Saturday, June 28, 2025

இஸ்லாம் மனிதகுலத்திற்கு வழங்கியது என்ன?

 நூல் மதிப்புரை


நூல் : இஸ்லாம் மனிதகுலத்திற்கு வழங்கியது                                                என்ன?

நூலாசிரியர் : டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மது

வெளியீடு : இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட்,

          138, பெரம்பூர் நெடுஞ்சாலை, 

        சென்னை - 600 012.

       தமிழ்நாடு, இந்தியா

      செல்பேசி: 86680 57596 

     தொலைபேசி: 044 2662 4401

விலை : ரூ.175/- 

தமிழ் உலகம் நன்கு அறிந்த சிறந்த பேச்சாளர், கல்வியாளர், அழைப்பு பணியில் பன்னெடுங்காலம் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் மற்றும் குழந்தைகள் நல மருத்துவர், டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மது அவர்கள், "இஸ்லாம் மனிதகுலத்திற்கு வழங்கியது என்ன? என்ற இந்த நூலை எழுதியுள்ளார். மனித குலம் முழு பயன் அடைவதற்குத் தேவையான அனைத்தையும் இஸ்லாம் உலகிற்கு கொடுத்துள்ள நிலையில், இஸ்லாம் மனித குலத்திற்கு வழங்கிய அருட்கொடைகள் என்ன? என்பதை உலகில் வாழும் அனைத்துச் சமுதாய மக்களும் அறிந்துகொள்ள வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. 

172 பக்கங்கள் கொண்ட இந்த நூலில், 'ஆறாம் நூற்றாண்டில் அன்றைய உலகம்' என்று தொடங்கும் முதல் கட்டுரை முதல், 'வரலாற்றில் இஸ்லாத்தின் பங்களிப்பு ஓர் பறவைப் பார்வை' என்ற கடைசி கட்டுரை வரை மொத்தம் 13 தலைப்புகளில் ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. ஆறாம் நூற்றாண்டில் அன்றைய உலகம் எப்படி இருந்தது? மக்களின் வணக்க முறைகள் எப்படி இருந்தன? என்பன போன்ற பல கேள்விகளுக்கு முதல் கட்டுரையில், பல்வேறு அருமையான தகவல்களை டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மது கொடுத்து இருக்கிறார். குறிப்பாக, ஆறாவது நூற்றாண்டில் இந்துக்கள் ஒரு கோடி கடவுள்களை வழிபட்டனர் என்பதை வரலாற்றாசியர் சி.வி.வைத்யா நூலை அவர் மேற்கோள் காட்டியுள்ளார். இதேபோன்று அரபு மொழியில் சிலை என்ற வார்த்தைக்கு ஈடாக புத்தர் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டது என்ற வரலாற்று குறிப்பும் இடம்பெற்றுள்ளது. (தற்போது இந்த வார்த்தை புத் கானா என்று அழைக்கப்படுவது வழக்கத்தில் உள்ளது) மேலும், கஅபாவில் 360 சிலைகள் இருந்தன. இவை தவிர கற்களையும் நட்சத்திரங்களையும் வழிபட்ட அரபிகள், வானவர்கள் கடவுளின் பெண்மக்கள் என்றும், ஜின்களுக்கு கடவுளின் தெய்வத் தன்மையில் பங்கு உள்ளது என்றும் நம்பினர் என்றும் நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

ஆறாம் நூற்றாண்டில் உலகம் எப்படி இருந்தது என்பதை அருமையாக விளக்கம் அளித்து, இத்தகைய கொடுமையான, பண்பாடற்ற, அநீதிகள் நிறைந்த சமூகத்தை ஒரு வலிமையான சித்தாந்தத்தால் மட்டுமே மாற்றியமைக்க முடியும் என குறிப்பிட்டு, அரபுப் பாலைவனத்தில் கி.பி.571ஆம் ஆண்டில் பிறந்து 611 இல் பரப்புரையைத் தொடங்கிய இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள், அப்பணியைச் செய்து மனித இனத்தை அழிவிலிருந்து காக்கும் பணியை மேற்கொண்டார் என்றும் மிகச் சிறப்பாக ஆசிரியர் எடுத்துரைக்கிறார். 

சிந்தனைப் புரட்சி, ஒழுக்கப் புரட்சி, செயல் புரட்சி என்ற மூன்று வழிகளில் இஸ்லாம் மனித சமூகத்தில் மாற்றங்களைக் கொண்டு வந்தது என்பதை திருக்குர்ஆன் வசனங்களை மேற்கோள்காட்டி, அற்புதமான முறையில் மருத்துவர் விளக்கம் அளித்துள்ளார். இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் ஏற்பட்ட மாற்றங்கள், அவருக்குப் பின் ஏற்பட்ட மாற்றங்கள் ஆகிய அனைத்தையும் படிக்கும்போது உண்மையிலேயே நமக்கு வியப்பு ஏற்படுகிறது. 

இஸ்லாம் குறித்தும், இஸ்லாத்தில் நிலவும் சமத்துவம் குறித்தும், அது எப்படி மக்களால் கவரப்பட்டது என்பது குறித்தும், அறிஞர் பெருமக்கள் அளித்த அழகிய வாக்குமூலங்களை நூலின் பல்வேறு பகுதிகளில் சுட்டிக்காட்டி, மிகச் சிறப்புடன் நூலுக்கு நூலாசிரியர் அழகு சேர்க்கிறார்.  

நல்லிணக்கத்திற்கு இஸ்லாம் வகுத்தக் கோட்பாடுகள், பிறமத வழிபாட்டுத் தலங்களைப் பாதுகாத்தல், பிற மதங்களை மதிக்க வேண்டும், சிறுபான்மையினர் உறவுகள், உரிமைகள், அனைவருடன் இணைந்து பணியாற்றுக, இஸ்லாமிய ஆட்சியில் சிறுபான்மையினரின் நிலை என பல்வேறு தலைப்புகளில், இஸ்லாம் மனிதகுலத்திற்கு எப்படி அருட்கொடைகளை வழங்கியது என்பதை மிகமிக தெளிவாக இந்த நூல் எடுத்துரைக்கிறது. 

இயற்கை மார்க்கம், அரசியல் கோட்பாடுகள், மாதர்களின் மாண்பு, அறிவுக்கும், அறிவியலுக்கும் ஊக்கம் தந்த இஸ்லாம், போர் தர்மங்கள், வரலாற்றில் இஸ்லாத்தின் பங்களிப்பு என ஒவ்வொரு தலைப்பிலும் தரப்பட்டுள்ள தகவல்கள், விளக்கங்கள் அனைத்தும் பொக்கிஷங்கள் என்றே கூறலாம். 

இஸ்லாமியக் கோட்பாடுகள் வெறும் வறட்டுத் தத்துவங்கள் அல்ல. செயல்படுத்தத் தகுந்தவை, செயல்படுத்திக் காட்டப்பட்டவை. இஸ்லாம் ஒரு மதமல்ல. ஒரு வாழ்க்கை நெறி என்பதை அழகுடன் எடுத்துரைத்து, சில முஸ்லிம்கள், முஸ்லிம் நாடுகள், முஸ்லிம் இயக்கங்கள் செய்யும் செயல்களை வைத்து இஸ்லாத்தை எடைபோடக் கூடாது என்று கேட்டுக் கொண்டுள்ள டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மது, "இஸ்லாம் மனிதகுலத்திற்கு வழங்கியது என்ன?" என்ற தமது நூலை படித்தால் அதனை நன்கு புரிந்துகொள்ள முடியும் என்றும் தனது நிறைவுரையில் உறுதிப்பட தெரிவிக்கிறார். 

மிகவும் சிறப்பான, அற்புதமான முறையில் எழுதப்பட்டுள்ள "இஸ்லாம் மனிதகுலத்திற்கு வழங்கியது என்ன?" என்ற இந்த நூலை, முஸ்லிம்கள் படிப்பதுடன் மற்றவர்களுக்கும் அன்பளிப்பாக கொடுத்தால் சமுதாயத்தில் நல்ல மாற்றங்கள் நிச்சயம் ஏற்படும். குறிப்பாக, சகோதர சமுதாய மக்களுக்கு இந்த நூலை அன்பளிப்பாக வழங்கினால், இஸ்லாம் குறித்து அவர்கள் மத்தியில் நிலவிவரும் குழப்பங்கள், சந்தேகங்கள், போலி பிம்பங்கள் அனைத்தும் களைய நல்ல வாய்ப்பு உருவாகும். அத்துடன், தமிழகத்தில் உள்ள அனைத்து மதரஸா, அரசு மற்றும் தனியார் நூலகங்களில் இந்த நூல் நிச்சயம் இடம்பெற்றால், அனைத்து தரப்பு வாசகர்களும், நூலை படித்து தெளிவுபெற வாய்ப்பு கிடைக்கும். 

- ஜாவீத்

No comments: