துண்டு துண்டாக....!
என்ன சாபக் கேடோ தெரியவில்லை.
தமிழக முஸ்லிம் அமைப்புகள் ஒவ்வொன்றும் துண்டு துண்டாக உடைந்து வருகின்றன.
இப்படி நடப்பது தற்போது தொடர்கதையாக மாறிவிட்டது.
இப்படி நடப்பதற்கு என்ன காரணம் என ஆராய்ந்தால் ஒன்று மட்டும் தெளிவாக புரிகிறது.
அது முஸ்லிம் அமைப்பு தலைவர்களின் சுயநலம் மற்றும் பதவி ஆசைதான்.
எல்லாமே தன்னை முன்னிலை படுத்தியே நடக்க வேண்டும் என்ற எண்ணம் முஸ்லிம் தலைவர்களிடம் தற்போது அதிகமாக உள்ளது.
தன்னை மீறி தாண்டி எதுவுமே நடக்கக் கூடாது என முஸ்லிம் இயக்க தலைவர்கள் நினைக்கிறார்கள்.
மீடியாக்களில் தாம் மட்டுமே வர வேண்டும்.
தொலைக்காட்சி விவாதங்களில் தாம் மட்டுமே பங்கெடுத்து சமுதாயத்திற்கு பெரிய சேவை ஆற்றி வருவதாக காட்டிக் கொள்ள வேண்டும்.
இப்படிதான் தற்போதைய தலைவர்கள் எண்ணுகிறார்கள்.
தமக்கு மட்டுமே விளம்பரம் புகழ் கிடைக்க வேண்டும் என கருதுகிறார்கள்.
சமுதாய அக்கறை தமிழக முஸ்லிம் தலைவர்களிடம் சிறிதும் இல்லை.
ஒருசிலர் விதிவிலக்காக இருக்கலாம்.
அத்துடன் முஸ்லிம் இயக்க தலைவர்களிடம் ஈகோ பிரச்சினை கொஞ்சம் கூடுதலாக இருந்து வருகிறது.
இதனால்தான் தமிழக முஸ்லிம் இயக்கங்கள் தோன்றிய சில மாதங்களில் கருத்து வேறுபாடுகள் காரணமாக துண்டு துண்டாக உடைகின்றன.
அத்துடன் எல்லா இயக்கங்களும் தாங்கள்தான் முஸ்லிம் சமுதாயத்திற்கு உண்மையாக சேவை ஆற்றுவதாக கூறிக்கொண்டு மற்ற இயக்கங்கள் மீது சேற்றை வாரி பூசுகின்றன.
இப்படிப்பட்ட நிலையில் முஸ்லிம் இயக்கங்கள் மீது சமுதாய மக்களுக்கு எப்படி நம்பிக்கை வரும்.
மற்ற அரசியல் கட்சித் தலைவர்கள் முஸ்லிம் இயக்கங்களை எப்படி மரியாதையாக நடத்தும்.
அதனால்தான் தேர்தல் காலங்களில் முஸ்லிம் இயக்கங்களை வெறும் கறிவேப்பிலையாக மற்ற பிரதான கட்சிகள் பயன்படுத்தி இலாபம் அடைகின்றன.
சுயநலம் பதவி ஆசை இல்லாமல் சமுதாய முன்னேற்றம் ஒன்றை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படும் தலைவர்கள் கிடைக்கும் வரை தமிழக முஸ்லிம் இயக்கங்களின் பிளவுகளை யாராலும் தடுக்கவே முடியாது.
இதுதான் தற்போதைய நிதர்சனம்.
உண்மை நிலையும் அதுதான்.
எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்.
No comments:
Post a Comment