திருக்குர்ஆன் காட்டும் ஒளி.....!
இந்தாண்டு புனித ரமலான் மாதத்தில், திருக்குர்ஆனின் தமிழாக்கத்தை முழுவதும் படிக்கக் கூடிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
அந்த நல்ல வாய்ப்பை ஏக இறைவன் எனக்கு வழங்கினான்.
அதற்கு இறைவனுக்கு என்னுடைய நன்றிகள் கோடி.
உலக புகழ் பெற்ற இஸ்லாமிய மார்க்க அறிஞர் மவுலானா மௌதூதி சாஹிப் அவர்கள் , உருது மொழியில் மொழியாக்கம் செய்த திருக்குர்ஆனை, சென்னை இஸ்லாமிய டிரஸ்ட் நிறுவனம் அழகிய தமிழில் மொழியாக்கம் செய்து வெளியிட்டது.
தமிழ் பேசும் மக்கள் அனைவரின் பாராட்டுதல்களையும், வரவேற்பையும் பெற்ற இந்த மொழியாக்கத்தைதான், இந்த ரமலானில் நான் படித்து (வாசித்து) முடித்தேன்.
திருக்குர்ஆனின் தமிழ் மொழியாக்கத்தை படிக்கும்போது, படித்தபோது, ஒன்று மட்டும் மிக தெளிவாக புரிகிறது. புரிந்தது.
அது,
மனிதன் தன் விருப்பப்படி கண்டமெனிக்கு எப்படியும் வாழ முடியாது.
அப்படி வாழலாம் என நினைப்பதும் நடக்காது. நிச்சயம் முடியாது.
ஒரு வரையறைக்குள்தான், ஒரு கட்டுப்பாட்டிற்குள்தான் மனிதனுடைய வாழ்வு இருக்க வேண்டும்.
அதன்மூலம் மட்டுமே, அவன் இருளில் இருந்து விலகி ஒளியின் பக்கம் நடைபோட முடியும்.
எப்படியும் வாழலாம் என நினைத்தால், மனிதனுக்கு அழிவு நிச்சயம்.
அவனுடைய அமைதி சீர்குலைந்து போகும்.
இம்மை (உலக) வாழ்வில் மட்டுமல்ல, மறுமை வாழ்விலும், மனிதன் தொல்லைகளுக்கு ஆளாக வேண்டி இருக்கும்.
சரி,
இறைவனின் கட்டளைகள் ஏற்று அதன்படி தம்முடைய வாழ்வை மிகச் சிறப்பாக அமைத்துக் கொண்டால், மனிதன் எப்படி இருப்பான்.
அவனுடைய வாழ்வில் நாள்தோறும் ஒளி வீசும்.
தனி மனித பண்புகள் வளரும்.
ஒழக்க மாண்புகள் மேலோங்கும்.
அனைத்து தரப்பு மக்களை மதிக்க மனம் விரும்பும்.
மனிதர்களை நேசிக்க ஆசை பிறக்கும்.
அண்டை வீட்டார், ஏழை எளிய மக்கள் என அனைவருக்கும் செய்ய வேண்டிய கடமைகள் நிறைவேற்ற வாய்ப்பு கிடைக்கும்.
அதன்மூலம் மனம் மகிழ்ச்சி அடையும்.
மனிதனுக்கு என்றென்றும் ஆனந்தம் கிடைக்கும்.
அவனுடைய வீட்டில் எப்போதும் மகிழ்ச்சி தாண்டவமாடும்.
பிறருடன் சண்டை சச்சரவுகள் இருக்காது.
வீண் பிரச்சினைகள் ஏற்படாது.
இதனால் சமூகத்தில் எப்போதும் ஓர் நல்லிணக்கம் இருக்கும்
இறை கட்டகளை மறுத்து, தன் போக்கில் வாழும் மனிதனுக்கு மேற்சொன்ன அனைத்தும் நிச்சயம் கிடைக்காது.
அதனால், அவன் வாழ்வு சூனியமாகிவிடும்.
அதனால், அமைதி இழந்து, கற்பனையான உலகத்தில் மனிதன் வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவான்.
போலி மகிழ்ச்சிதான் மனிதனுக்கு கிடைக்கும்.
பிறருடன் நல்ல இணக்கமான சூழல் மனிதனுக்கு கிடைக்காது.
இதனால் ஒவ்வொரு நாளும் பிரச்சினைகளைதான் மனிதன் சந்திக்க வேண்டி இருக்கும்.
அத்துடன், நல்ல அமைதியான ஆன்மிக வாழ்வு அவனுக்கு கிடைக்காது என்பதால், மனிதில் சைத்தான் குடி புகுந்து, நாள்தோறும் தொல்லை தருவான்.
இதைவிட மிகப் பெரிய கொடுமை மனிதனுக்கு வேறு என்ன வேண்டும்.
ஆக,
திருக்குர்ஆனை வாசிக்கும்போது, மனிதனின் அழகிய வாழ்விற்கு இறைவன் காட்டும் வழி என்ன என்பது நம் கண்முன் வந்து நிற்கிறது.
அதனை அழகிய முறையில் மனிதன் பின்பற்றி வாழ்ந்தால், அவனது வாழ்வு சுமையாக இல்லாமல் சுகமாக மாறும்.
இதுதான்,
திருக்குர்ஆனின் தமிழாக்கத்தை வாசிக்கும்போது, எனது சிறிய அறிவிற்கு கிடைத்த அற்புதமான படிப்பினை.
திருக்குர்ஆனை வாசிக்க, வாசிக்க நம் வாழ்வின் அனைத்து துறைகளிலும் எப்படி வாழ வேண்டும் என்ற நல்ல சிந்தனைகள் பிறந்துக் கொண்டே இருக்கும் என இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் கூறுகிறார்கள்.
அது உண்மைதான்.
ஒருமுறை வாசித்தபோதே, என் சிறிய அறிவுக்கு பல தகவல்களை இறைவன் ஏற்றினான் என்றால், மொழியாக்கத்தை விளக்க உரையுடன், வரலாற்று பின்னணிகளுடன் படித்தால், சொல்லவா வேண்டும், மனிதனுடைய வாழ்வு புனிதமாகும் என்பதை.
ஏன்,
நீங்களும் திருக்குர்ஆனின் அழகிய மொழியாக்கத்தை ஒருமுறை படித்துதான் பாருங்களேன்.
மனிதன் இருளில் இருந்த வெளிச்சத்தற்கு வர, ஒளியின் பக்கம் நடைபோட அதில் என்னதான் சொல்லப்பட்டு இருக்கிறது என்பதை அறியும் நல்ல வாய்ப்பு உங்களுக்கும் கிடைக்கும் அல்லவா.
இந்த ரமலானில் திருக்குர்ஆனின் அழகிய மொழியாக்கத்தை படிக்கக் கூடிய வாய்ப்பை நல்கிய ஏக இறைவனுக்கு மீண்டும் என்னுடைய நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இருளில் இருந்து ஒளியின் பக்கம் நானும் நடைபோட, இனி வரும் நாட்களில் இறைவன் எனக்கு நல்வழி காட்ட வேண்டும்.
அதன்மூலம், என்னுடைய வாழ்வை தூய்மை நிறைந்த வாழ்வாக நான் மாற்றிக் கொள்ள வேண்டும்.
இதுவே, என்னுடைய இந்த ரமலான் மாத பிரார்த்தனை.
எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்.