Friday, July 31, 2015

இனி வேறு வழியில்லை....!

இனி வேறு வழியில்லை....!

கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே டாஸ்மாக் மதுக்கடையை அகற்றக் கோரி, செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட காந்தியவாதி சசிபெருமாள் நீண்ட நேரத்துக்குப் பிறகு சிறிது நேரத்தில் உயிரிழந்தார்.

மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி தொடர்ந்து போராடிய சசிபெருமாளின் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கருணாநிதி: துன்பம் எப்போதும் துணையோடு வரும் என்பதுபோல அப்துல் கலாம் மறைந்த துயரத்தில் இருக்கும்போது, காந்தியவாதியான சசிபெருமாள் மறைந்தது அதிர்ச்சி அளிக்கிறது.

மு.க.ஸ்டாலின்: சசிபெருமாளின் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது.

விஜயகாந்த்: போராட்டக் களத்திலேயே சசிபெருமாள் இறந்த செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

தமிழிசை செüந்தர்ராஜன்: சசிபெருமாளின் மறைவு தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்தியே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தை ஏற்படுத்துகிறது. பள்ளி, கல்லூரி, வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலுள்ள மதுக்கடைகளையேனும் உடனடியாக தமிழக அரசு அப்புறப்படுத்த வேண்டும்.

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்: சசிபெருமாள் நடத்திய பல்வேறு போராட்டங்களை ஆட்சியாளர்கள் கவனத்தில் கொள்ளவில்லை. மது ஒழிப்புக் கோரிக்கைக்காக அவர் உயிரிழக்க நேர்ந்தது மிகவும் வேதனைக்குரியது.

ஜி.கே.வாசன்: சசிபெருமாளின் இழப்பு மது ஒழிப்புப் பிரசாரத்துக்குப் பேரிழப்பாகும். பூரண மதுவிலக்கை தமிழகத்தில் அமல்படுத்துவதற்காக, ஆபத்தான முயற்சியில் ஈடுபடாமல் அறவழியில் அனைவரும் போராட வேண்டும்.

பழ.நெடுமாறன்: சசிபெருமாளின் உண்மையான தியாகத்தை மதிக்கும் வகையில் உடனடியாக மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.

ஜி.ராமகிருஷ்ணன்: மதுவற்ற தமிழகம் உருவாகத் தொடர்ந்து போராடுவதே சசிபெருமாளுக்கு செலுத்தும் அஞ்சலியாகும்.

இரா.முத்தரசன்: மதுவால் பிறர் ரத்த வாந்தி எடுக்கக் கூடாது என்று போராடியவர், ரத்த வாந்தி எடுத்து மரணமுற்றது வேதனை அளிக்கிறது. தமிழகத்தில் மதுவிலக்கை உடனே அமல்படுத்த வேண்டும்.

ராமதாஸ்: சசிபெருமாள் மறைவு மது ஒழிப்புப் போராட்டத்துக்குப் பெரும் இழப்பாகும். டாஸ்மாக் மதுக்கடையை அகற்றியிருந்தால், அவரைக் காப்பாற்றியிருக்க முடியும்.

அன்புமணி: டாஸ்மாக் மதுக்கடைகளை மூடியிருந்தால் சசிபெருமாளைக் காப்பாற்றியிருக்க முடியும். இவ்விஷயத்தில் இனியும் பிடிவாதமாக இருக்காமல், தமிழக அரசு உடனடியாக மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.

தி.வேல்முருகன்: சசிபெருமாளின் உயிர்த் தியாகத்துக்கு மதிப்பளித்தாவது, தமிழகத்தில் பூரண மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும்.

தொல்.திருமாவளவன்: சசிபெருமாளின் உயிரிழப்புக்குப் பிறகாவது, தமிழக அரசு பிடிவாதத்தைத் தளர்த்திக்கொண்டு, மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.

கி.வீரமணி: தமிழக அரசின் கண்கள் இதற்குப் பிறகாவது திறக்கப்பட வேண்டும்; மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.

கே.எம். காதர் மொய்தீன்: தமிழகத்தில் முழு மதுவிலக்கு வேண்டும் என்ற லட்சியத்துடன் நீண்ட காலமாகப் பாடுபட்டு வந்த காந்தியவாதி சசிபெருமாள் மரணமடைந்திருப்பது வருத்தத்துக்குரியது. இவ்வளவு காலமாக எந்தக் கொள்கைக்காக அவர் பாடுபட்டு வந்தாரோ, அந்த முழு மதுவிலக்குக் கொள்கையைக் கொண்டு வர அரசு பாடுபட வேண்டும்.

மதுவுக்கு எதிராக தமிழகமே தற்போது ஒன்று திரண்டு நிற்கிறது.

இனியும் தமிழக அரசு மவுனம் கடைப்பிடிக்கக் கூடாது.

மதுவிலக்கு விவகாரத்தில் அலட்சியமாக இருக்கக் கூடாது.

உடனே டாஸ்மாக் கடைகளுக்கு மூடு விழா நடத்த வேண்டும்.

இல்லையென்றால் தியாகி சசிபெருமாளைப் போன்று மதுவிற்கு எதிராக பலர் தங்களது உயிர்களை இழக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் ஆபத்து உண்டு.

இதை மாநில அரசு உணர்ந்துக் கொண்டு நல்ல முடிவு உடனே எடுக்க வேண்டும்.

இதுதான் தமிழக பெண்களின் எதிர்பார்ப்பு.

ஏன், ஒட்டுமொத்த தமிழகத்தின் எதிர்பார்ப்பு என்றே கூறலாம்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்.

No comments: