Sunday, June 15, 2025

ஜடல் நூலகம்.....!

 "சவுதி அரேபியாவின் ஒரு கலாச்சார சோலை, ஜடல் நூலகம்"

சவுதி அரேபியாவின் கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள அமைதியான உம் அல்-ஹமாம் கிராமம், புத்தகங்கள் மீதான வாழ்நாள் முழுவதும் உள்ள ஆர்வம் ஒருவரால் கலாச்சார புகலிடமாக மாற்றப்பட்டுள்ளது.

நூல் ஆர்வலரும், இலக்கிய ஆவணக் காப்பாளருமான அலி அல்-ஹெர்ஸ், தனது வீட்டை, ஜடல் நூலகமாக மாற்றியுள்ளார். இந்த அருமையான நூலகத்தில் 37 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட செய்தித்தாள்கள், பத்திரிகைகள் மற்றும் பழங்காலப் பொருட்கள், சில ஒரு நூற்றாண்டுக்கும் மேலான ஆவணங்கள் குவிந்து கிடக்கின்றன. 

ஆயினும், ஜடல் ஒரு நூலகம் மட்டுமல்ல. அது அதை விட மிக அதிகமாகும்.  இந்த நூலகம் ஆராய்வதற்கான ஒரு அருங்காட்சியகம். சிந்திக்க ஒரு தத்துவ இடம். அத்துடன், முக்கியமான கலாச்சாரக் கதைகளை மறப்பதற்கு எதிரான நிலைப்பாடு கொண்ட பொக்கிஷம் என்றே கூறலாம். .

புத்தகப் புழுவின் ஆர்வம் :

உம் அல்-ஹமாம் கிராமத்தில் உருவாக்கியுள்ள இந்த ஜடல் நூலகம் குறித்து கருத்து கூறியுள்ள அலி அல்-ஹெர்ஸ், "நான் பிறந்ததிலிருந்தே என் தாயின் புத்தகங்களால் சூழப்பட்டிருக்கிறேன். இந்த ஆர்வத்தில் மூழ்கி வளர்ந்த நான், அது என்னை முழுமையாக ஆட்கொள்ளும் அளவுக்கு வளர்ந்தேன். நான் ஒரு புத்தகப் புழுவாக மாறினேன்" என்று புத்தகங்கள் மீதான தனது ஆர்வம் குறித்தும் தனது வளர்ப்புக் குறித்தும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

அலி அல்-ஹெர்ஸ் தனது 13 வயதில் "சிரத் அந்தர்" என்ற காவியத்தைப் படித்தபோதுதான்,  இதையெல்லாம் தூண்டிய தீப்பொறி என்று கூறலாம். "அந்த காவியத்திலிருந்து அதன் மூலம், நான் மற்ற உலகங்களைப் பார்க்கத் தொடங்கினேன," என்று அவர் கூறுகிறார்.  இந்த ஆர்வமும் ஈர்ப்பும் இறுதியில் அலி அல்-ஹெர்ஸை சவுதி அரேபியாவின் மிகவும் தனித்துவமான முயற்சிகளில் ஒன்றை உருவாக்க வழிவகுத்தது.

ஜடல் நூலகம் :

"ஜடல்" என்ற பெயருக்கு அரபு மொழியில் விவாதம் என்று பொருள். இது நூலகத்தின் ஆர்வ உணர்வைப் பிரதிபலிக்கிறது. அல்-ஹெர்ஸைப் பொறுத்தவரை, நூல்களைப் படித்து பாதுகாப்பது மட்டுமல்லாமல், கேள்வி கேட்பது மற்றும் கருத்துக்களை ஆராய்வது என்ற கருத்தைப் பாதுகாப்பதும் குறிக்கோளாக இருந்து வருகிறது. 

"நூலகத்திற்கு ஏன் இந்தப் பெயரைத் தேர்ந்தெடுத்தேன் ஏனெனில், இது பண்டைய கிரேக்க தத்துவ வரலாற்றிலும் நமது சொந்த அரபு-இஸ்லாமிய கலாச்சார பாரம்பரியத்திலும், குறிப்பாக நமது மத பாரம்பரியத்திலும் ஆழமாக வேரூன்றியுள்ளது"  என்று நூலகத்திற்கு ஜடல் என்ற பெயர் தேர்ந்தெடுத்தது குறித்து அல்-ஹெர்ஸ் இப்படி ஒரு அருமையான விளக்கம் அளித்துள்ளார். 

இந்த நூலகத்த்ல் சாக்ரடீஸ், பிளேட்டோ மற்றும் அரிஸ்டாட்டில் ஆகியோரின் பெயரிடப்பட்ட மூன்று முக்கிய அரங்குகளில் தத்துவார்த்த சூழல் நிரம்பியுள்ளது. இது பார்வையாளர்களை வாசிப்பு மற்றும் பிரதிபலிப்பின் ஒரு உலகத்திற்கு வரவேற்கிறது. அத்துடன், அரிய கையெழுத்துப் பிரதிகள், பண்டைய நூல்கள், செய்தித்தாள்கள் மற்றும் பழங்காலப் பொருட்கள் கவனமாக காப்பகப்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு பகுதியும் கடந்த காலத்திலிருந்து எதிர்காலத்தைப் பற்றிப் பேசும் ஒரு பொக்கிஷங்களாக இருந்து வருகின்றன.

நல்லிணக்கத்தை உருவாக்கும் நூலகம் :

ஜடல் நூலகத்திற்கு வாங்கப்படும் நூல்கள், செய்தித்தாள்கள் ஆகியவை குறித்து மிகவும் கவனத்துடன் அலி அல்-ஹெர்ஸ் இருந்து வருகிறார். அதனால் தான், "புத்தகங்களை வாங்குவதில் எனது சமீபத்திய கவனம் கூட, பாரம்பரியத்திற்கும் நவீனத்துவத்திற்கும் இடையில் ஒரு நல்லிணக்கத்தை உருவாக்க, பெரும்பாலும் அரிய பதிப்புகள் மற்றும் பழைய அச்சுகளை நோக்கி நகர்ந்துள்ளது" என்று அவர் தெரிவித்துள்ளார். 

ஆனால் ஜடால் நூலகம் ஏக்கத்தில் சிக்கிக் கொள்ளவில்லை. ஏனெனில் ஒவ்வொரு இரண்டு வாரங்களுக்கும் அல்-ஹெர்ஸ் ஒரு இலக்கியக் கூட்டத்தை நடத்துகிறார். இந்த நிகழ்வு அரேபியர்களின் அறிவுசார் வாழ்க்கையில் ஒரு காலத்தில் முக்கியமான ஒரு பாரம்பரியத்தை மீண்டும் கொண்டுவருகிறது. எழுத்தாளர்கள், அறிஞர்கள் மற்றும் சிந்தனையாளர்கள் அரபு காபியில் கூடி ஒரு துடிப்பான சூழ்நிலையில் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளும் சூழலை இந்த கலந்துரையால் நிகழ்வு உருவாக்கிவிடுகிறது. 

பாரம்பரிய முறையில் நூலகம் :

உலகம் முழுவதும் மக்கள் ஆன்லைனில் உடனடி தகவல்களைத் தேடும் இந்த நவீன காலத்தில், அலி அல்-ஹெர்ஸ் இன்னும் பாரம்பரிய முறைகளைப் பயன்படுத்துகிறார்.. எனவே தான் "இரண்டு தலைமுறைகளுக்கு இடையே ஒரு தொடர்ச்சியான போராட்டம் உள்ளது" என்று அவர் குறிப்பிட்டார். மேலும், "எனது தலைமுறை அழிந்துவிட்ட பிறகு, இறுதியில் இந்தப் பிந்தைய தலைமுறைக்குச் செல்லும். காகித நூலகங்கள் பின்னர் அருங்காட்சியகங்களாக மாற்றப்படும்" என்றும் அல்-ஹெர்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

ஒருவேளை அவர் சொல்வது சரிதான். ஆனால் இப்போதைக்கு, கதிஃப்பின் கிராமப்புறத்தின் மையத்தில், ஜடல் நூலகம் வாழ்கிறது.  மேலும், அது மை, நினைவு, விவாதம் மற்றும் பாரம்பரியம் ஆகியவை ராஜ்ஜியத்தின் கலாச்சார ஆன்மாவை தொடர்ந்து வடிவமைக்கும் இடமாக திகழ்கிறது. அலி அல்-ஹெர்ஸ் தனது வீட்டை ஆயிரக்கணக்கான புத்தகங்களைக் கொண்ட நூலகமாக மாற்றி, பார்வையாளர்களுக்கு நினைவகம், தத்துவம், கலாச்சாரம் உயிர்ப்பிக்கும் இடத்தை வழங்கி இருப்பது உண்மையிலேயே பாராட்டப்படக் கூடிய ஒரு நல்ல முயற்சி என்றே கூறலாம்.

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


No comments: