Friday, May 8, 2015

சமுதாயம் உருபடுமா....?

சமுதாயம் உருபடுமா....?


உலக அளவில் இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இழிவுப்படுத்தும் நோக்கத்துடன் ஒரு கயவர் கூட்டம் முழு வேகத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

அதற்கு உலக முஸ்லிம் சமுதாயம் எதிர்த்து குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

சில நேரங்களில் வன்முறைகளும் வெடித்து பலர் உயிரிழக்கும் சம்பவங்கள் நடைபெற்று விடுகின்றன.

காரணம். உயிரினும் மேலான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இழிவுப்படுத்துவதை எந்த முஸ்லிமும் தாங்கிக் கொள்ள விரும்பாததே ஆகும்.

ஆனால் இந்தியாவில் அதுவும் நம்ம தமிழகத்தில் அண்மை காலமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை மையமாக வைத்து முஸ்லிம் மக்களிடையே குறிப்பாக சில இஸ்லாமிய அமைப்புகள் இடையே வாத போர் தொடங்கி தற்போது வீதிக்கு வந்து போராட்டம் நடத்தும் வரை வளர்ந்துள்ளது.

நபியின் போதனைகள் அனைத்தும் உண்மையாகவே நாங்கள்தான் கடைப்பிடித்து வருகிறோம் என ஒரு அமைப்பு கூற மற்றொரு அமைப்போ நபியை இழிவுப்படுத்துவதில் உங்கள் அமைப்பு முதலிடத்தில் உள்ளது என குற்றஞ்சாட்டி சென்னையில் அண்மையில் போராட்டம் நடத்தியது.

அதற்கு பதிலடி கொடுக்கும் நோக்கில் நீங்கள் என்ன உங்கள் பலத்தை காண்பிப்பது. நாங்கள் காட்டுகிறோம் பார் எங்கள் பலத்தை என மார் தட்டி போராட்ட அறிவிப்பை அறிவித்துள்ளது முதலாவது முஸ்லிம் அமைப்பு.

தமிழகத்தில் தற்போது இஸ்லாமியர்கள் சந்தித்து வரும் பிரச்சினைகள் ஏராளம்.

அதற்கு தீர்வு காண முஸ்லிம் அமைப்புகள் இடையே ஒற்றுமை இல்லை.

மார்க்க விஷயங்ககளில் சமுதாயம் பிரிந்து கிடக்கிறது.

சாதாரண முஸ்லிம் மக்கள் எந்த அமைப்பின் சொற்களை கேட்டு நடப்பது என தெரியாமல் விழி பிதுங்கி நிற்கின்றனர்.

மாற்று மத தோழர்களோ என்ன இஸ்லாமியர்கள் தங்களுக்குள் இப்படி சண்டையிட்டுக் கொள்கிறார்கள் என கேள்வி எழுப்புகிறார்கள்.

முஸ்லிம் விரோதிகளோ மனதில் சந்தோஷம் அடைகிறார்கள்.

இஸ்லாமிய அமைப்புகள் தங்களுக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளை மறந்து சண்டையிடுவதை உடனே நிறுத்த வேண்டும்.

இல்லையெனில் தமிழகத்தில் முஸ்லிம் சமுதாயம் உருப்பட வாய்ப்பே இல்லை.

முஸ்லிம்களின் நியாயமான கோரிக்கைகளை அரசும் கேட்காது.

பிற கட்சிகளும் முஸ்லிம்களுக்கு ஆதரவு கரம் நீட்ட முன்வராது.

ரங்கராஜ் பாண்டே போன்றவர்கள் இஸ்லாத்தின் நிலை முஸ்லிம்கள் இடையே நிலவும் பிளவு குறித்து கடுமையாக விமர்சனம் செய்வதை யாரும் தடுத்து நிறுத்த முடியாது.

எனவே முஸ்லிம் சமுதாயமே இனியாவது விழித்துக் கொண்டு ஒற்றுமை என்ற கயிற்றை பலமாக பிடித்துக் கொள்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்.

No comments: