Tuesday, May 26, 2015

நவீன முஸ்லீம்கள்....!

நவீன முஸ்லீம்கள்....!


தமிழக பள்ளிவாசல்களில் தொழுகைக்கு வரும் இளைஞர்கள் இடையே இந்த பழக்கம் அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது.

அல்லாஹ்வின் இல்லத்திற்கு மன தூய்மையுடன் உடல் தூய்மையுடன் ஆடை தூய்மையுடன் மட்டுமல்லாமல் நல்ல கண்ணியமான ஆடைகளை அணிந்து வருவது சிறப்பான ஒன்று.

ஆனால் டி.சர்ட் போன்ற அரைகுறை ஆடைகளை அணிந்து கொண்டு இளைஞர்கள் பலர் தொழுகைக்கு வரும் போக்கு தமிழகத்தில் மட்டுமல்ல நாடு முழுவதும் தற்போது அதிகரித்து வருகிறது.

இதுபோன்ற அரைகுறைவான ஆடையை அணிந்துக் தொழுகைக்கு ஒரு இளைஞர் திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள பள்ளிவாசலுக்கு வர அதை தடுத்து நிறுத்தி பெரியவர் ஒருவர் நியாயம் கேட்க இருவருக்கும் இடையே பெரிய வாக்குவாதம் ஏற்பட்டு பிரச்சினை வெடித்தது.

இதுபோன்ற சம்பவங்கள் ஆங்காங்கே நிகழ்ந்த வண்ணமே இருக்கின்றன.
அலுவலகத்திற்கு செல்லும் ஒரு முஸ்லிம் நல்ல ஆடையை அணிந்து கொண்டு செல்கிறார்.

நேர்முக தேர்வுக்கு செல்லும் ஒரு முஸ்லிம் இளைஞர் நல்ல தூய்மையான ஆடையை அணிந்துகொண்டு செல்கிறார்.

டி.சர்ட் அணிந்து கொண்டு அலுவலகத்திற்கோ நேர்முக தேர்வுக்கோ யாரும் செல்வதில்லை.



அப்படி ஒருவர் சென்றால் அவரது நிலைமை என்னவாகும் என்பது சொல்லி புரிய வேண்டியதில்லை.

ஆனால் இறைவனின் வீட்டிற்கு மட்டும் இதுபோன்ற அரைகுறை ஆடைகளை இளைஞர்கள் சிலர் அணிந்து வருவது சரியா என்பதை அவர்கள் எண்ணிப் பார்ப்பதில்லை.

தொழுகையை ஒரு கடமையாக மட்டுமே நினைத்துக் செயல்படுவதால் இந்த போக்கு அதிகரித்து வருகிறது எனலாம்.

தொழுகையால் கிடைக்கும் நன்மை பள்ளிவாசலுக்கு சென்று இறைவனிடம் மனம் விட்டு பேசும்போது கிடைக்கும் ஆனந்தம் இதையெல்லாம் இளைஞர் சமுதாயம் உணர்ந்தால் இதுபோன்ற அரைகுறை ஆடைகளுடன் பள்ளிவாசலுக்கு நிச்சயம் வர மாட்டார்கள்.

அரைகுறை ஆடைகளுடன் பள்ளிவாசலுக்கு நாம் சென்றால் நிச்சயம் நம்முடைய கவனம் முழுவதும் இறைவனின் பக்கம் திரும்பாமல் இருக்கும்.
சிந்தனைகள் சிதறும்.

எண்ணங்கள் ஊசலாடும்.

எனவே பள்ளிவாசலின் கண்ணியத்தை காப்போம்.

இனி நல்ல ஆடைகளை அணிந்து கொண்டு பயபக்தியுடன் தொழுகையை நிறைவேற்றி இறைவனின் அன்பை பெற முயற்சி செய்வோம்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 
பத்திரிகையாளர்.

No comments: