Tuesday, July 7, 2015

இன்னும் நம்பிக்கையை இழக்கவில்லை....!

இன்னும் நம்பிக்கையை இழக்கவில்லை....!


தமிழகத்தில் மது ஆறாக ஓடுகிறது.

தெருவுக்கு தெரு திறக்கப்பட்டு இருக்கும் டாஸ்மாக் கடைகளால் இளைய சமுதாயம் வலுக்கட்டாயமாக மதுப்பழக்கத்திற்கு அடிமை ஆகி வருகிறார்கள்.

பள்ளி சிறுவன் ஒருவன் வீட்டில் இருந்து கிளம்பி பள்ளிக்கூடத்திற்கு செல்லாமல் நேராக டாஸ்மாக் கடைக்குச் சென்று சரக்கு அடித்துவிட்டு பள்ளிச் சீருடையுடன் வீதியில் விழுந்து கிடந்த மோசமான காட்சியை அண்மையில் தமிழக மக்கள் ஏன் உலகம் முழுவதும் உள்ள மக்களே கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

கூலி தொழிலாளி தன்னுடைய சம்பாதியத்தில் முழுவதையும் டாஸ்மாக் கடையில் கொடுத்து விட்டு தெருவில் அரைகுறை ஆடையுடன் வீழ்ந்து கிடக்கும் காட்சிகளை தமிழகம் முழுவதும் நாம் கண்டு வருகிறோம்.

மது குடிப்பது தற்போது பேஷனாக மாறிவிட்டது.

மது அருந்தாமல் இருக்கும் சிலரை பார்த்து பலர் ஏளனமாக பார்க்கும் நிலை தமிழகத்தில் உருவாகியுள்ளது.


அதன் உச்சக்கட்டம்தான் திருவண்ணாமலை அருகே நான்கு வயது குழந்தைக்கு மதுவை சிலர் வலுக்கட்டாயமாக குடிக்க வைத்து ஆனந்தம் அடையும் சம்பவம் அரங்கேறியுள்ளது.

இதேபோல் சிறுமிகளுக்கும் சிலர் மதுவை கொடுத்து அவர்களின் வாழ்வில் விளையாடி வருகிறார்கள்.

ஆக ஒட்டுமொத்த தமிழகமே தற்போது மது என்ற அரக்கனின் பிடியில் சிக்கி தவிக்கிறது.

எனவே மதுக்கு முடிவு கட்ட வேண்டும் என பல நல்ல உள்ளங்கள் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்த வண்ணம் இருக்கிறார்கள்.

அண்டை மாநிலம் கேரளா எடுத்த நல்ல முடிவைப் போன்று தமிழகத்திலும் படிப்படியாக பூரண மதுவிலக்கு அமல்படுத்த அதிமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.


தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அம்மா அவர்களே நீங்கள் மீண்டும் முதலமைச்சராக பதவி ஏற்றபோது முதல் அறிவிப்பாக மது ஒழிப்பு டாஸ்மாக் கடைகளுக்கு மூடுவிழா குறித்துதான் இருக்கும் என தமிழக பெண்கள் எதிர்பார்த்தார்கள்.

ஏன் தங்களுடைய நல்ல அறிவிப்புக்காக தமிழகமே ஆவலுடன் காத்திருந்தது எனலாம்.

ஆனால் தமிழக மக்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது.

தற்போது நான்கு வயது குழந்தையும் மதுப்பழக்கத்திறகு ஆளாகும் நிலை உருவாகி உள்ளதை தமிழகம் கண்டுவிட்டது.

இனியும் தாமதித்தால் பிறக்கும் குழந்தைக்கு கூட பாலுக்கு பதிலாக மது ஊட்டும் அவல நிலை உருவாகலாம்.

எனவே தமிழகத்தில் மதுவுக்கு விடை கொடுக்கும் நேரம் நெருங்கி விட்டது எனலாம்.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூடி மது இல்லாத மாநிலமாக மாற்றும் தைரியம் துணிச்சல் முதலமைச்சர் அம்மா அவர்களுக்கு மட்டுமே உண்டு என நாங்கள் நம்புகிறோம்.

அதனால்தான் தமிழகம் இன்னும் நம்பிக்கையை இழக்கவில்லை.

முதலமைச்சர் அவர்களிடம் இருந்து விரைவில் நல்ல அறிவிப்பு வரும் என நாங்கள் காத்திருக்கிறோம்.

இறைவன் நாடினால் தமிழகம் மது இல்லாத மாநிலமாக விரைவில் மாறும்.

மகிழ்ச்சி பூங்காவாக மலரும்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 
பத்திரிகையாளர்.

No comments: