Thursday, June 26, 2025

கத்தாரில் இந்திய மாம்பழ திருவிழா....!

 "கத்தாரில் பார்வையாளர்களை ஈர்த்த இந்திய மாம்பழ திருவிழா"

வளைகுடாவில் உள்ள ஒரு சிறிய நாடான கத்தார் தலைநகர் தோஹாவில், ஒரு சிறிய இடத்தில் ஒரு உட்புற  சந்தைக்கு வெளியே, பழங்களின் ராஜாவுக்கு திருவிழா நடத்தப்பட்டது. ஆம், முக்கனிகளில் ஒன்றான, அனைவரும் விரும்பும் மாம்பழங்களுக்காக, மாம்பழ ஹம்பா கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது.  50க்கும் மேற்பட்ட அரங்குகள், சுமார் 25க்கும் மேற்பட்ட விற்பனையாளர்கள், இரண்டு வார விழா என இந்த மாம்பழ திருவிழா களைகட்டியது.  கண்காட்சிக்கு ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் வந்து ரசித்து, ருசித்து, ஆனந்தம் அடைந்து மகிழ்ச்சியுடன் வெளியேறினார்கள்.  

இந்திய மாம்பழ கண்காட்சி :

கத்தாரின் தோஹாவில் உள்ள சூக் வாகீப்பில் நடைபெற்ற இந்திய மாம்பழ கண்காட்சியில்,  ராஜ்புரி, துட்டாபுரி, பாதாமி, நாட்டி, சிந்தூர் மற்றும் இன்னும் பல வகையான மாம்பழங்களின் நறுமணத்தால் நிறைந்த இந்த உட்புறப் பகுதியில், மாம்பழச்சாறு, மாம்பழ ஊறுகாய், மாம்பழ ஐஸ்கிரீம், மாம்பழ ஃபலுடா மற்றும் மாம்பழ லஸ்ஸி போன்ற பல வகையான சுவையான மற்றும் ஜூசி நிறைந்த மாம்பழ சிற்றுண்டிகள் மற்றும் பானங்கள் அனைவரின் உணர்வுகளையும் கவர்ந்தன. மேலும், ராஜபுரி, மல்கோவா, நீலம், அல்போன்சோ, கேசர், பாதாமி, மல்லிகா, இமாம் பசந்த், கலபாடி, தோத்தாபுரி, சக்கரக்குட்டி மற்றும் சிந்தூர் உள்ளிட்ட மிகவும் பிரபலமான இந்திய மாம்பழ வகைகள் 38 இந்திய நிறுவனங்கள் பங்கேற்ற கண்காட்சியில் விற்பனைக்கு வைக்கப்பட்டன.

ஒரு பக்கத்தில் நன்கு அறியப்பட்ட வணிகக் கடைகள் வரிசையாக இருந்தன. மறுபுறம் பிரபலமான உணவு மையங்களின் கடை முகப்புகள், மறுபுறம் மொத்த விற்பனையாளர்களின் கடைகள் இருந்தன. இந்த மாம்பழக் கண்காட்சியில் சில பழங்களை ருசிக்க இந்தியா, கத்தார், இலங்கை, பங்களாதேஷ், பிலிப்பைன்ஸ் மற்றும் பல நாடுகளைச் சேர்ந்த மக்கள் வந்திருந்தனர். இது உண்மையிலேயே அற்புதமான காட்சியல்லவா? 

கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, தெலுங்கானா, கேரளா, மத்தியப் பிரதேசம், கோவா மற்றும் பிற மாநிலங்களிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மாம்பழங்கள். கத்தாரில் உள்ள இந்திய தூதரகம் மற்றும்  இந்திய வணிக மற்றும் தொழில்முறை கவுன்சில் உடன் இணைந்து ஏற்பாடு செய்த இரண்டு வார மாம்பழக் கண்காட்சி, ஜூன் 12, 2025 அன்று தொடங்கி ஜூன் 21, 2025 அன்று நிறைவடைந்து பழங்களின் ராஜா மகத்தான வெற்றியைப் பெற்றது.

பார்வையாளர்களை ஈர்த்த மாம்பழங்கள் :

பொதுமக்கள் பங்கேற்பு மற்றும் வணிக வளர்ச்சி ஆகிய இரண்டிலும் வெற்றியைப் பிரதிபலிக்கும் அதே வேளையில், இந்திய மாம்பழ விழாவின் இரண்டாவது பதிப்பான அல் ஹம்பா கண்காட்சியில் ஒரு லட்சத்து 30 ஆயிரத்து நூறு   கிலோவிற்கும் அதிகமான பழங்கள் விற்பனை செய்யப்பட்டன. தனியார் பொறியியல் அலுவலகத்தின் அறிக்கையின்படி, 10 நாள் திருவிழாவில்  ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 400 பார்வையாளர்கள் கலந்து கொண்டனர். சூக் வாகீப்பின் கிழக்கு சதுக்கத்தில் நடைபெற்ற இந்த கண்காட்சி இந்திய தூதரகத்தின் ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டது.

குடும்பங்கள், குடிமக்கள், குடியிருப்பாளர்கள் மற்றும் பல்வேறு தேசங்களைச் சேர்ந்த பார்வையாளர்களின் பங்கேற்புடன், இந்த மாம்பழ திருவிழாவில், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதனால் அங்கு மகிழ்ச்சியான பண்டிகை சூழ்நிலையும் காணப்பட்டது என விழா ஏற்பாட்டாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.  காட்சிப்படுத்தப்பட்ட அனைத்து மாம்பழ வகைகளும் இந்த திருவிழாவிற்காக குறிப்பாக இந்தியாவில் இருந்து நேரடி விமான சரக்கு மூலம் தினசரி இறக்குமதி செய்யப்பட்டன. இது புதிய பழங்கள் கிடைப்பதை உறுதி செய்தது.

"இந்த வெற்றி அடுத்த ஆண்டு கண்காட்சியின் மூன்றாவது பதிப்பைத் திட்டமிடுவதற்கு ஒரு பெரிய ஊக்கமாகும். இது முந்தைய இரண்டு பதிப்புகளில் அடைந்த வெற்றிகளின் அடிப்படையில் மேம்பட்ட மற்றும் தனித்துவமான பதிப்பை பொதுமக்களுக்கு உறுதியளிக்கிறது" என்று மாம்பழ திருவிழாவின் பொது மேற்பார்வையாளர் காலித் சைஃப் அல்-சுவைதி கூறினார். இரண்டாவது பதிப்பில் கடந்த ஆண்டின் புள்ளிவிவரங்களை விட எதிர்பார்ப்புகளை விட அதிகமான மக்கள் கலந்து கொண்டனர். அதேநேரத்தில் சூக் வாகிஃப் நிர்வாகம் மற்றும் பணிக்குழுவின் சிறந்த ஏற்பாட்டை செய்து இருந்ததாக அவர் பாராட்டினார். இந்த விழாவில் கேக்குகள், இனிப்புகள், ஐஸ்கிரீம்கள் மற்றும் பழச்சாறுகளுடன் 55 மாம்பழ வகைகள் இடம்பெற்றன.

இந்த ஆண்டு கண்காட்சியின் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சங்களில் ஒன்று பொது சுகாதார அமைச்சகத்துடன் இணைக்கப்பட்ட ஒரு ஆய்வகம் அமைக்கப்பட்டது.  பார்வையாளர்களின் ஆரோக்கியம் மற்றும் தயாரிப்புகளின் பாதுகாப்புக்கான ஏற்பாட்டுக் குழுவின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில், தினசரி காட்சிப்படுத்தப்படும் மாம்பழங்களின் சீரற்ற மாதிரிகளை ஆய்வகம் சோதனை செய்தது. இந்த கண்காட்சியில் உள்ளூர் சந்தையில் முதல் முறையாக புதிய பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன.  கூடுதலாக இனிப்புகள், ஊறுகாய், பழச்சாறுகள் மற்றும் துணை உணவுகள் போன்ற பல்வேறு வகையான மாம்பழ அடிப்படையிலான உணவுப் பொருட்கள் இடம்பெற்றன.

வங்கதேச மாம்பழ திருவிழா :

இந்திய மாம்பழத் திருவிழாவை போன்று, முதல்முறையாக  வங்கதேச மாம்பழ திருவிழாவும்  சூக் வாகீஃபின் கிழக்கு சதுக்கத்தில் நடைபெற்றது. ஜுன் 25 முதல் ஜுலை ஒன்றாம் தேதி வரை நடைபெற்ற இந்த மாம்பழ திருவிழா, வங்கதேச தூதரகத்தின் ஒத்துழைப்புடன் தனியார் பொறியியல் அலுவலகம் ஏற்பாடு செய்து இருந்தது. இந்த விழாவில், வங்கதேசத்திலிருந்து வந்த மாம்பழ பொருட்கள் மற்றும் புதிய பழங்கள் வரிசையாக இடம்பெற்றன. இந்த மாம்பழ திருவிழாவை தனியார் பொறியியல் அலுவலகத்தின் பிரதிநிதி  அப்துல்ரஹ்மான் முகமது அல்-நாமா, வங்கதேச தூதர் முகமது நஸ்ருல் இஸ்லாம் மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தூதர்கள் மற்றும் தூதர்கள் முன்னிலையில் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார்.

இந்த கண்காட்சியில், புகழ்பெற்ற வங்கதேச மாம்பழ வகைகளான அம்ரபாலி, லாங்ரா, கட்டிமோன், கிர்சபத், பாஸ்லி, கோபால்போக், ஹரிபங்கா, நொண்டி மாம்பழம், வாழை மாம்பழம், ஹிமாஷகோர் மற்றும் லக்ஷ்மன்போக் ஆகியவற்றின் தனித்துவமான தேர்வுகள் காட்சிப்படுத்தப்பட்டன. மேலும், லிச்சி, பலாப்பழம், டிராகன் பழம், கொய்யா, பக்காரியா மோட்லேயானா மற்றும் அன்னாசிப்பழம் ஆகியவை விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தன.  தினமும் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையும், விடுமுறை நாட்களில் இரவு 10 மணி வரையும் திறந்து இருந்த இந்தக் கண்காட்சியை பார்க்க மக்கள் அதிக ஆர்வம் செலுத்தினார்கள். 

வங்கதேச மாம்பழங்கள் அறிமுகம் :

இந்த கண்காட்சி, வங்கதேச பழங்களை கத்தாரில் காட்சிப்படுத்த ஒரு வாய்ப்பாக அமைந்து இருந்தது. மேலும் இந்த விழா, வங்கதேச விற்பனையாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் தங்கள் தயாரிப்புகளுக்கு நல்ல சந்தையைக் கண்டறிய உதவும் வகையில் இருந்தது. 20க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் இந்த விழாவில் பங்கேற்றனர். அவர்களில் பெரும்பாலோர் கண்காட்சிக்காகவே வங்கதேசத்திலிருந்து பிரத்தியேகமாக வந்திருந்தனர். வங்கதேசத்திலிருந்து சிறப்பு விமானங்களில் கொண்டு வரப்பட்ட உயர்தர பழங்கள் மாம்பழ திருவிழாவில் விற்பனை செய்யப்பட்டன.

இந்த விழா கத்தார், வங்கதேசம் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை அதிகரிக்க உதவியாக இருந்தது. இதுபோன்ற விழாக்கள் வங்கதேசத்தின் கலாச்சார செழுமையை எடுத்துக்காட்டுவதற்கும், கத்தாருடனான உறவுகளை வலுப்படுத்துவதற்கும் இடங்களாகும். கலாச்சார பரிமாற்றத்திற்கான பல செயல்பாடுகளை தாங்கள் நடத்தியுள்ளதாகவும், இது உறவுகள் மேலும் வளர உதவும் என்றும் வங்கதேச தூதரக அதிகாரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.  கண்காட்சியின் பொது மேற்பார்வையாளர் காலித் சைஃப் அல்-சுவைதி கூறுகையில், "வங்கதேசத்தில் உச்சகட்ட மாம்பழ அறுவடை காலத்துடன் இணைந்து இந்த விழா முதன்முறையாக நடத்தப்படுகிறது. இது பங்கேற்கும் நிறுவனங்களிடையே ஆரோக்கியமான போட்டியை மேம்படுத்துவதையும், உயர்தர தயாரிப்புகளை அணுகக்கூடிய விலையில் வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த கண்காட்சி கொண்டாட்டக் குழு மற்றும் வங்கதேச தூதரகம் இடையேயான கூட்டுத் திட்டத்தின் விளைவாகும். இது வங்கதேசம் மற்றும் உள்ளூர் நிறுவனங்கள் தங்கள் சலுகைகளை ஒரு சிறப்பு வணிக சூழலில் காட்சிப்படுத்த ஒரு தளத்தை வழங்குகிறது" என்று தெரிவித்தார்.

கண்காட்சியில் வைக்கப்பட்ட பல வகையான மாம்பழங்கள், முதல் முறையாக உள்ளூர் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்பட்டன. இது கண்காட்சியை புதிய சுவைகளை ஆராய ஒரு அரிய வாய்ப்பாக மாற்றியது.  மாம்பழ நாற்றுகளில் நிபுணத்துவம் பெற்ற பல நிறுவனங்களும் கண்காட்சியில் இடம்பெற்றதால், உள்ளூர் குடிமக்கள் மற்றும் உற்பத்தி நோக்கங்களுக்காக மாம்பழங்களை பயிரிடுவதில் ஆர்வமுள்ள விவசாயிகளின் ஆர்வத்தை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-  எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: