பெய்ஜிங் சர்வதேச புத்தகக் கண்காட்சி: பார்வையாளர்களை கவர்ந்த சவுதி அரேபிய அரங்கம்.....!
சீன தலைநகர் பெய்ஜிங்கில் ”பெய்ஜிங் சர்வதேச புத்தகக் கண்காட்சி 2025" என்ற சர்வதேச புத்தகக் கண்காட்சி, ஜுன் 18ஆம் தேதி தொடங்கி, ஜுன் 22ஆம் தேதி வரை மொத்தம் 5 நாட்கள் நடைபெறுகிறது. ஆசியாவில் நடைபெறும் இந்த மிகப்பெரிய சர்வதேச புத்தகக் கண்காட்சியில், பல்வேறு நாடுகள் தங்கள் அரங்குகளை அமைத்துள்ளனர். அதன்படி, பெய்ஜிங் சர்வதேச புத்தகக் கண்காட்சியில் சவுதி அரேபியா தனது அரங்கை அமைத்து முதல் நாளில் பார்வையாளர்களுக்காக திறந்து வைத்தது. பல கலாச்சார மற்றும் தேசிய நிறுவனங்களின் பங்கேற்புடன், இந்த அரங்கம் சவுதி அரேபிய அரசின் இலக்கியம், வெளியீடு மற்றும் மொழிபெயர்ப்பு ஆணையத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஐந்து நாள் புத்தகக் கண்காட்சி 2025, சவுதி மற்றும் சீன கலாச்சார ஆண்டின் ஒரு பகுதியாகும். பல தசாப்த கால நீடித்த நட்பு மற்றும் தொடர்ச்சியான ஒத்துழைப்பின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட இருதரப்பு உறவுகளின் வலிமையை இது பிரதிபலிக்கிறது. அத்துடன், இரு நாட்டு மக்களிடையே கலாச்சார மற்றும் அறிவுசார் பரிமாற்றத்தை மேம்படுத்துவதற்கான விருப்பங்களை உள்ளடக்கியது.
சவுதி அரங்கில் பொக்கிஷங்கள் :
பெய்ஜிங் சர்வதேச கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள சவுதி அரங்கில் இலக்கியம், வெளியீடு மற்றும் மொழிபெயர்ப்பு ஆணையம் தலைமையிலான முக்கிய கலாச்சார நிறுவனங்கள், கிங் சல்மான் அரபு மொழிக்கான குளோபல் அகாடமி, கிங் அப்துல்அஜிஸ் பொது நூலகம், கிங் ஃபஹத் தேசிய நூலகம், சவுதி அரேபியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான கலாச்சார ஒத்துழைப்புக்கான இளவரசர் முஹம்மது பின் சல்மான் விருது, மொழிபெயர்ப்பு சங்கம், வெளியீட்டு சங்கம் மற்றும் நாஷிர் வெளியீட்டு மற்றும் விநியோக நிறுவனம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்த பங்கேற்பாளர்கள் சவுதி கலாச்சாரத்தின் செழுமையை எடுத்துக்காட்டும் மற்றும் அதன் உலகளாவிய இருப்பை அதிகரிக்கும் ஒரு கூட்டு தளத்தை வழங்குகிறார்கள்.
கண்காட்சியின் போது, சவுதி கலாச்சாரக் காட்சியின் வளர்ந்து வரும் வேகத்தை பிரதிபலிக்கும் ஒரு மாறுபட்ட இலக்கிய மற்றும் கலாச்சார நிகழ்ச்சியை அரங்கம் வழங்குகிறது. இது நாட்டின் வளர்ந்து வரும் படைப்பு மற்றும் அறிவுசார் நிலப்பரப்பைக் காட்டுகிறது. இது உலகளாவிய வெளியீட்டு வரைபடத்தில் சவுதி ராஜ்ஜியத்தின் இருப்பை மேம்படுத்துகிறது. அத்துடன், உள்ளடக்க மேம்பாடு மற்றும் திறமை அதிகாரமளிப்பதில் சவுதி அரேபியாவின் அனுபவத்தைப் பற்றிய நுண்ணறிவை பார்வையாளர்களுக்கு வழங்குகிறது.
கலாச்சார உரையாடல் :
சவுதி அரேபிய அரங்கம் கலாச்சார உரையாடல் மற்றும் வெளிப்படைத்தன்மையின் உணர்வை உள்ளடக்கியது. கண்காட்சியை புத்தகத் துறையிலும் அதன் கருவிகளிலும் சவுதி முயற்சிகள் மற்றும் முன்முயற்சிகளை வெளிப்படுத்த ஒரு முக்கிய சர்வதேச தளமாக மாற்றுகிறது. அதேநேரத்தில் அறிவுஜீவிகள் மற்றும் உலகளாவிய வெளியீட்டு நிறுவனங்களுடனான இலக்கிய மற்றும் கலாச்சார உறவுகளை ஆழப்படுத்துகிறது.
கலாச்சார நிகழ்ச்சியில் சவுதி அரேபியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான கலாச்சார பரிமாற்றத்தை எடுத்துக்காட்டும் கருத்தரங்குகள், இலக்கியக் கூட்டங்கள் மற்றும் உரையாடல் அமர்வுகள் ஆகியவை அடங்கும். இது இலக்கியம், வெளியீடு மற்றும் மொழிபெயர்ப்பில் நீண்டகால கூட்டாண்மைகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சவுதி இலக்கியத்தின் உலகளாவிய இருப்பை வலுப்படுத்துவதும், சீன சந்தையில் அரபு உள்ளடக்கத்திற்கான பாதைகளைத் திறப்பதும் இதன் குறிக்கோளாகும்.
பார்வையாளர்கள் கவர்ந்த சவுதி அரங்கம் :
பெய்ஜிங் சர்வதேச புத்தகக் கண்காட்சியில் சவுதி அரேபிய அரங்கம், புத்தகத் துறையிலும் அதன் கருவிகளிலும் சவுதியின் முயற்சிகள் மற்றும் முன்முயற்சிகளை வெளிப்படுத்துவதற்கான ஒரு முக்கிய சர்வதேச தளமாக இருந்து வருகிறது. அத்துடன், அறிவுஜீவிகள் மற்றும் உலகளாவிய வெளியீட்டு நிறுவனங்களுடனான இலக்கிய மற்றும் கலாச்சார உறவுகளை இந்த அரங்கம் ஆழப்படுத்துகிறது. இதனால், சவுதி அரேபியா சார்பில் அமைக்கப்பட்டுள்ள புத்தக அரங்கம், சர்வதேச பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. கண்காட்சிக்கு வரும் சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த புத்தகப் பிரியர்கள், சவுதி அரேபியாவின் இலக்கிய படைப்புகள், சவுதி மக்களின் இலக்கிய ஆர்வம் ஆகியவை குறித்து அறிந்துகொள்ள வாய்ப்பு உருவாகிறது. அத்துடன், சவுதியின் கலாச்சாரம், பாரம்பரியம், பண்பாடு ஆகியவை குறித்தும் பல்வேறு தகவல்களை அறிந்துகொள்ள முடிவதால், இந்த அரங்கம் சர்வதேச பார்வையாளர்களால் வெகுவாக கவர்ந்து வருகிறது.
ஐந்து நாட்கள் நடைபெறும் பெய்ஜிங் சர்வதேச புத்தகக் கண்காட்சியில், பல்வேறு தலைப்புகளில் லட்சக்கணக்கான அற்புதமான புத்தகங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த புத்தக நிறுவனங்களும் இந்த கண்காட்சியில் பங்கேற்று இருப்பதால், கலாச்சார உறவுகளை மேம்படுத்தும் ஒரு நல்ல தளமாக இந்த பெய்ஜிங் புத்தகக் கண்காட்சி அமைந்துள்ளதாக சர்வதேச பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பெய்ஜிங் சர்வதேச புத்தகக் கண்காட்சி ஐந்து நாட்கள் நடைபெறும் நிலையில்,அங்குவரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக் கொண்டே செல்கிறது என்று கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். புத்தகப் பிரியர்களின் அறிவுப்பசிக்கு நல்ல விருந்தாகவும், கலாச்சார உறவுகளை மேம்படுத்த ஒரு சிறந்த வாய்ப்பாகவும் அமைந்துள்ள பெய்ஜிங் சர்வதேச புத்தகக் கண்காட்சி, சீன மக்கள் மத்தியில் மட்டுமல்லாமல், சீனாவில் வசிக்கும் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்களிடையே கூட நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்றே கூறலாம்.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment