எங்கு மனித நேயம் இருக்கிறதோ, அங்கு ஒற்றுமை நிலவும்:
முதலமைச்சர் ஜெயலலிதா பேச்சு....!
சென்னையில் அ.தி.மு.க. சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நந்தம்பாக்கம், மவுண்ட் பூந்தமல்லி சாலையில் உள்ள சென்னை வர்த்தக மைய வளாகத்தில் உள்ள கன்வென்சன் ஹாலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஜெயலலிதா கலந்துகொண்டார்.
விழாவில் ஜெயலலிதா ஆற்றிய பேருரை:-
இறை நம்பிக்கை, தொழுகை, நோன்பு, தர்மம், ஹஜ் ஆகியவை இஸ்லாத்தின் ஐந்து முக்கியக் கடமைகள் ஆகும்.
இவற்றில், இறை நம்பிக்கை, தொழுகை, தர்மம், ஹஜ் போன்றவை வெளிப்படையாகத் தெரியக் கூடியவை.
ஆனால், ஒருவர் நோன்பாளியா இல்லையா என்பதை மற்றவரால் வெளிப்படையாக அடையாளம் காண முடியாது. யார் நோன்பாளி என்பதை எல்லாம் வல்ல இறைவன் நன்கு அறிவார்.
"நோன்பு நோற்பவர்களுக்கு நானே நேரடியாக கூலியைக் கொடுப்பேன்" என்று எல்லாம் வல்ல இறைவன் உறுதி அளிக்கிறார்.
இறைவனே நேரடியாக பலன் தரும் இந்த நோன்புக் கடமை மிக வலிமையும், புனிதமும் கொண்டது.
"இறை நம்பிக்கை கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது, நோன்பு கடமை ஆக்கப்பட்டது போல உங்கள் மீதும் நோன்பு கடமை ஆக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்." என திருமறையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரமலான் மாதத்தில் நோன்பு இருப்பதன் மூலம் அகமும், புறமும் தூய்மை அடைகிறது.
தூய்மை அடைவதன் மூலம் இறைப் பற்றும், அன்பும் மேலோங்குகிறது.
தர்ம சிந்தனை தழைத்தோங்குகிறது. இதன் மூலம் இறைவன் அருளை நாம் பெற முடிகிறது.
இறைவனை எப்போதும் உள்ளத்தில் கொண்டுள்ளவர்கள் இறைவனால் காக்கப்படுவர்.
இறைப் பற்று உள்ளவர்களை எந்த துன்பமும் அணுக இயலாது.
இஃப்தார் நோன்பு திறப்பு கொடையையும், அன்பையும் பறை சாற்றுகிறது.
எங்கு அன்பு இருக்கிறதோ, அங்கு மனித நேயம் இருக்கும்.
எங்கு மனித நேயம் இருக்கிறதோ, அங்கு ஒற்றுமை நிலவும். அறம் தழைக்கும். ஏழ்மை விலகும். நன்மை பெருகும்.
இறை நம்பிக்கையுடைய, இஸ்லாமியப் பெருமக்களாகிய நீங்கள், இஸ்லாமிய நெறிமுறைகளைக் கடைபிடித்து இறைவனின் விருப்பத்திற்கேற்ப மனித நேயத்திற்கும், அன்பிற்கும், எடுத்துக்காட்டாக நிச்சயம் விளங்குவீர்கள்.
தொகுப்பு....
எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்
No comments:
Post a Comment