Wednesday, June 11, 2025

மக்காவின் மஷீர் மெட்ரோ ரயில் நிறுவனம் சாதனை....!

ஹஜ் 2025  காலத்தில்  19 லட்சம் மக்களுக்கு சேவை செய்து மக்காவின் மஷீர் மெட்ரோ ரயில்  நிறுவனம் சாதனை....!

மக்கா, ஜுன்.13- 2025ஆம் ஆண்டுக்கான ஹஜ் மிகச் சிறந்த முறையில் பாதுகாப்புடன் நிறைவு பெற்றுள்ள நிலையில்,  மக்காவின் மஷீர் மெட்ரோ ரயில் நிறுவனம்,  இந்தாண்டு ஹஜ்ஜின்  போது சுமார் 19 லட்சம் பயணிகளை ஏற்றிச் சென்று மிகப்பெரிய சேவையை ஆற்றியுள்ளது. 

தற்போது மக்கா, மதீனா ஆகிய நகரங்களுக்கு வரும் உலக முஸ்லிம்களுக்கு போக்குவரத்துச் சேவை வழங்கும் ஒரு சிறப்பான நிறுவனமாக மக்காவின் மஷீர் மெட்ரோ ரயில் நிறுவனம் இருந்து வருகிறது. இத்தகைய சூழ்நிலையில், இந்தாண்டு ஹஜ் புனித பயணம் மேற்கொண்ட மக்களுக்கும் மிகப்பெரிய சேவையை இந்த நிறுவனம் அளித்துள்ளது. ஒவ்வொன்றும் 3 ஆயிரம் பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்ட 17 சுற்றுச்சூழல் நட்பு மின்சார ரயில்களைக் கொண்ட இந்த மெட்ரோ அமைப்பு, ஹஜ் பருவத்தில் சுமார் 50 ஆயிரம் பயணிகள் பேருந்துகளை மாற்றுவதன் மூலம் போக்குவரத்து நெரிசல் மற்றும் கார்பன் வெளியேற்றத்தைக் கணிசமாகக் குறைத்துள்ளது

ஹாஜிகளுக்கு சிறந்த சேவை :

மினா, முஸ்தலிஃபா மற்றும் அரஃபாத் இடையே ஹஜ் யாத்ரீகர்களை கொண்டு செல்வதற்காக மஷீர் மெட்ரோ ரயில் 2 ஆயிரத்து 154 பயணங்களை மேற்கொண்டது. ஹஜ் யாத்ரீகர்களுக்கு சேவை செய்வதற்காக அர்ப்பணிக்கப்பட்ட மெட்ரோ ரயில், ஒவ்வொரு ஆண்டும் ஏழு நாட்கள் மட்டுமே இயங்குகிறது. இந்த ஆண்டு ஹஜ் பருவத்தில் மக்காவின் புனித தலங்களுக்குள் பயணிக்க சுமார் 19 லட்சம் பயணிகள் மஷீர் மெட்ரோ ரயிலைப் பயன்படுத்தினர் என்று சவுதி அரேபியா ரயில்வே தெரிவித்துள்ளது.

துஅல்-ஹிஜ்ஜா 7 (ஜூன் 3) முதல் தஷ்ரீக் நாட்கள் முடியும் வரை (ஜூன் 9), மஷீர் மெட்ரோ ரயில், மினா, முஸ்தலிஃபா மற்றும் அரஃபாத் நிலையங்களுக்கு இடையில் யாத்ரீகர்களை நகர்த்துவதற்காக 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணங்களை முடித்ததாக ரயில்வே நிறுவனம் சவுதி பத்திரிகை நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஹஜ் 2025 இன் போது மஷீர் போக்குவரத்து அமைப்புக்கான செயல்பாட்டுத் திட்டம் ஐந்து முக்கிய கட்டங்களைக் கொண்டிருந்தது. முதல் கட்டமாக ஜூன் 3 முதல் 4 வரை அனைத்து நிலையங்களிலும் 27 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகளைக் கொண்டு சென்றது.

இரண்டாவது கட்டமாக 2 லட்சத்து 82 ஆயிரம் ஹஜ் யாத்ரீகர்களை மினாவிலிருந்து அரஃபாத்திற்கு கொண்டு சென்றது. மூன்றாவது கட்டமாக 2 லட்சத்து 94 ஆயிரம் யாத்ரீகர்களை அரஃபாத்திலிருந்து முஸ்தலிஃபாவிற்கும், நான்காவது கட்டமாக 3 லட்ச்த்து 49 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஹஜ் யாத்ரீகர்களை முஸ்தலிஃபாவிலிருந்து மினாவிற்கும் கொண்டு சென்று மிகப்பெரிய சேவையை ஆற்றியுள்ளது. 

கடைசி நாளில் மிகப்பெரிய சேவை :

"தஷ்ரீக் மாதத்தின் கடைசி நாளில் சூரியன் மறையும் வரை நீடித்த இறுதிக் கட்டத்தில், மினா 3 (ஜமாரத்) நிலையத்திற்கு 9 லட்சத்து 20 ஆயிரத்திற்கும்  மேற்பட்ட பயணிகள் வந்து சென்றதாக பதிவு செய்யப்பட்டது" என்று  மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சவூதி அரேபியா ரயில்வே தலைமை நிர்வாக அதிகாரி பஷர் அல்மாலிக், செயல்பாட்டுத் திட்டத்தை வெற்றிகரமாக முடித்ததற்கு, செயல்பாட்டு மற்றும் பாதுகாப்பு நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து, உருவகப்படுத்துதல் பயிற்சிகள் மற்றும் முழு அளவிலான சோதனை ஓட்டங்கள் உள்ளிட்ட விரிவான ஆயத்தப் பணிகள் காரணம் என்று கூறியுள்ளார்.

மணிக்கு 80 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் இந்த ரயில், மினாவிலிருந்து அரஃபாத்திற்கு பயணிகளை வெறும் 20 நிமிடங்களில் கொண்டு செல்லும் திறன் கொண்டது. அல்-மஷீர் அல்-முகதாசா மெட்ரோ என்றும் அழைக்கப்படும் இந்த போக்குவரத்து அமைப்பு, புனித தலங்கள் முழுவதும் அமைந்துள்ள ஒன்பது நிலையங்களைக் கொண்டுள்ளது. இது 18 கிலோமீட்டர் இரட்டைப் பாதை ரயில் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. இது ஒரு திசையில் ஒரு மணி நேரத்திற்கு 72 ஆயிரம் பயணிகளை இடமளிக்கும் திறன் கொண்டது. இது ஹஜ் யாத்ரீகர்களுக்கு சௌகரியத்தையும் ஆறுதலையும் அளித்து, ஹஜ் சடங்குகளில் கவனம் செலுத்த அனுமதிக்கிறது.

2010 இல் திறக்கப்பட்ட இந்த மெட்ரோ ரயில் பாதை, மக்கா, மினா, மவுண்ட் அரஃபாத் மற்றும் முஸ்தலிஃபாவில் உள்ள புனித தலங்களுக்கு இடையேயான யாத்ரீகர்களுக்கான ஒரு ஷட்டில் ரயிலாக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. 3 ஆயிரம் பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்ட 17 சுற்றுச்சூழல் நட்பு மின்சார ரயில்களைக் கொண்ட மெட்ரோ அமைப்பு, ஹஜ் பருவத்தில் சுமார் 50 ஆயிரம் பயணிகள் பேருந்துகளை மாற்றுவதன் மூலம் போக்குவரத்து நெரிசல் மற்றும் கார்பன் வெளியேற்றத்தை கணிசமாகக் குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


No comments: