன எதிர்பார்க்கிறது...?
இந்தாண்டு புனித ரமலான் மாதத்தில் இறை வேதமான திருக்குர்ஆனின் தமிழாக்கத்தை முழுவதும் படிக்கக்கூடிய பாக்கியத்தை இறைவன் எனக்கு தந்தான்.
அதற்காக இறைவனுக்கு முதலில் நான் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
அரபி மொழியில் உள்ள திருக்குர்ஆனை தமிழ் மொழியில் படிக்கும்போது படித்தபோது இறைவனின் அற்புதம் என் கண் முன்பு நிழலாடியது எனலாம்.
திருக்குர்ஆனில் இறைவன் என்ன சொல்கிறான் ?
மனிதர்களிடம் இருந்து என்ன எதிர்பார்க்கின்றான் ?
மனித வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் ?
மனிதனின் கடமைகள் பொறுப்புகள் என்ன ?
என்பதை என் அறிவுக்கு எட்டிய வரையில் புரிந்துகொள்ள முடிந்தது.
திருக்குர்ஆனில் மூன்று முக்கிய கருத்துக்கள் திரும்ப திரும்ப கூறப்பட்டுள்ளன.
அது
இறைவன் இருப்பதை நம்புவது.
அவன் ஒருவனே என மிகவும் உறுதியாக நம்புவது.
இறைவனுக்கு இணை துணைகளை ஏற்படுத்தாமல் இருப்பது.
இறைத்தூதர்களின் வருகை சந்தேகம் இல்லாமல் நம்புவது.
இந்த உலக வாழ்க்கைக்கு பிறகு நாம் சந்திக்க இருக்கும் மறுமை வாழ்க்கை குறித்து நம்பிக்கை கொள்வது.
இந்த மூன்று கருத்துகளை முன் வைத்து திருக்குர்ஆனில் ஏராளமான விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளன.
நபிமார்களின் வரலாறுகள்.
அந்த வரலாறுகள் மூலம் மனிதர்களுக்கு கிடைக்கும் படிப்பினைகள்.
மனிதன் மனிதர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள்.
உலகில் வாழும் வரை மனிதனின் பொறுப்புகள்.
தாய் தந்தை உற்றார் உறவினர்கள் ஏழை எளிய மக்கள் மற்றும் சமூகத்திற்கு மனிதன் ஆற்ற வேண்டிய கடமைகள்.
திருமண பந்தம் மனைவியிடம் கண்ணியமான முறையில் நடந்துக் கொள்வது.
பெண் குழந்தைகளை பாரமாக கருதாமல் ஒதுக்கி தள்ளாமல் நன்கு வளர்ப்பது.
இறை வழியில் தாராளமாக செலவு செய்வது.
இறை நம்பிக்கையுடன் தொழுகையை நிறைவேற்றுவது.
ஜகாத் கொடுப்பது.
அது யாருக்கு கொடுப்பது.
எப்படி கொடுப்பது.
ரமலான் மாதத்தில் நோன்பு வைப்பது.
வாழ்நாளில் ஹஜ் கடமையை நிறைவேற்றுவது.
இயற்கையின் அற்புதங்களை பார்த்து இறைவனுக்கு நன்றி செலுத்துவது.
வானம் சூரியன் சந்திரன் பூமி மலைகள் இருகடல்கள் மழை நீர் வறண்ட பூமி கால்நடைகள் மரம் செடிகொடி என இயற்கையின் அற்புதங்களை கண்டு அவற்றை ஆய்வு செய்ய அழைக்கிறது திருக்குர்ஆன்.
இவையெல்லாம் வீண் விளையாட்டிற்காக படைக்கப்படவில்லை என்கிறது திருக்குர்ஆன்.
மனிதன் எப்படி படைக்கப்படுகின்றான்?..
மரணத்திற்கு பிறகு அவன் எப்படி மீண்டும் படைக்கப்பட்டு மறுமையில் தனது செயல்களுக்கு கேள்வி கணக்கு கேட்கப்படுவான் என்பதை திருக்குர்ஆன் திரும்ப திரும்ப கூறி உலகில் ஆட்டம் போடும் மனிதர்களையும் அட்டகாசம் செய்யும் மக்களையும் எச்சரிக்கை செய்கிறது.
படைக்கப்பட்ட ஒவ்வொன்றும் அழியக்கூடியதே.
அந்த வகையில் சூரியன் சந்திரன் உலகம் என இறைவனால் படைக்கப்பட்ட அனைத்தும் ஒருநாள் அழிந்து விடும் என கூறுகிறது திருக்குர்ஆன்.
குரானின் இந்த கூற்றை இன்றைய விஞ்ஞான உலகமும் தமது ஆய்வுகளின் மூலம் உண்மை என நிருபித்து வருகிறது.
திருக்குர்ஆன் முஸ்லிம்களுக்கு மட்டும் சொந்தமானது அல்ல.
அது உலக மக்கள் அனைவருக்கும் பொதுவானது.
இதைத்தான் திருக்குர்ஆனில் இறைவன் கூறுகின்றான்.
இது உலக மக்கள் அனைவருக்கும் ஒரு நல்லுரையே அன்றி வேறில்லை.
ஆக திருக்குர்ஆன் உலக மக்கள் அனைவருக்கும் சொந்தம் என்பது தெளிவாகிறது.
எனவே நாம் அனைவரும் அதனை நன்கு படித்து புரிந்துகொள்ள வேண்டும்.
அதன்படி மனதை தூய்மைப்படுத்தி வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்.
குரான் கூறுகிறது.
திண்ணமாக வெற்றி பெற்று விட்டான் மனதைத் தூய்மைப்படுத்தியவன். மேலும் தோற்று விட்டான் அதனை நசுக்கியவன்.
என்ன அற்புதமான வார்த்தைகள்.
மேலும்
நன்மையின் கூலி நன்மையைத் தவிர வேறேதுவாய் இருக்க முடியும்.
என்றும் குரான் கேள்வி எழுப்புகிறது.
மனிதன் தான் மட்டும் நல்லவனாக ஒழுக்கம் உள்ளவனாக இருந்தால் போதாது.
வாழ்ந்தால் போதாது.
மற்றவர்களையும் நல் வாழ்க்கைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.
திருக்குர்ஆன் கூறுகிறது.
காலத்தின் மீது சத்தியமாக மனிதன் உண்மையில் நஷ்டத்தில் இருக்கின்றான். ஆனால் எவர்கள் இறை நம்பிக்கை கொண்டும் நற்செயல்கள் புரிந்துக் கொண்டும் மேலும் ஒருவருக்கு ஒருவர் சத்தியத்தை எடுத்துரைத்தும் பொறுமையை கடைப்பிடிக்குமாறு அறிவுரை கூறிக்கொண்டும் இருந்தார்களோ அவர்களை தவிர.
திருக்குர்ஆனின் இந்த அறிவுரை ஏற்று உலக மக்கள் செயல்பட்டால் இம்மை மறுமை ஆகிய இரண்டு உலகிலும் அமைதியான மகிழ்ச்சியான வாழ்க்கையை பெறலாம்.
திருக்குர்ஆன் ஒரு கடல்.
ஏன் அதைவிட அதிகம்.
அந்த அற்புதத்தில் என் அறிவுக்கு எட்டிய சில கருத்துக்களை மட்டுமே இங்கே நான் பதிவு செய்துள்ளேன்.
திருக்குர்ஆனை மீண்டும் மீண்டும் படிக்கக்கூடிய வாய்ப்பை பாக்கியத்தை இறைவன் எனக்கு தந்து அருள் புரிய வேண்டும்.
அதன்மூலம் என் கல்வி ஞானத்தை மேம்படுத்த வேண்டும்.
இதுதான் இந்த ரமலானில் எனது பிரார்த்தனை.
எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்.
No comments:
Post a Comment