வளைகுடாவில் தொடரும் பதற்றம் எதிரொலி:
அமைதி ஒப்பந்தத்தை எட்டுவதற்கு
அமெரிக்காவும் ஈரானும் தாமதிக்கக் கூடாது
கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான் அறிவுறுத்தல்
தோஹா, நவ. 07 - வளைகுடா நாடுகளில் தொடரும் பதற்றத்தைக் கருத்தில் கொண்டு போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்காவும் ஈரானும் ஒரு அமைதி ஒப்பந்தத்தை எட்ட வேண்டும் என்று கத்தார் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் பின் ஜாசிம் அல் தானி வலியுறுத்தியுள்ளார்.
இருநாடுகளுக்கு வலியுறுத்தல் :
அமெரிக்காவில் நடைபெற்ற இடைக்காலத் தேர்தல் தோல்விக்குப்பிறகு, அதிபர் டொனாலட் டிரம்ப் பல அதிரடி முடிவுகள் எடுக்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் 06.11.2026 வெள்ளிக்கிழமையன்று கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் பின் ஜாசிம் அல் தானி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அமெரிக்காவும், ஈரானும் போரை நிறுத்த மேலும் ஒரு சரியான தருணத்திற்காக காத்திருக்க முடியாது என்று அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்காவும் ஈரானும் ஓர் உடன்பாட்டை எட்டுவதில் தோல்வியடைந்துவிட்டதாகச் சில போலி சமூக வலைத்தளக் கணக்குகள் மூலம் பரப்பப்பட்ட தகவல்கள் குறித்துக் கருத்து தெரிவித்த கத்தார், பிரதமர், தனது கருத்துகள் இணையத்தில் திரிக்கப்பட்டு காட்டப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்தார்.
சீர்குலைக்கும் நோக்கில் கருத்துகள் :
அமைதி பேச்சுவார்த்தைக்கான தூதரக முயற்சிகளைக் குலைக்கும் நோக்கில் கத்தார் பிரதமரின் கருத்துகள் திரிக்கப்பட்டுள்ளதாக கத்தாரின் சர்வதேச ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது. இணையத்தில் பரவும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை மற்றும் தவறானவை. வளைகுடா பிராந்தியத்தில் தொடர்ந்து போரும் உறுதியற்ற சூழலும் நீடிப்பதைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்பவர்களால், பிரதமரின் கருத்துகள் திட்டமிட்டுத் திரிக்கப்பட்டுள்ளன. இத்தகைய கூற்றுக்களில் பல, தூதரக முயற்சிகளைச் சீர்குலைக்கவும், மோதலை மேலும் தீவிரப்படுத்தவும் முயலும் போலி கணக்குகள் மூலம் பரப்பப்படுகின்றன.
இது மிகவும் பொறுப்பற்ற செயலாகும். இரு தரப்பினரும் ஒரு உடன்பாட்டை எட்டுவதற்கான பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர் என்று கத்தார் தெரிவித்துள்ளது. தொடர்ந்து நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளுக்கு ஆதரவளிப்பதற்காக, கத்தார் மத்தியஸ்தர்கள் அமெரிக்கா மற்றும் ஈரானுடன் நெருங்கிய ஒருங்கிணைப்பில் உள்ளனர் என்றும் அந்த அறிக்கை கூறியுள்ளது.
இதற்கிடையில், அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ், ஒரு புதிய போர் நிறுத்தத்திற்கு மத்தியஸ்தம் செய்வதையும், முடங்கிப்போன அணுசக்திப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதையும் நோக்கமாகக் கொண்டு, கடந்த இரண்டு வாரங்களாக ஈரானுடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறார் என்று ஆக்சியோஸ் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
- சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments:
Post a Comment