Tuesday, May 12, 2015

உருக்கமான வேண்டுகோள்...!

ஜெயலலிதாவுக்கு ஓர் (உருக்கமான) வேண்டுகோள்...!


வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் உங்கள் மீது தொடரப்பட்ட வழக்கில் நீதி வென்று நீங்கள் விடுதலை ஆகியுள்ளீர்கள்.

கர்நாடக உயர்நீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கி தர்மத்தை நிலை நாட்டியது பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

உங்கள் வாழ்க்கையில் நீங்கள் பல சோதனைகளை இறைவனின் அருளால் வெற்றிகரமாக கடந்து வந்துள்ளீர்கள்.

உங்களுடைய அரசியல் வாழ்வில் நீங்கள் சந்தித்த சோதனைகளைப் போன்று மற்ற அரசியல் தலைவர்கள் சந்தித்து இருக்க மாட்டார்கள்.

அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் உங்கள் மீது போடப்பட்ட வழக்குகள்தான் எத்தனை.

இந்த வழக்குகள் அனைத்தையும் துணிச்சலுடன் எதிர் கொண்டு சட்டப்படி தாங்கள் நிரபராதி என்பதை குற்றவாளி இல்லை என்பதை நிரூபித்து சாதனை புரிந்துள்ளீர்கள்.

அதற்காக எமது பாராட்டுகள். வாழ்த்துக்கள்.

உங்கள் வாழ்க்கையில் இன்று (11.05.2015) மிக முக்கிய நாள்.

மிகவும் மகிழ்ச்சியான தருணம்.

இந்த மகிழ்ச்சியான நேரத்தில் உங்களிடம் ஓர் வேண்டுகோள்.

தமிழக அரசின் மது கொள்கையால் இலட்சக்கணக்கான இளைஞர்களின் வாழ்க்கை தற்போது கேள்விக்குறியாகி உள்ளது.

பள்ளி சிறுவர்கள் கூட மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி வீதிகளில் வீழ்ந்து கிடக்கிறார்கள்.

நாள்தோறும் இந்த காட்சிகளை தமிழகம் கண்டு வருகிறது.

மதுவின் கொடுமையால் குடும்ப பெண்கள் நிம்மதி இழந்து தவிக்கிறார்கள்.

பல குடும்பங்கள் வறுமையில் தள்ளாட வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளன.

எல்லாவற்றிற்கும் காரணம் வீதிக்கு வீதி திறக்கப்பட்டு இருக்கும் டாஸ்மாக் மது கடைகள்தான்.

தமிழகத்தில் இருந்து மது என்ற அரக்கனை அகற்ற உங்களால் மட்டுமே முடியும்.

அந்த துணிச்சல் உங்களிடம் மட்டுமே உள்ளது.

பொய் வழக்கில் இருந்து விடுதலை ஆகியுள்ள நீங்கள் விரைவில் தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பு ஏற்க இருக்கிறீர்கள்.

இந்த நல்ல நேரத்தில் தமிழக பெண்களின் கண்ணீர் துடைக்க இலட்சக்கணக்கான இளைஞர்களின் வாழ்வை காப்பாற்ற பூரண மதுவிலக்கு தமிழகத்தில் அமல்படுத்த நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முதலமைச்சராக பதவி ஏற்றதும் முதல் ஆணையாக பூரண மதுவிலக்கு தமிழகத்தில் அமல்படுத்தப்படும் என அறிவிக்க வேண்டும்.

அப்படி நீங்கள் செய்தால் ஒட்டுமொத்த தமிழகமே உங்கள் பின்னால் நிற்கும்.
உங்கள் அரசியல் விரோதிகள் காணாமல் போவார்கள்.

தமிழகம் காலா காலத்திற்கு உங்களை போற்றும்.

உங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்கும்.

அம்மா அவர்களே தமிழக மக்களின் இந்த வேண்டுகோளை நிறைவேற்றுங்கள்.

உங்கள் அரசியல் விரோதிகளை அடியோடு வீழ்த்தும் நோக்கிலாவது இதை செய்யுங்கள்.

அதன்மூலம் தமிழக மக்களின் மனங்களில் இடம் பிடியுங்கள்.

வரலாற்று சாதனை புரிந்து உங்கள் வாழ்க்கையில் புதிய வரலாறு படையுங்கள்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 
பத்திரிகையாளர்.

No comments: