கர்நாடக அரசே ஜெ. மீது வழக்கு போடு...!
தமிழக எதிர்க்கட்சிகள் கெஞ்சல்....!!
வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீது தொடரப்பட்ட வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்து கடந்த 11ஆம் தேதி கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி பரபரப்பு தீர்ப்பு வழங்கினார்.
இந்த தீர்ப்பின் மூலம் கோமா நிலையில் இருந்த அதிமுக மீண்டும் புத்துணர்ச்சியுடன் எழுந்து அரசியலில் கம்பீரமாக நடைபோட தொடங்கியுள்ளது.
ஜெயலலிதா சிறைக்கு செல்வது உறுதி.
அதிமுகவுக்கு இனி எதிர்காலம் இல்லை.
மீண்டும் நாங்கள்தான் ஆட்சியை பிடிக்க போகிறோம் என நினைத்து மகிழ்ச்சியில் திளைத்து இருந்த திமுக தலைமைக்கு ஜெ.வின் விடுதலை மிகப் பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
இதேபோல் ஜெ. இல்லாமல் தேர்தலை சந்தித்தால் தொகுதிகளை நன்கு அறுவடை செய்யலாம்.
அதன்மூலம் திமுகவை பணிய வைத்து பேரம் பேசி ஆட்சியில் இடம் பிடிக்கலாம் என கற்பனை செய்த காங்கிரஸ் தேமுதிக உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களும் ஜெ.வின் விடுதலையால் ஆடி போய் உள்ளனர்.
ஜெ. விரைவில் தமிழக முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளார்.
பல அதிரடி திட்டங்களை அறிவிக்க உள்ளார்.
கடந்த சில மாதங்களாக நின்று போன திட்டங்களை மளமளவென நிறைவேற்ற இருக்கிறார்.
குறிப்பாக தமிழக பெண்களின் கண்ணீரை துடைக்கும் வகையில் மாநிலத்தில் பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவது குறித்து நல்ல அறிவிப்பை ஜெ. வெளியிட இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஜெ.வின் இந்த அறிவிப்புகளால் அவருக்கு மக்களிடையே இருக்கும் செல்வாக்கு மேலும் அதிகரித்துவிடும்.
வரும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றிவிடும்.
இப்படி நினைத்து தமிழக எதிர்க்கட்சிகள் வேதனை அடைந்து பொறாமையால் துடிக்கின்றன.
குறிப்பாக திமுக தலைமை மு.க.ஸ்டாலினை முதலமைச்சர் பதவியில் அமர்த்தி பார்க்க துடியாய் துடிக்கிறது.
எனவேதான் ஜெ. வழக்கில் அதிக அக்கறை செலுத்துகிறது.
நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யுங்கள் என கர்நாடக அரசிடம் கெஞ்சும் பாணியில் கோரிக்கை விடுக்கிறது.
நாங்கள் உங்களுக்கு உதவ தயாராக இருக்கிறோம் என உறுதி கூறுகிறது.
இதேபோல் பிற கட்சிகளும் கோரிக்கை விடுத்துள்ளன.
இன்னும் சொல்லப்போனால் காவிரியில் எங்களுக்கு தண்ணீர் வேண்டாம்.
மேகதாதுவில் நீ அணைக் கட்டிக்கோ ஆனால் ஜெ. மீது மட்டும் வழக்கு போடு.
உச்சநீதிமன்றத்தில் ஜெ.வுக்கு எதிராக மேல்முறையீடு செய் என சொல்லும் அளவுக்கு தமிழக எதிர்க்கட்சிகள் இறங்கி உள்ளதாகவே கூறலாம்.
சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி ஜெ. விடுதலை ஆகி இருக்கலாம்.
அதற்கு ஜெ. பொறுப்பு இல்லை. இந்திய சட்ட நடைமுறைகள் காரணம்.
தவறான தீர்ப்பு வழங்கிய நீதிபதி குமாரசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அவரது நேர்மையை விமர்சனம் செய்துள்ளனர்.
ஜெ.வுக்கு எதிராக அவர் தீர்ப்பு வழங்கி இருந்தால் குமாரசாமியை போன்ற நீதிமான் உலகத்திலேயே இல்லை என பாராட்டி இருப்பார்கள்.
உண்மையில் ஊழலுக்கு எதிராக நீங்கள் போராட நினைத்தால் நாட்டில் ஊழல் ஒழிய வேண்டும் என நினைத்தால் அதை உங்களில் இருந்து தொடங்க வேண்டும்.
மனசாட்சிதான் உயர்ந்த நீதிமன்றம் என கூறும் நீங்கள் ஊழல் விவகாரத்தில் உங்கள் மனசாட்சியை தொட்டு பார்க்க வேண்டும்.
கடைசியாக.
ஜெ. வழக்கில் கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கும் தமிழக தலைவர்களிடம் ஊழல் குறித்து சாதாரண நடுத்தர படிப்பறிவு இல்லாத கேட்கும் இதுபோன்ற
கேள்விகளுக்கு அவர்கள் பதில் சொல்ல வேண்டும்.
அதன் பிறகுதான் ஜெயலலிதாவின் ஊழல்கள் குறித்து புலம்ப வேண்டும்.
இப்படிதான் சாதாரண பொதுமக்கள் பேசிக் கொள்கிறார்கள்.
தமிழக மக்கள் கருத்துக்களை பரிமாற்றி கொள்கிறார்கள்.
எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்.