கிடைத்துவிட்டாள் பவித்ரா...!
இளம் பெண் பவித்ரா மாயமான விவகாரத்தில் ஆம்பூர் இளைஞர் ஷமில் அகமது விசாரணையின்போது காவல் ஆய்வாளர் மார்ட்டின் பிரேம்ராஜ் கடுமையாக தாக்கியதில் மரணம்.இந்த கொடுச்செயலைக் கண்டித்து இஸ்லாமியர்கள் போராட்டம்.
அப்போது வெடித்த வன்முறையில் வாகனங்கள் கடைகள் தீ வைத்து எரிப்பு.
இதை தொடர்ந்து முஸ்லிம்கள் 126 பேர் கைது.
காவல் ஆய்வாளர் மார்ட்டின் பிரேம்ராஜ் மற்றும் 6 காவலர்கள் பணியிடை நீக்கம்.
அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை.
இந்த சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.சி. போலிசார் விசாரிக்க உத்தரவு.
இப்படி இவ்வளவு பிரச்சினைகளுக்கும் காரணமாக இருந்த இளம் பெண் பவித்ராவை போலிசார் சென்னையில் மீட்டனர்.
அவருடன் இரண்டு இளைஞர்களையும் பிடித்த போலிசார் மூன்று பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில் ஷமில் அகதுக்கும் தமக்கும் எந்த தொடர்பும் இல்லை என பவித்ரா கூறியதாக தகவல்.
அத்துடன் ஈரோட்டில் ஷமிலை சந்திக்கும் பவித்ராவை உடனே வீட்டுக்கு செல்லும்படி அவர் அறிவுறுத்தினார் என டைம்ஸ் ஆப் இந்தியா தி இந்து உள்ளிட்ட நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆனால் பவித்ராவோ தமது வீட்டிற்கு திரும்பாமல் சென்னைக்கு வந்து தங்கியுள்ளார்.
விசாரணையின்போது இந்த உண்மைகளை காவல் ஆய்வாளர் மார்ட்டினிடம் ஷமில் அகமது நிச்சயமாக தெரிவித்து இருப்பார்.
ஆனால் காவல் உடையில் இருந்த அந்த மனித மிருகமோ அதை காதில் வாங்காமல் ஷமிலை கடுமையாக தாக்கி அவரது மரணத்திற்கு காரணமாக இருந்து விட்டார்.
அப்போதே பவித்ராவை தேடும் முயற்சியில் போலிசார் இறங்கி இருந்தால் இவ்வளவு பிரச்சினைகள் வந்திருக்காது.
ஆம்பூரில் போலிசாருக்கு எதிராக போராட்டம் நடந்து இருக்காது.
வன்முறை வெடித்து இருக்காது.
முஸ்லிம்கள் எளிதில் உணர்ச்சிவயப்பட்டு இருக்க மாட்டார்கள்.
கைது நடவடிக்கைகளும் இருந்து இருக்காது.
என்னை பொறுத்தமட்டில் காவல் ஆய்வாளர் மார்ட்டினுக்கு எதிராக ஆம்பூர் மக்கள் வெகுண்டு எழுந்ததில் தவறு இருந்ததாக தெரியவில்லை.
ஆனால் அவர்கள் வன்முறை வெறி ஆட்டத்தில் ஈடுபட்டது மிகப் பெரிய குற்றம்.
இஸ்லாமிய நெறிமுறைக்கு எதிரானது. கொஞ்சமும் ஏற்றுக்கொள்ள முடியாதது.
ஆக இந்த விவகாரத்தில் தற்போது உண்மை ஓரளவுக்கு வெளிச்சத்திற்கு வந்து விட்டது.
இனியும் அரசு ஒரு வினாடி கூட தாமதிக்கக் கூடாது.
ஷமில் அகமது மீது கொலை வெறி தாக்குதல் நடத்தி அவரது மரணத்திற்கு காரணமாக இருந்த காவல் ஆய்வாளர் மார்ட்டின் மற்றும் 6 காவலர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்து அவர்களை உடனே கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.
சட்டத்தை தன் கையில் எடுத்துக் கொண்டு ஆட்டம் போட்டதுடன் அப்பாவி நிரபராதி ஒருவரின் உயிர் போக காரணமாக இருந்த இவர்கள் அனைவருக்கும் அதிகப்படியான தண்டனை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அப்போதுதான் காவல்துறையில் மிருகங்களாக இயங்கும் சிலரின் அட்டகாசங்கள் அடங்கும்.
இல்லையெனில் இதுபோன்ற சம்பவங்கள் இனி தொடர்கதை ஆகிவிடும்.
அத்துடன் ஆம்பூர் போராட்டத்தை காரணம் காட்டி கைது செய்யப்பட்ட அனைத்து அப்பாவிகளையும் உடனே விடுதலை செய்ய வேண்டும்.
கடைசியாக ஆம்பூர் சம்பவத்திற்கு பிறகாவது தமிழகத்தில் உள்ள இஸ்லாமிய அமைப்புகள் இனி ஒற்றுமையாக செயல்பட முன் வர வேண்டும்.
குறைந்தபட்சம் இது போன்ற பொது பிரச்சினைகளில் ஒருங்கிணைந்து செயல்பட முன் வர வேண்டும்.
அப்போதுதான் மீண்டும் ஒரு ஷமில் அகமது அநியாயமாக கொல்லப்படுவதை தடுத்து நிறுத்த முடியும்.
எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்.
No comments:
Post a Comment