Monday, September 11, 2023

சென்னையில் நான்...(13)....!

சென்னைக்கு அழகு சேர்க்கும் பள்ளிவாசல்கள்....!

ஆம். 

இது உண்மைதான்.

சென்னை மாநகரில், என்னுடைய கண்கள் அதிகமாக தேடுவது பள்ளிவாசல்களைதான். 

சென்னையில் கிட்டதட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள் இருக்கும் என நினைக்கிறேன். 

மனிதனை புனிதனாக மாற்ற வழிவகை செய்யும் இத்தகைய, பள்ளிவாசல்களுக்கு சென்று  தொழுவது, மனதிற்கு அமைதியை, பெரும் நிம்மதியை தரும்.

சென்னையில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களுக்கும் சென்று தொழு வேண்டும் என்ற ஆசை எனக்கு நீண்ட நாட்களாகவே உண்டு.

ஆனால், பணிச்சுமை, நேரம் உள்ளிட்ட பல காரணங்களால் என்னால் அது முடிவதில்லை.

எனவே, நான் தங்கியிருக்கும் திருவல்லிக்கேணி பகுதியில் இருக்கும் பல பள்ளிவாசல்களுக்கு அடிக்கடி, சென்று தொழுகையில் கலந்து கொண்டு வருகிறேன். 

குறிப்பாக, 

திருவல்லிக்கேணி வாலாஜா பெரிய பள்ளிவாசல்

ஐஸ் ஹவுஸ் பள்ளிவாசல்

சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே இருக்கும் மஸ்ஜித்தே குத்தூஸியா பள்ளிவாசல்,

கோஷா மருத்துவமனை அருகே இருக்கும் பள்ளிவாசல்,

ரத்னா கேப் அருகே இருக்கும் பழைய பள்ளிவாசல்,

ஜாம்பஜார் பகுதியில் இருக்கும் பள்ளிவாசல்

என திருவல்லிக்கேணி பகுதியில் இருக்கும் பல பள்ளிவாசல்களுக்கு சென்று தொழுகையில் கலந்து கொள்ளும்போது, எனக்கு மனதில் அமைதி கிடைக்கும். 

தொழுகை முடித்து விட்டு, பள்ளிவாசலில் தனியாக அமர்ந்து இறைவனிடம் நேரில் பேசும்போது, பல பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். 

எனவே, சென்னையில் உள்ள பள்ளிவாசல்களை எப்போதும் என்னுடைய கண்கள் தேடிக் கொண்டே இருக்கும். 

சன் தொலைக்காட்சியில் பணிபுரிந்தபோது, (அண்ணா அறிவாலயத்தில் சன் டி.வி. அலுவலகம் இருந்த நேரம்) தி.நகர் பகுதியில் இருக்கும் அஞ்சுமன் பள்ளிவாசலுக்கு அடிக்கடி சென்று தொழுகையில் கலந்து கொண்டது உண்டு. 

அமைதியான, இயற்கையான சூழலில், அந்த பள்ளிவாசலில் தொழுவது தனிச்சுகம்தான். 

குறிப்பாக, வெள்ளிக்கிழமையன்று, அந்த பள்ளிவாசலில் மவுலவி அவர்கள் எளிமையான உர்தூ மொழியில் செய்யும் பயான் (பிரச்சாரம்) உள்ளத்தில் அழமாக பதிந்து விடும். 

குறிப்பிட்ட ஒரு தலைப்பை மட்டுமே கையில் எடுத்துக் கொண்டு, திருக்குர்ஆனின் வசனங்களை மேற்கோள் காட்டி, நபி மொழிகளை கூறி, எளிமையான வார்த்தைகள், எளிமையான நடையில் மவுலவி அவர்கள், செய்யும் இந்த பயானை கேட்டுக் கொண்டே இருக்கலாம்...

எனவே, அஞ்சுமன் பள்ளிவாசலுக்கு செல்வதில் ஆர்வம் பிறக்கும்.

இப்போதும் நேரம் கிடைக்கும்போது, அஞ்சமன் பள்ளிவாசலுக்கு சென்று வருவது உண்டு.

இதேபோன்று, சென்னை அண்ணாசாலை பகுதியில் இருக்கும் மக்கா பள்ளிவாசலை குறிப்பிடலாம்..

சென்னை, மண்ணடி பகுதியில் இருக்கும் பல பள்ளிவாசல்களில் தொழுத அனுபவம் எனக்கு உண்டு.

பெரம்பூர் ஜமாலியா பள்ளிவாசல்...

என பள்ளிவாசல்களின் பட்டியல் நீளுகிறது...

சென்னையில் உள்ள  பல பள்ளிவாசல்களில் தொழுவதுடன், அந்த பள்ளிவாசல்களின் கட்டிட அழகை கண்டு ரசித்து வியப்பது உண்டு. 

பல ஆண்டுகள் புகழுடன் விளங்கி வரும் சித்திக்சராய் பள்ளிவாசலின் கட்டிட அழகு என்னை மிகவும் கவரும்.

இதேபோன்று, பெரியமேட் பகுதியில் இருக்கும் பிரம்மாண்ட பள்ளிவாசலின் அழகை பார்த்துக் கொண்டே இருக்கலாம்...

இங்கெல்லாம் தொழும்போது, உள்ளத்தில் இயற்கையாகவே உற்சாகம் பிறந்துவிடும்.

தேனாம்பேட்டை பள்ளிவாசல்,

அசோக்நகர் பள்ளிவாசல்,

கோடம்பாக்கம் பள்ளிவாசல்

என பல பள்ளிவாசல்களை சொல்லிக் கொண்டே போகலாம்...

இங்கு நான் குறிப்பிட்டது ஒருசில பள்ளிவாசல்கள் மட்டும்தான்...

சென்னையின் அழகு மேலும் கூடுவதற்கு, இங்குள்ள நூற்றுக்கணக்கான பள்ளிவாசல்கள் முக்கிய காரணமாக இருக்கின்றன.

வெளிமாநிலங்களில் இருந்து வரும் முஸ்லிம்கள் மட்டுமல்லாமல், மாற்று மத சகோதரர்களும்  சென்னையில் உள்ள அழகான பள்ளிவாசல்களை கண்டு வியப்பு அடைவது உண்டு...

மனம் அமைதி கொள்வது உண்டு...

எனக்கு மன நிம்மதியை கொடுக்கும் சென்னையில் உள்ள ஆயிரக்கணக்கான  பள்ளிவாசல்களை, என் கண்கள் தேடிக் கொண்டே இருக்கும்...

சென்னையில் நான் இருக்கும் வரை...

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: