எம்.எஸ்.வி.....!
கல்லூரி நாட்களில் சினிமா மோகத்தில் கதை எழுதி அதற்கு திரைக்கதை வசனம் என வடிவம் கொடுத்து டைட்டில் போடும்போது இயக்குநர் என்று என் பெயரை போட்டு மகிழ்ச்சி அடைவேன்.
என் படத்திற்கு இசை எம்.எஸ்.விஸ்வநாதன் என்று டைட்டில் கார்டு போடுவேன்.
அப்போது எனக்கும் மறைந்த என் நண்பர் சீதாராமனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடக்கும்.
காரணம் இசைஞானி இளையராஜா சினிமாவில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த ஆரம்பகால கட்டம் அது.
நம் படத்திற்கு இளையராஜாவின் இசைதான் சரியாக இருக்கும் என்பார் சீதாராமன்.
ஆனால் நானோ எம்.எஸ்.வி.யின் பக்கம் உறுதியாக நிற்பேன்.
அதற்கு பல காரணங்கள் உண்டு.
எம்.எஸ்.வி.யின் இசை மட்டுமன்றி அவரது குரலும் எனக்கு ரொம்ப பிடிக்கும்.
நீ இல்லாத இடமே இல்லை
நீதானே உலகின் எல்லை
அல்லாஹ் அல்லாஹ்
யா அல்லாஹ் அல்லாஹ்
என்ற கவிஞரின் வரிகளுக்கு உயிர் கொடுத்த மகான் அல்லவா எம்.எஸ்.வி.
சொல்லத்தான் நினைக்கிறேன்
உள்ளதால் துடிக்கிறேன்
வாய் இருந்தும் சொல்வதற்கு வார்த்தை இன்றி தவிக்கிறேன்
என்று எம்.எஸ்.வி. பாடிய அந்த பாடலை இன்றும் மறக்க முடியுமா.
எனக்கொரு காதலி இருக்கின்றாள்
அவள் ஏழு ஸ்வரங்களில் சிரிக்கின்றாள்
என்ற பாடலில் எம்.எஸ்.வி.யின் குரல் அற்புதமாக விளையாட்டு காட்டுவதை இன்றும் கேட்டு ரசிக்கலாம் அல்லவா.
அந்த காலத்தில் மட்டுமல்லாமல் அண்மைக் காலத்திலும் எம்.எஸ்.வி. பிற இசையமைப்பாளர்களின் இசையில் பாடிய பாடல்கள் சகா வரம் பெற்றவை.
குறிப்பாக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் கண்ணத்தில் முத்தமிட்டால் திரைப்படத்தில் வரும் விடை கொடு எங்கள் நாடே என்ற பாடலை கேட்கும்போது நம் உள்ளத்தில் ஒருவித சோகம் ஏற்பட்டு கண்களில் கண்ணீர் தாரை தாரையாக வந்து விடும்.
இதேபோல் சங்கமம் படத்தில் வரும் பாடலும் நெஞ்சைத் தொடும்.
இப்படி பல பாடல்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.
உலகம் கண்ட ஓர் அற்புதமான இசை கலைஞர் மெல்லிசை மன்னர்.
எம்.எஸ்.வி. இயற்கை நியதிக்கு உட்பட்டு நம்மிடம் இருந்து பிரிந்து இறைவனிடம் சேர்ந்துள்ளார்.
ஆனால் காற்றில் இசைப் பறக்கும் வரை எம்.எஸ்.வி.யின் இசையை அவரது குரலை யாரும் ஒதுக்க முடியாது.
அந்த அற்புதமான இசையைக் கேட்காமல் யாரும் தாண்டிச் செல்ல முடியாது.
எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்.
No comments:
Post a Comment